|
பெண்களை வெறும் போகப்பொருளாக மட்டுமே கருதி மிருகமாய் வாழும் ஒருவன் எவ்வாறு - எந்த சூழ்நிலையில் மனம் திருந்துகிறான் என்பதே மிருகம் படத்தின் கதைச்சுருக்கம்.
தான் வசிக்கும் கிராமத்தில் மட்டுமல்லாமல் அக்கம் பக்கத்து கிராமங்களில் தான் பார்க்கிற பெண்களையெல்லாம் கூடப்படுக்க கூப்பிடும் ரகத்தைச் சேர்ந்தவன் ஐயனார். தான் செய்வது தவறு என்பதையே உணராதவன் - தன்னைத் தட்டிக்கேட்பவர்களை எல்லாம் அடித்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பும் மிருகம். வரைமுறைகளுக்கும் மனித உணர்வுகளுக்கும் கட்டுப்படாதவன். ஐயனாரை அணுகவே கிராமத்தில் உள்ளவர்கள் பயப்பட, கல்யாணம் செய்து வைத்தால் தன் மகன் திருந்திவிடுவான் என்ற எண்ணத்தில் ஐயனாருக்கு திருமணம் செய்து வைக்கிறார் அவன் அம்மா. ஆனால் மனைவி வந்த பிறகும் திருந்தாமல் ஐயனார் தன் இஷ்டப்பட ஊரைச் சுற்ற - தட்டிக் கேட்கும் மனைவியை கண்டபடி அடித்து துன்புறுத்துகிறான்.
ஒரு கட்டத்தில் செய்த தவறுகளுக்கெல்லாம் தண்டனை கிடைப்பதைப் போல ஐயனார் எய்ட்ஸால் பாதிக்கப்படுகிறான். ஒரு காலத்தில் அவனால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் அவனுக்கு எதிராக பொங்கியெழுகிறார்கள். அடங்காத காளையாகத் திரிந்தவன் அடிமாடு நிலைக்கு இளைத்து உருக்குலைந்து தேய்ந்து போகிறான். எந்த மனைவியை வேண்டாம் என்று எட்டி உதைத்தானோ அதே மனைவிதான் அவனது இறுதி காலத்தில் அவனைத் தாங்குகிறாள். எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட ஐயனாரின் கதி என்ன ஆனது என்பதுதான் கிளைமாக்ஸ்.
ஐயனாராக வரும் ஆதி புதுமுகம் என்று நம்பவே முடியவில்லை. அந்த அளவிற்கு தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் கவர்கிறார். பரட்டை தலையுடனும் கொடூரம் தாண்டவமாடும் கண்களுடனும் படத்தின் முற்பாதியில் அவர் செய்யும் கொடூரங்கள் ரொம்பவே ஓவர். நோய் வந்த பின் இளைத்து துரும்பாகி கடைசியில் ஊர் மக்களிடம் மன்னிப்பு கேட்கும் இடத்தில் கண்ணீரை வரவழைக்கிறார்.
ஐயனாரின் மனைவி அழகம்மாவாக வரும் பத்மபிரியா தன் அருமையான நடிப்பால் அசத்துகிறார். கொடுமைக்கார கணவனை ஆரம்பத்தில் திருத்த முயலும் போதும் - அவன் திருந்தாத ஜென்மம் என்பதை உணர்ந்து அவனிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள பொங்கியெழும்போதும் - இறுதியில் நோயால் பாதிக்கப்பட்டு ஊரே வெறுத்து ஒதுக்கிய தன் கணவனுக்கு ஆதரவு காட்டும்போதும் பத்மபிரியாவின் நடிப்பைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை..
கருப்பா.. கருப்பா... என்று தன்னந்தனியே புலம்பித் திரியும் கஞ்சா கருப்பு ஐயனாரின் கையாளாக வருகிறார். ஐயனாரை திருமண பந்தத்தில் மாட்டிவிட நினைத்து பத்மபிரியாவைப் பற்றி அவர் செய்யும் வர்னனைகள் சூப்பர். ஐயனாரால் தன் திருமணம் தடைபட்டுக்கொண்டே வருவதை நினைத்துப் புலம்பும் அவர் கடைசியில் ஊரே ஒதுக்கி வைக்கும் அய்யனாரை வாஞ்சையோடு தன் திருமணத்திற்கு அழைக்கும் போது சிறந்த குணசித்திர நடிகராக பரிமளிக்கிறார்.
ராம்நாத் ஷெட்டியின் ஒளிப்பதிவும் தோட்டா தரணியின் கலையும் சபேஷ் - முரளி இசையும் படத்திற்கு பெரும் பலம். இவ்வளவு இருந்தும் படத்தில் ஆரம்பம் முதல் தலைவிரித்தாடும் ஆபாசம், வன்முறை, வக்கிரம் எல்லாம் நிச்சயம் முகம் சுளிக்க வைக்கின்றன. ஒருவனை மிருகமாகக் காட்ட இவை எல்லாம் தேவை என்று இயக்குனர் சாமி கூறினாலும் இந்த அளவிற்கு வக்கிரம் தேவையா என்று கொஞ்சம் அவர் யோசித்திருக்கலாம்.
|