ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

தமிழ்ப்புத்தாண்டு குழப்பங்கள்

இது வரையில் ஏப்ரல் 14 – ம் தேதி தமிழ்ப் புத்தாண்டாக இருந்தது.  இந்த ஆண்டு முதல் பொங்கல் திருநாள்  தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.   இது அரசாங்கத்தின் ஆணை.  இவ்வாறு அரசு புதிய ஆணை விடுத்ததற்கான காரணங்களைப் பார்ப்போம்.

சுமார் 75  ஆண்டுகளுக்கு முன்பு  மறைமலை அடிகளார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் பச்சையப்பன் கல்லூரியில் ஒன்று கூடி  தமிழுக்கென்று தனித் தமிழ்புத்தாண்டு வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.  தற்போது பழக்கத்திலுள்ள பிரபவ, விபவ என்று தொடங்கும் தமிழ் ஆண்டுகள் ஜோதிடர்களால் நிர்ணயம் செய்யப்படுகின்ற ஆண்டுகள். தவிரவும் அவை வட மொழிப் பெயர்கள்.  தமிழ்ப் பெயர்கள் அல்ல; அவைகளுக்குத் தொடர்ச்சியாக எண்கள் கிடையாது. இவ்வாறாகப் பல காரணங்களால் தனித் தமிழ்ப் புத்தாண்டு வேண்டுமென்று முடிவு செய்து பொங்கல் திருநாளான  தை முதல் நாளன்று திருவள்ளுவர் பிறந்தார் என்று கணக்கிட்டு  அன்று புத்தாண்டு கொண்டாடுவது என்று முடிவு செய்தார்கள்.  திருவள்ளுவர் ஏசு கிறிஸ்துவுக்கு சுமார் 35 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்று கணக்கிடப்பட்டு அந்த ஆண்டு முதல்  தொடர்ச்சியாக ஆண்டுகளுக்கு எண்கள் கொடுக்கப்பட்டு ஆண்டு எண்ணைக் குறிக்கிறார்கள்.  இத்தகைய 75 ஆண்டுகால
முடிவுக்குத்தான் தற்போதுள்ள அரசு  செயல் வடிவம்  ஆணையாகக் கொடுத்துள்ளது. இந்தத் தமிழ்ப் புத்தாண்டுக்கு மாதங்கள் என்று உட்பிரிவு எதுவும் கிடையாது.

ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படும் தமிழ்ப் புத்தாண்டை ஜோதிடர்கள் கூறும் புத்தாண்டு என்று கூறிய தமிழ் அறிஞர்கள் ஒன்றை கருத்தில் கொள்ளவில்லை.   பொங்கல் திருநாளும் ஜோதிடர்கள் கணக்குப்படியே கொண்டாடப்படுகிறது.  சூரியன் மகரத்திற்கு வரும் முதல் நாளே பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.  மகரத்திற்கு என்று வருகிறது என்பதை ஜோதிடர்கள்தான் தீர்மானிக்கின்றனர். சில ஆண்டுகளில் ஜனவரி 13 ம் தேதியும், சில ஆண்டுகளில் ஜனவரி 14 ம் தேதியும், சில ஆண்டுகளில் ஜனவரி 15 ம் தேதியும் வருகிறது.  ஓரே நாளில் நிரந்தரமாக வருவது இல்லை.  டிசம்பர் 25 ம்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை. இதிலே எந்த மாற்றமும் இல்லை.  ஆனால் பொங்கல் பண்டிகை அப்படி அல்ல. ஜோதிடர்கள் என்று மகரராசியில் சூரியன் பிரவேசிக்கிறது என்று கூறுகிறார்களோ அன்றுதான் பொங்கல் பண்டிகை. ஆக தற்போது அரசு அறிவித்துள்ள புத்தாண்டும் ஜோதிடர்களின் கணிதத்திற்குள்தான் அமைகிறது.

