ஜனவரி 05 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறுகதை : இன்பவல்லி நீ எனக்கு...!
- ஆல்பர்ட் [albertgi@gmail.com]
| Printable version | URL |

                                                                     
இருட்டு வெளிச்சத்துக்கு விடை தந்திருந்தது. விண்ணும் மண்ணும் இருள் கவிந்திருக்க ராஜமாளிகையிலிருந்து இரண்டு உருவங்கள் வெளிவந்ததது.  தட்டுத் தடுமாற்றம் இல்லாமல் நடந்து தென்வடலாக நீண்டு இருந்த ஆழி மண்டபத்துக்குள் நுழைந்ததும் கதவு ஓசையின்றி மூடிக்கொண்டது. கிசுகிசுத்த குரலில் இரண்டு உருவங்களும் எதைப் பற்றியோ விவாதித்து சட்டென ஒரு முடிவுக்கு வந்ததும் பின்னர் ஒரு உருவம் கொல்லைப் புற வழியாக வெளியேறி மரத்தடியில் கட்டப்பட்டிருந்த புரவியை நோக்கிச் சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் புரவி புழுதியைக் கிளப்பிக்  கொண்டு பறந்தது. இதை ஆரம்பத்திலிருந்து ஒன்றுவிடாமல் கவனித்த மூன்றாவது உருவம்  நிம்மதிப் பெருமூச்சு விட்டு ராஜமாளிகைக்குள் நழுவியது. அப்போது...

முரட்டுக் கரம் ஒன்று அந்த உருவத்தின் தோள்பட்டையை இறுகப் பற்றி நிறுத்தி, யார் ? என வினவவும் செய்தது.

"சாரங்கன்" என்று ஒற்றை வரிப்பதில் ஒன்று உதிர்ந்தது.

" ஓ! மெய்காப்பாளரா? என்ற குரலில் சற்றே ஏளனம் கலந்திருந்தது. சாரங்கனின் மெளனத்தை தொடர்ந்து, இருட்டில் காற்றாடச் சென்று வருகிறீரோ என்ற வினாவிற்கும்

"ஆம்" என்ற ஒற்றைச் சொல்லையே பதிலாகத் தந்தான் சாரங்கன்.

"அரசனிடம் மெய்க்காப்பாளனாக இருப்பதை விட ஒற்றர் படைத் தலைவராக உம்மிடம் ஏராள தகுதிகள் உள்ளது" என்று சொல்லி சேனாதிபதி சேரலாதன் சிரித்தான்.

"இளவரசனை அழைத்து வந்து விட்டீர்களா?" என்று சாரங்கன் கேட்ட தொனி அனாவசியப் பேச்சுக்குச் செல்ல விரும்பாததை குறிப்பால் உணர்த்தியது போலிருந்தது.

"நானும் புலி குத்தி, நீலிமலை எல்லாம் சென்று, சுற்றி அலைந்து திரிந்து சல்லடை போட்டுப் பார்த்துவிட்டேன். இளவரசர் அந்தப் பக்கம் வேட்டைக்குச் சென்றதற்கான அறிகுறியே இல்லை. நானும் மற்றவர்களும் இப்போதுதான் திரும்பினோம்."

"மன்னர் இன்னும் நினைவு திரும்பாத நிலையிலேயே இருக்கிறார். இப்போது என்ன செய்வது?"

"அரண்மணை வைத்தியர் என்ன சொல்கிறார்?"

"இருபது நாழிகை கழிந்த பின் தான் எதையும் சொல்லமுடியும் என்கிறார்."

"மன்னருக்கருகில் யார் இருக்கிறார்கள்?"

