ஜனவரி 05 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : ஆணை
- மீனா [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

Arjun namithaதான் நடிக்கும் முக்கால்வாசிப் படங்களில் நாட்டைக் காக்கும் பொறுப்பில் உள்ள போலீஸ் அல்லது ராணுவ அதிகாரியாகவே வரும் அர்ஜுன் இந்தப் படத்தில் ஒரு மாறுதலுக்காக ஒரு குழந்தையைக் காக்கும் பொறுப்பான வேலையை ஏற்கிறார். தங்களுடைய தீவிரவாத இயக்கத்திற்கு தேவைப்படும் பணத்திற்காக பணக்கார வீட்டுக் குழந்தைகளைக் கடத்துகிறது ஒரு கும்பல். இக்கும்பலில் கண் தங்கள் குழந்தை ப்ரியா மீது இருப்பதைத் தெரிந்துகொள்ளும் சங்கவியும், மனோஜ் கே ஜெயனும் குழந்தையைக் காப்பற்ற நம்பிக்கையான ஒரு ஆளைத் தேடுகிறார்கள்.

காவல் துறையில் ஒரு பொறுப்பான அதிகாரியாக இருந்த அர்ஜுன் மீது வீண் பழி சுமத்தி அவரை வேலையிலிருந்து அவருடைய மேலதிகாரிகளே விரட்டிய கதையை தங்கள் குடும்ப நண்பர் மூலம் தெரிந்து கொள்ளும் சங்கவி, மனோஜ் தங்கள் குழந்தையைக் காக்கும் பொறுப்பை அர்ஜுனிடம் ஒப்படைக்கிறார்கள். முதலில் ப்ரியாவுடனான தனது உறவை வெறுக்கும் அர்ஜுன் போகப்போக அவளுடன் ஒட்டி உறவாட ஆரம்பிக்கிறார்.

இந்நிலையில் அர்ஜுனின் பலமான காவலையும் மீறி குழந்தை கடத்தப்படுகிறது. கடத்திய குற்றமும் அர்ஜுன் மீதே விழுகிறது. ஒரு கட்டத்தில் ப்ரியா இறந்துவிட்டதாகவே அனைவரும் நினைக்கிறார்கள். ப்ரியாவின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் அர்ஜுன் அவள் கொல்லப்பட்டதை தாங்க இயலாமல் கடத்தல் கும்பலைச்
சேர்ந்த ஒவ்வொருவரையும் வேட்டையாட ஆரம்பிக்கிறார். தன் ஆட்கள் ஒவ்வொருவராக கொல்லப்படுவதை தாங்க இயலாத கடத்தல் கும்பல் தலைவன் ப்ரியா உயிருடன் இருக்கும் உண்மையைச் சொல்கிறான். ப்ரியாவை மீட்க தன்னந்தனியாகச் செல்லும் அர்ஜுன் எவ்வாறு தீவிரவாத கும்பலை வேறுடன் அழிக்கிறார் என்பதே கதை.

ஆக்ஷன் கதை என்றாலே அல்வா சாப்பிடுவது போல நினைப்பவர் அர்ஜுன். ஆகவே படத்தில் அடிதடியில் அதகளம் செய்கிறார். அவர் பேசும் டயலாக்குகளை ஒரு சின்ன பஸ்டிக்கெட்டின் பின்பக்கம் எழுதிவிடல்லாம். அத்தனை அளவாக வார்த்தைகளை எண்ணி எண்ணி பேசுகிறார். ஆனாலும் சண்டைக்காட்சிகளில் அவரது கைகளும் கால்களும் அருமையாக பேசுகின்றன. (ஆனாலும் அர்ஜுனுக்கு வயதாகிக்கொண்டே வருவதை அவரது முகம் காட்டிக்கொடுப்பதை மறுக்க முடியாது).

அர்ஜுனுடன் டூயட் பாடுவதற்காகவே படத்தில் 2 நாயகிகள். நமீதா மற்றும் கீர்த்தி சாவ்லா. இருவரும் அர்ஜுனை ஒரு தலையாக காதலிக்கிறார்கள். ஏதோ ஒப்புக்கு இரண்டு வார்த்தை பேசுகிறார்கள். ஆனால் அர்ஜுன் மட்டும் கடைசி வரை அவர்களை கண்டுகொள்ளவே இல்லை. நாயகிகளைப் பற்றிச் சொல்லுவதற்கு இதைத்
தவிர வேறு ஒன்றுமே இல்லை.

அர்ஜுன் ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி என்பது தெரியாமல் வடிவேலு அவரிடம் எக்கச்சக்கமாக சவடால் விடுவதும், பிறகு அர்ஜுன் யார் என்பது தெரிந்து அவரிடம் நெளிந்து குழைவதும் சூப்பர். மற்றபடி வடிவேலு படம் முழுக்க அடிவேலுவாக எல்லோரிடமும் அடிவாங்கிக்கொண்டே இருப்பது கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்துகிறது. வில்லனைப் பற்றி குறிப்பிட ஒன்றுமே இல்லாதது கொஞ்சம் துரதிஷ்டம் தான். பாவம் ஒப்புக்கு வில்லனாக வந்து அர்ஜுனிடம் அடிவாங்கி சாகும் கேரக்டர்.

படத்திற்கு இசை இமான். இரண்டு நாயகிகள் என்பதற்காகவே ஏழு பாட்டு போட்டார்கள் போலிருக்கிறது. எல்லாம் ஓக்கே ரக குத்துப் பாட்டுக்கள். பாடல்கள் மட்டுமல்லாமல் பின்னணி இசைக்காகவும் இமாம் ரொம்பவும் மெனக்கெடவில்லை என்பது தெரிகிறது.

இயக்குனர் செல்வா "மேன் ஆன் ·பயர்" படத்தை தமிழாக்கம் செய்ய முற்பட்டிருப்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் அதை இன்னும் கொஞ்சம் சரியாகச் செய்திருக்கலாம். தெளிவில்லாத திரைக்கதை, வசனம் - இது மட்டுமல்லாது எதற்காக 2 நாயகிகள், அர்ஜுனை ஏன் காவல் துறை மீண்டும் வேலைக்கு சேர்த்துக்கொள்கிறது போன்ற ஏகப்பட்ட கேள்விகளுக்கும் தெளிவான பதில் இல்லாத நிலை. அர்ஜுனின் ஆக்ஷன் காட்சிகளை மட்டும் வைத்து படத்தை ஓட்டிவிடலாம் என்று நினைக்காமல் கதை மற்றும் திரைக்கதையில் இயக்குனர் மேலும் கவனம் செலுத்தியிருந்தால் ஆணை சிறப்பாக வந்திருக்கும். செல்வாவிற்கும் நல்ல பெயர் கிடைத்திருக்கும்.

oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |