பேரழிவு ஆயுதங்களின் தேடலுக்காகவும் சர்வாதிகாரி சத்தாமின் ஆட்சிக்கு முடிவுகட்டவும் அமேரிக்க நேசநாடுகளின் அத்துமீறிய பிரவேசம்.
மாபெரும் ஆயுதங்களை முதுகுக்குப் பின் வைத்துக் கொண்டிருப்பவர்கள் அங்குல அங்குலமாய் துருவித் துருவி ஆராய்ந்ததில் துண்டு பிளேடு கூட கிடைக்கவில்லை யென்று இன்று சொல்கிறார்கள்!
பெரும் புதைகுழிகளின் தேடலில் நாளும் தோண்டப்படுகின்றன நூற்றுக் கணக்கில் புதைகுழிகள் இறந்தவர்களையும் இருப்பவர்களையும் புதைப்பதற்காக!
ஆக்கிரமிப்பாளர்களை விரட்டுவதற்காக சொந்த இனத்தவரையே கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள் இன மான ஈராக்கியர்!
சத்தாமின் ஆட்சியில் நூற்றுக் கணக்கில் இறந்தவர்களுக்கு நீதி வழங்க இலட்சக் கணக்கில் கொன்று குவித்து நியாயம் வழங்கிக் கொண்டிருக்கிறது அமேரிக்க ஏகாதிபத்தியம்!
சர்வாதிகாரி சத்தாமுடன் தூக்கிலிடப்பட்டு விட்டன ஈராக்கின் விடுதலை இறையாண்மை நீதி நேர்மை அடிப்படை உரிமைகள் எல்லாமே!
ஜனநாயகம் நிர்மாணிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது இலட்சக் கணக்கான கல்லறைகளின் மேல்! இப்பணி என்று முடியுமோ? ஆவலில் உலக நாடுகள்!
கொடுங்கோல் ஆட்சியை அகற்றாகிவிட்டது புதிய ஆட்சி மலர்ந்துவிட்டது! வளமும் வசதிகளும் பெருகிவிட்டன! மகிழ்ச்சிக் கடலில் மக்கள்! அமெரிக்காவில்.
புதிய ஈராக்! உருவாகிக் கொண்டிருக்கிறது... ஈராக்கியரின் கண்ணீரில்.
|