ஹிந்து சித்தாந்தத்தின்படி ஓர் தமிழ் ஆண்டு என்பது சூரியன் அஸ்வினி நட்சத்திரத்தில் பிரவேசம் செய்யும் போது ஆரம்பித்து, ரேவதி 4 ம் பாதத்தை விட்டுச் செல்லும்போது உண்டான இடைப்பட்ட காலமேயாகும். இதை ஒர் சூரிய ஆண்டு என்றும் குறிப்பிட லாம்.  ஏனெனில் சூரியனின் வான மண்டலத்தை இந்தக் காலத்தில்தான் ஒருமுறை சுற்றி வருகிறது.

இந்தக் கணித முறையை வானவியல் அறிஞர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இது தவறான கணித முறை என்றுதான் கூறுகின்றனர்.   அவர்கள் கணிதப்படி ஒர் சூரிய ஆண்டு என்பது  மார்ச் 21 ம் தேதி ஆரம்பித்து அடுத்த ஆண்டு  மார்ச் 20 ம் தேதி வரையில் உண்டான இடைப்பட்டகாலமேயாகும்.  மார்ச் 21 ம் தேதிதான் சூரியன் Vernal Equinox என்ற இடத்திற்கு வருகிறார்.  அப்போது பகல் பொழுதின் அளவும், இரவு நேரத்தின் அளவும் சரிசமமாக இருக்கும்.  இதை நாம் பஞ்சாங்கத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.  அதில் “அகஸ்” என்ற கட்டத்தின் கீழ் 30 நாழிகை எனப் போட்டு இருப்பார்கள். அகஸ் என்றால் பகல் பொழுதின் அளவு எனப் பெயர். பகல் பொழுது 30 நாழிகை என்றால் இரவுப் பொழுது 30 நாழிகை தானே.  ஆக அவர்களுக்கு ஒரு சூரிய ஆண்டு என்பது மார்ச் 21 ம் தேதிதான் ஆரம்பமாகிறது. இந்த ஆண்டு முறையைத்தான் மேல் நாட்டவர் தங்கள் பருவகாலத்தைக் கணிப்பதற்கு உபயோகப் படுத்துகின்றனர். 

அவர்கள் பருவகாலத்தை எப்படிக் கணக்கிடுகிறார்கள் என்பதைப் பார்ப்போம். .

Vernal Equinox  –  March, 21st  – Beginning of the Spring Season every year. (மேஷத்தில் சூரியன் பிரவேசிக்குக் காலம்)

Autumnal Equinox –  23rd September – அன்றும் பகல் பொழுதின் அளவும் இரவின் அளவும் சரிசமமாக இருக்கும் ( செப்டம்பர் 23 ம் தேதி சூரியன் துலாத்தில் பிரவேசிக்கும் காலம்)

Summer Solstice –  ஜூன் 22 ம் தேதி.  அவர்களின் வேனிற்காலம் ஆரம்பிக்கும் காலம். (கடகத்தில் சூரியன் பிரவேசிக்கும் காலம்)

Winter Solstice –   டிசம்பர் 22 ம் தேதி  அவர்களின் குளிர்காலம். (மகரத்தில் சூரியன் பிரவேசிக்கும் காலம்).

வானவியலின்படி வான மண்டலத்தின் ஆரம்ப இடமான மேஷத்தின் ஆரம்ப முனை பின் நோக்கிச் செல்கிறது.  இதை நமது ஜோதிட கிரந்தங்களும் ஒப்புக் கொள்கின்றன. ஆனால் நமது ஹிந்து சிந்தாந்ததின்படி வான மண்டலத்தின் ஆரம்ப இடம் அஸ்வனி நட்சத்திரத்தின் ஆரம்ப இடம்.  இது பின் நோக்கி நகருவதில்லை.  இது நிலையானது. வானவியல்படி வான மண்டலம் நகரக்கூடியது. இதைத்தான் மேல் நாட்டவர்கள் தங்கள் ஜோதிடத்திற்குப் பயன் படுத்துகின்றனர்.