Inbavalli"இளவரசி இன்பவல்லி இருக்கிறார்." - இருவரும் பேசிக்கொண்டே வந்ததில் மன்னர் மகேந்திர பூபதி படுத்திருந்த அறை முன் வந்து விட்டிருந்தனர். வழக்கமாக இரண்டு காவலாளிகள் இருக்குமிடத்தில் இருபதுக்கும் மேற்பட்ட ஆயுதந்தாங்கிய காவலாளிகள் ஓசையின்றி குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தனர். மெய்க்காப்பாளரையும் சேனாதிபதியையும் வாயிலிலிருந்த காவலாளி சிரம் தாழ்த்தி வணங்கி, இளவரசியார் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள் என்றான். எங்களைச் சொல்லியிருக்க மாட்டார் என்று உள்ளே நுழைய சேனாதிபதி முற்பட்டபோது, "சற்றுப் பொறுங்கள் சேனாதிபதி " என்று சொல்லிய சாரங்கன் நாங்கள் இருவரும் வந்து காத்து இருப்பதாக இளவரசியாரிடம் போய்ச் சொல், என்றார் வாயிற் காப்போனை நோக்கி. சேனாதிபதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

"மெய்க்காப்பாளரை மட்டும் இளவரசியார் வரச் சொல்லுகிறார்கள்" என்றான், உள்ளே சென்று திரும்பிய வாயிற்காப்போன்.

" மன்னிக்கவும் சேனாதிபதி அவர்களே இதோ வந்து விடுகிறேன் " என்று சாரங்கன் உள்ளே நுழைந்து மறைந்தான். சேனாதிபதி பற்களை நறநறவென கடித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு வேகமாக வெளியேறி, ராஜமாளிகையின் வெளி வாயிலுக்கு வந்தான்.

அதே நேரத்தில் சேனாதிபதியின் வலதுகரமான வீனசேணன் வேர்க்க விறுவிறுக்க வந்து கொண்டிருந்தான். வந்தவன், பதற்றத்தோடு சேனாதிபதியின் காதில் கிசுகிசுத்தான். சேனாதிபதி மிகுந்த கலவரத்தோடு, வீனசேணனோடு கிளம்பினான்.  அவர்கள் அறியாமல் இரு விழிகள் பின் தொடர்ந்தது. அமைதியான அந்த மூன்றாம் ஜாம வேளையில் ராஜமாளிகை பலவிதமான குழப்பங்களிலும், சதிவலைப் பின்னல்களிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது.

விடிவதற்கு ஒரு நாழிகை இருக்கும்போது ராஜமாளிகையைச் சுற்றி அகழி போல குதிரைப் படை வீரர்களும், காலாட்படை வீரர்களும் சூழ்ந்திருந்தனர். ரகசிய கட்டளைகளைப் பிறப்பித்த கம்பீரத்தோடு, தனது சமிக்ஞை கிடைத்ததும் வீரர்களை வழி நடத்தும்படி சொல்லிவிட்டு ராஜமாளிகைக்குள் நுழைந்தது அந்த உருவம்.

மன்னர் மகேந்திர பூபதியின் சயன அறைக்குள் அத்துமீறி அந்த உருவம் நுழைய முற்பட்டபோது வாயில் காவலர்கள் குத்தீட்டியை குறுக்கே நீட்டி தடுத்தி நிறுத்த உருவம் உடைவாளை உருவி "விலகுங்கள்" என கர்ஜிக்க சிறு சலசலப்பு எழுந்தது.

அப்போது...

"யாரங்கே... சேனாதிபதியை உள்ளே அனுப்புங்கள்," என்று இளவரசியிடமிருந்து குரல் வந்தது.

சரேலெனப் புயலாக உள்ளே நுழைந்த சேனாதிபதியிடம், "அப்படி என்ன அவசரம் சேனாதிபதி அவர்களே? என்று இளவரசி இன்பவல்லி எதிர் கொண்டு கேட்டதும், வந்த வேலையை மறந்தான். இளவரசியை இமைக்காமல் பார்த்தான்.

