ஜோதிடத்தில் "காரகோ பாவனாசாய" என்னும் கருத்து நிலவுகிறது. என்னவென்றால் ஒவ்வொரு கிரகமும் எவைகளுக்கெல்லாம் காரகத்துவம் வகிக்கின்றதோ, அந்தந்தக் காரகங்களைக் குறிக்கும் வீட்டில் இருந்தால் அந்தக் காரகத்துவம் சரியாக இருக்காது. ஏதோ விடுகதை போடுவதைப் போல் இருக்கிருக்கிறது அல்லவா? இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதுவோம்.
உதாரணமாக சூரியன் தந்தைக்குக் காரகனாகின்றார். தந்தையைக் குறிக்கும் வீடு ஒன்பதாம் வீடு ஆகும். தந்தையைக் குறிக்கின்ற சூரியன் தந்தைக்குக் காரகமாய் இருக்கின்ற ஒன்பதாம் வீட்டில் இருந்தால் தந்தைக்கு ஆகாது. இது தந்தைக்கு கண்டத்தைக் கொடுக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
அதேபோல் தாயாருக்குக் காரகம் வகிக்கின்ற சந்திரன் 4-ம் இடமான தாயார் ஸ்தானத்தில் இருந்தால் அது தாயாருக்குக் கண்டம். அதாவது இளம்வயதிலேயே தாயாரை இழக்க வேண்டியது இருக்கும்.
குரு புத்திர காரகன்; தன காரகன்; புத்திரத்தைக் குறிக்கும் 5-ம் வீட்டில் குரு இருந்தால் புத்திர நாசம் உண்டாகும். தனத்தைக் குறிக்கின்ற 2-ம் வீட்டில் குரு இருந்தால் அவருக்கு பணக் கஷ்டம் உண்டாகும்.
புதன் வித்யாகாரகன். 4-ம் இடமான வித்யா ஸ்தானத்தில் புதன் இருந்தால் அவருக்குக் கல்வி தடைப்படும்
செவ்வாய் பூமி காரகன். 4-ம் இடம் ஸ்திர சொத்துக்களைக் குறிக்கிறது. 4-ல் செவ்வாய் இருந்தால் அவருக்கு ஸ்திர சொத்துக்கள் நிலைக்காது.
சுக்கிரன் களத்திர காரகன். களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் இருந்தால் அது களத்திர தோஷமாகும்.
இவ்வாறான கருத்து ஜோதிட உலகில் நிலவுகிறது. ஆனால் அனுபவ பூர்வமாகப் பர்க்கும்போது இது தவறான கருத்தாகவே காணப்படுகிறது.
4-ம் வீட்டில் சந்திரன் இருந்து, அத்துடன் கொடிய பாவிகளான் சனி, செவ்வாய் ஆகியோர் இருந்தும் கூட சுமார் 60 வயதாகும் ஒருவருக்கு இன்னும் தாயார் இருக்கின்றார். அதுவும் இன்னும் ஆரோக்கியத்துடன் இருக்கின்றார்.
ஒருவருக்கு 2-ல் குரு; அவருக்கு அதிகம் படிப்பும் கிடையாது. சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த அவர் மிக வசதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். வீட்டில் இரண்டு அல்லது மூன்று கார்கள்.
அதேபோல் 4-ல் புதனுள்ளவர்கள் படிப்பில் நல்ல தேர்ச்சி பெற்று Phd - வரையில் படித்தவர்களின் ஜாதகங்களையும் பார்த்து இருக்கின்றேன்.
5-ல் குரு உள்ளவர்களுக்கு நிறையவே குழந்தை பாக்கியம் இருப்பதையும் அனுபவபூர்வமாகப் பார்க்க முடிகிறது.
இதையெல்லாம் எதற்காக எழுதுகிறேன் என்றால் இந்த "காரகோ பாவனா சாய" என்ற விதியை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாமென்பதற்காகத்தான்.
'பெண்மூலம் நிர்மூலம்", "கேட்டை நட்சத்திரம் ஜேஷ்டனுக்காகாது", விசாகம் இளய மைத்துனருக்காகாது" என்பனவற்றில் எப்படி உண்மை இல்லையோ அதைப்போல் இந்தக் கூற்றிலும் உண்மையில்லை என்பது நம் அனுபவம் தந்த பாடம்.
மறுபடியும் பின்பு சந்திப்போம்.
|