இதையெல்லாம் நாம் எதற்கு இங்கு எழுதுகிறோமென்றால் அரசு அறிவித்துள்ள புத்தாண்டும் ஹிந்து சித்தாந்தத்திற்கு உட்பட்டதே.  வானவியல் அடிப்படையில் தமிழ்ப் புத்தாண்டு அறிவிக்கப்படவில்லை என்பதுதான்.

சிலர் பிறந்த நாள் கொண்டாடுவர். ஆங்கிலத் தேதியை அனுசரித்துக் கொண்டாடுவர். பின்பு நட்சத்திரத்தின்படி கொண்டாடுவர்.  ஆக இரண்டு பிறந்த நாள் விழா கொண்டாடுவர். அதைப்போல் நாம் புத்தாண்டை பொங்கல் அன்றும் கொண்டாடலாம்.  அதாவது அரசு அறிவித்துள்ள பண்டிகையாகக் கொண்டாடலாம்.  பின்பு ஹிந்து சிந்தாந்ததின்படி ஏப்ரல் மாதத்திலும் கொண்டாடலாம்.  நமது தமிழ்த் தாய்க்கு இரண்டு நாள் கொண்டாடுவதில் மகிழ்ச்சிதானே!  ஆனால் ஹிந்துக்களின் பண்டிகையாக ஏப்ரல் மாதத்தில் மட்டுமே கொண்டாட முடியும்.

தொடர்புடைய படைப்புகள் :

Comments

2 Responses to “தமிழ்ப்புத்தாண்டு குழப்பங்கள்”
 1. OVIYA says:

  வணக்கம்
  உங்கள் விவாதப் பொருள் தமிழ் புத்தாண்டு பிறப்பை பற்றிய ஒரு நல்ல ஆய்வு தான்,
  தமிழ் புத்தாண்டு கருத்தாய்வில் கலைஞர் என்ற மனிதரின் எண்ணங்களை அல்லது கலைஞரை குறிப்பிடுவதை தவிர்க்கவும், இனபடு கொலைக்கு சூத்திரதாரியாக பங்க்கேடுத்தவனை எந்த ஒரு கருத்து விவாதத்திலும் எடுத்து கொள்ள கூடாது, கொலை குற்ற விசாரணையில் மட்டுமே சேர்த்து கொள்ளப்படவேண்டிய பெயர் . நபர் அவர், கலைஞர் அன்று இன்று இவன் ஒரு கொலஞன் காலம் நிருபிக்கும் எனவே இந்த நபரை குறிப்பிடாது கருத்துகளை தொடர்வோம்,
  ஓவியா

 2. இராமநாதன் says:

  //சூரியன் மகரத்திற்கு வரும் முதல் நாளே பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது//

  தை முதல் நாள் தான் பொங்கல். தைப்பொங்கல் நாளையே தமிழ்ப்புத்தாண்டாகக் கருத தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தை என்று பிறக்கிறது என்பதை சோதிடர்கள் கணிப்பதில்லை என நினைக்கிறேன். தவறென்றால் எவரேனும் என்னைத் திருத்தவும்.

  இது தவறாகவே இருப்பினும், தை மாதப்பிறப்புக்கு இக்கட்டுரையில் விளக்கப்பட்டதுபோல் பொருள் பதிந்துள்ளது. இன்னும் ஏன் சித்திரை முதல் தேதியை பற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்று புரியவில்லை.

  பின் குறிப்பு: நான் பார்த்தவரை கலைஞரைப் பிடிக்காதவர்களும், இந்து மதத்தில் அதிக பிடிப்பு உள்ளவர்கள் சித்திரையை ஆதரிக்கின்றனர். தமிழ் உணர்வாளர்கள் (கலைஞரைப் பிடிக்காதவர்களும் கூட‍!) தை முதற்தேதியை ஆதரிக்கின்றனர்.

மனசுல பட்டதை சொல்லுங்க

கடைசியாக : January 3, 2010 @ 8:49 am