நிலவின் ஒளி கொண்டு தீற்றப்பட்ட ஓவியமா? அல்லது கை தேர்ந்த சிற்பியால் செதுக்கப்பட்ட சிற்பமா? அதரங்கள் அசைவில் அகிலமே அடிபணியுமே ! விம்மி எழுந்த மார்புகள், விழித் திரைக்குள் வளையவளைய வரும் கருவிழிகள், தரை தொடும் ஆலம் விழுதாய் கார்கூந்தல்... காண்போரைக் கிறங்கச் செய்யும் அவள் பேரழகில் சேனாதிபதி சொக்கிப் போய் நின்றதில் ஆச்சரியம் ஏதுமில்லைதான். இன்பவல்லி நீ எனக்கு மட்டும் தான்...என்று சேனாதிபதி வாய் விட்டுச் சொல்லவும் செய்தான்.

என்ன சேனாதிபதி சிலையாக நின்றுவிட்டீர்கள்? என்று இளவரசி கேட்டபோது சுய நினைவு பெறாமலே "இன்பவல்லி நீ எனக்கு மட்டும் தான்" என்று சற்று உரக்கவும் சொன்னான். என்ன சேனாதிபதி யாரிடம் பேசுகிறீர்கள் என்பது நினைவு இருக்கட்டும், என்று இளவரசி சீற்றமாகச் சொல்லவே சுய நினைவுக்குத் திரும்பினான் சேனாதிபதி.

இன்பவல்லி இனி நீ என் இதயராணி'; என் இதய சிம்மாசனத்தில் எப்போதோ அமர்ந்து விட்டாய். நான் சொல்லியதில் தவறேதும் இல்லை இன்பவல்லி, என்றான் சேனாதிபதி.

"மதி கெட்டவனே முதலில் இங்கிருந்து வெளியே போ"

"ஆம். இந்த மதிமுகத்தாளின் அழகில் மயங்கி மதி கெட்டுத்தான் போய்விட்டேன். சொல்கிறேன் கேட்டுக் கொள்: நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உனக்கு மாலையிடப்போவது நாந்தான். சேனாதிபதியை எப்படி மணப்பது என்று யோசிக்கிறாயா? கவலையை விடு நாளை நீ மணக்கப் போவது மகேந்திரபுரி மன்னனை! என்ன விழிக்கிறாய்?  சேனாதிபதிதான் நாளை, மகேந்திரபுரி நாட்டின் மன்னனாக முடிசூட்டப்படப் போகிறான்."

" விசுவாசமற்ற கயவனே பகற் கனவு காண்கிறாய். இனியும் இங்கு நின்று கொண்டிருக்காதே. ஓடி உயிர் பிழைத்துக்கொள். இல்லையேல் உன் உடம்பில் தலை இருக்காது."

" இன்பவல்லி...இவ்வளவு அழகாக உன்னால் மட்டுமே கோபப்படமுடியும். அழகுப் பதுமையே! ஆவேசப்படாதே. வேட்டையாடப் போன இளவரசன் திரும்பி வரப் போவதில்லை. எனது ஆட்கள் இளவரசனின் கதையை முடித்து இருப்பார்கள்.

அரசனின் அந்திம வேளை நெருங்கிவிட்டது. இப்போது அவரது ஆயுளை முடித்துவிடப் போகிறேன். விடிந்தால் இந்த மகேந்திரபுரி மன்னனில்லாமல் தவிக்கக் கூடதல்லவா? அதனால் இந்த சேனாதிபதி நாட்டின் மன்னனாகத் தடை ஏதும் இல்லை.

சண்டித்தனம் செய்யாமல் என்னை ஏற்றுக்கொள். இனியும் நீ சாரங்கனை அடைய கனவு காணாதே. நீ இணங்கவில்லை என்றால் இன்பவல்லி ... நீயாக இணங்கும் வரை பாதாளச் சிறையில் அடைத்துவிடுவேன். நீ புத்திசாலியும்கூட... புத்தம் புது உலகு படைப்போம் வா... என்று இன்பவல்லியின் கையை எட்டிப் பிடித்தான்.

அப்போது...

