ரஜினியா ? அமிதாப்பா ?

ஆரம்பித்துவிட்டார்கள். சன் டிவிக்கு எதுவும் மிச்சம் மீதி வைக்கமாட்டார்கள் போல் தெரிகிறது. எல்லோரையும் ஹெட்லைன்ஸ் டுடே முந்திக்கொண்டுவிட்டது.   யார் மெய்யாலுமே பாஸ் என்பதில் ஆரம்பித்து வேலைக்காரனுக்கும் நமக்லாலுக்கும் உள்ள எட்டு வித்தியாசம் வரை சகலத்தையும் விவரிக்கிறார்கள். பிளாக்கையும் தப்புத்தாளங்களையும் ஒப்பிடுகிறார்கள். பாட்ஷா 1992ல் வெளியானது என்றெல்லாம் தப்புத்தப்பாக அடுக்கினாலும் கிளிப்பிஸை வைத்து சமாளிக்கிறார்கள்.  அரசியலுக்கு வந்தபின்னர் வேண்டாமென்றாராம் அமிதாப்; வருவதற்கு முன்னரே வேண்டாமென்றாராம் ரஜினி. முடிவே பண்ணிட்டாங்கப்பா!

பேக் வாட்டரில் படகு முன்னேறிச் செல்கிறது. கரையோரமாய் காத்திருக்கும் மக்கள் உற்சாகப்படுத்துகிறார்கள்.  சுதந்திர தின அணிவகுப்பில் லெப்ட் ரைட் போடும் ராணுவ வீரருக்கு இணையான நேர்த்தியோடு மொத்த டீமும் துடுப்பைப் போட்டு தள்ளுகிறார்கள்.  செம டைமிங்.  ஒணத்தை முன்னிட்டு நடைபெறும் படகுப்போட்டியை அரை டஜன் மலையாள சேனல்களும் மறந்து போய் மோகன்லால், மம்முட்டியோடு மசாலா அரைக்கும்போது தூர்தர்ஷன் மட்டும் இன்னும் வித்தியாசமாய் இருககிறது. ஒரு மணி நேர லைவ், லயிக்க வைத்தது.  நல்ல டீம் வொர்க்! 

நாங்கள் கல்யாணமே செய்து கொள்ளப்போவதில்லை என்று பிரஸ் மீட் வைத்து கத்தினால் கூட சளைக்காமல் அடுத்த கேள்வி கேட்பார்கள் போலிருக்கிறது. இரண்டுபேருககும் சண்டை, நடுராத்திரியில் நடுரோட்டில் சந்தித்து சமாதானம் என்று நாளொரு கிசுகிசுவும் பொழுதொரு மைக்குமாக இந்தி சேனல்களுக்குள் ஏகப்பட்ட போட்டி.  கல்யாணம் பற்றி சல்மான் எங்கேயோ, என்னவோ முனகியதை அடிக்கடி ரீப்பீட் செய்து, அதற்கான அர்த்தத்தை படம்போட்டு பாகம் குறித்து காண்பித்தார்கள். கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு வருஷம் இருக்கிறது என்கிறார் இந்தியாவின் கேட் வின்ஸ்லெட். சல்மானும் கல்யாணத்துககு இப்போ என்ன அவசரம் என்கிறார் சாவகாசமாக. ஒருவேளை ஸ்ட்ரெயிட்டாக அறுபதாம் கல்யாணம் செய்துகொள்வாரோ என்னவோ? 

நாகார்ஜீனுக்கு பிறந்தநாளாம்.  தெலுங்கு சானல்களெல்லாம் கொண்டாடித் தீர்த்துவிட்டன. மனுஷனுக்கு வயது ஐம்பதை தாண்டிவிட்டதாம். நம்பவே முடியவில்லை! ஐந்து வருஷமாக ஹிட்டடிக்கவில்லை. அதனாலென்ன பரவாயில்லை. பத்து வருஷமாக ஹிட்டடிக்காத அஜீத்குமாரே இன்னும் இருக்காரே!  நடிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தமிழ்நாட்டில்தான் கம்மி.  டெலிவுட்டின் அனைத்து முன்னணி கதாநாயகிகளுடன் நாகார்ஜீன் ஆடும் ஓம் ஷாந்தி ஓம் ஸ்டைல் பாட்டை எல்லா தெலுங்கு சேனல்களும் ஒளிபரப்பினார்கள்.  ஷாரூக்கை விட நாகார்ஜீனில் ஆட்டம் பெட்டர்தான். பிடிக்காவிட்டாலும் பிரச்னையில்லை. ஆடியவர்களில் எத்தனை பேர் தேஜா தம்பிகளுக்கு நெருக்கம் என்று கணக்கெடுக்கலாம்.

 

 

தமிழ் சினிமாவின் டாப் 100 காமெடி காட்சிகளில் இதுவும் ஒன்று.  சிம்பிளான டயலாக். நடிப்பவர்களிடையே டைமிங் மட்டும் சரியாக இருந்தால் போதும். காட்சியை எங்கேயோ கொண்டுபோய்விடும்.  இதே படத்தை தெலுங்கிலும் பின்னர் இந்தியிலும் மொழிபெயர்த்தபோது எப்படி சமாளித்திருப்பார்கள் என்பதுதான் மண்டையைக் குடையும் கேள்வி. ஆங்கில சப்டைட்டிலோடு வந்த ஒரு சிடி கையில் சிக்கியபோது அலசிப்பார்த்தும் ஏமாற்றமே மிச்சம். சம்பந்தப்பட்ட வரிகளை மொழிபெயர்க்காமல் நழுவியிருந்தார்கள். உங்களால் முடியுமா?  கடைசி வரியை ஏதாவது ஒரு மொழியில் சரியாக மொழிபெயர்த்து மெயிலில் அனுப்பி வைப்பவர்களுக்கு கைநிறைய பரிசு காத்திருக்கிறது!

‘மம்மி இல்லை.. ஆண்ட்டி!’

‘சரி ஆண்ட்டி… அப்படியே டீயில கொஞ்சம் சுக்கு தட்டிப்போட்டு எடுத்துட்டு வாங்க’

‘ஆமா.. கூடவே குங்குமப்பூவையும் கொஞ்சம் தூவி எடுத்துட்டு வா.’

‘அடேங்கப்பா..  என்ன குலுக்கு, என்ன தளுக்கு!’

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “ரஜினியா ? அமிதாப்பா ?

  • August 30, 2010 at 12:14 am
    Permalink

    ரஜினிதான் சூப்பர் ஸ்டார் என்று அவர்கள் சொன்னதை நீங்கள் மறைப்பது பண்பல்ல.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 29, 2010 @ 3:22 pm