"நில்... பித்தம் தலைக்கேறி சித்தம் கலங்கிப் போன இவனைக் கைது செய்யுங்கள்." - இளவரசன் வீரர்கள் புடைசூழ வந்தான். சரேலென சேனாதிபதி வாளை உருவிக்கொண்டு இளவரசியை நோக்கிப் பாய்ந்தான். ஆனால் அதற்குள் இளவரசன் மின்னலெனப் பாய்ந்து சேனாதிபதியைப் பிடிக்க வீரர்கள் நாலாபுறமும் சேர்ந்து பிடித்துக் கொண்டனர்.

"சாரங்கன், உன் குள்ளநரிச் சதிவேலையை கண்டு பிடித்து மன்னரிடமும் என்னிடமும் சொல்லிவிட்டார். எதிரி நாட்டோடு கள்ள உறவு கொண்டு சூழ்ச்சியாக சதி வலை பின்னியதை அறிந்தோம். நான் வேட்டைக்குச் செல்வதாக போக்குக் காட்டிவிட்டு அரண்மனைக்கே திரும்பி விட்டேன். மன்னர் திடீர் உடல் நலக் குறைவால் படுத்தபடுக்கையாகிவிட்டார் என்று அரண்மனை வைத்தியர் மூலம் சொன்னதும் நாடகம் தான். எதிரி நாட்டுப்படையை வரவழைத்து நீ எங்களை கைது செய்யும் திட்டத்தை தவிடு பொடியாக்க நாங்கள் செய்த திட்டம் தான் இது. ராஜமாளிகையைச் சுற்றி உன்னால் நிறுத்தப்பட்டிருந்த மகத நாட்டுப் படை வீரர்கள் இப்போது சிறைப்படுத்தப் பட்டுள்ளனர். நாட்டைக் கைப்பற்றத் துணிந்த நீ இளவரசி மீதும் கை வைக்கத் தயாராகி விட்டாய். உனக்கு என்ன தண்டனை என்பதை மன்னரே சபையில் நாளை அறிவிப்பார்.

     oooOooo

"சுய நலத்துக்காக நாட்டையே எதிரிக்கு காட்டிக் கொடுத்து பணயம் வைக்கத் திட்டம் தீட்டியது, என்னையும் இளவரசனையும் கொல்லத் துணிந்தது, இளவரசியிடம் வரம்பு மீறி நடந்ததையும் வைத்து சுலபமாக உனக்கு மரணதண்டனை கொடுக்கலாம். தான் விசுவாசமற்றுப் போனதை நாளும் எண்ணி உணரவேண்டும் என்பதற்காக, பாதாளச் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்க ஆணையிடுகிறேன், என்றார் மன்னர் மகேந்திர பூபதி.

"இந்த அரசவையின், மகிழ்ச்சியான இந்தத் தருணத்தில் இன்னொரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன். எனது மெய்காப்பாளர் சாரங்கனின் மதிநுட்பத்தால் சேனாதிபதியின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. மகேந்திர புரி நாடு எதிரி வசமாகாது காக்கப்பட்டது. எங்கள் உயிர் பாதுகாக்கப்பட்டது.  இதற்குக் காரணமான மெய்காப்பாளரை யாம் பாராட்டுவதோடு  அவரையே சேனாதிபதியாகவும் நியமிக்கிறேன். புதிய சேனாதிபதிக்கு என் அன்புப் பரிசாக, என் இனிய மகள் இன்பவல்லியை பரிசாக அளிக்கவும் முடிவு செய்துள்ளேன், என்றார் மன்னர் மகேந்திரபூபதி.

மன்னரின் எதிர்பாராத அறிவிப்பு சாரங்கனுக்கு இன்ப அதிர்ச்சிய'க இருந்தது. மாடத்திலமர்ந்திருந்த இன்பவல்லியை நோக்கிப் பார்வையைச் சுழல விட்டான் சாரங்கன். இன்பவல்லியும் சாரங்கனை நோக்க அங்கே...வேல் விழியும், வாள் விழியும் கலந்தன.

oooOooo
ஆல்பர்ட் அவர்களின் இதர படைப்புகள்.   சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |