Tamiloviam
ஜனவரி 11 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : சிவப்பதிகாரம்
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

Vishal,Mamthaவிருப்ப ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரான ரகுவரன் தன் சொந்த ஊருக்கு மகள் மம்தாவுடன் வருகிறார். கிராமத்திலேயே இனி தங்கப்போவதாகவும், நாட்டுப்புறபாடல்களை ஆராய்ந்து அவற்றைத் தொகுத்து புத்தகம் போடுவதுதான் தன்னுடைய லட்சியம் என்று ஊர் பெரிய மனிதர்களிடம் கூறுகிறார் ரகுவரன். ரகுவரனுடைய உதவியாளராக வரும் விஷால் தன்னுடைய புத்திசாலித்தனத்தால் ரகுவரன் மகள் மம்தா மனதில் இடம் பிடிக்கிறார்.

இந்நிலையில் பொது தேர்தல் அறிவிக்கப்படுகிறது. ஆளுங்கட்சி, எதிர் கட்சி என தேர்தல் களத்தில் இருக்கும் சிலர் வேட்பாளர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். கொலைக்கான அடிப்படைக் காரணம் என்ன? இதைச் செய்தது யார் என்று முதலில் புரியாமல் குழம்பித்தவிக்கும் போலீஸ் ஒருவழியாக இதற்கெல்லாம் காரணம் விஷாலும் ரகுவரனும்தான் என்று கண்டுபிடிக்கிறார்கள். துப்பறியும் போலீஸ் அதிகாரி ரகுவரனிடம் காரணம் கேட்க பிளாஷ்பேக் துவங்குகிறது.

ஒரு பிரபல கல்லூரியில் படிக்கும் புத்திசாலி மாணவர் விஷால். இடைத் தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் தான் வெற்றி பெறுவார் என்று ஒரு பிரபல கல்லூரியின் புள்ளியியல் துறை மாணவர்கள் கருத்துக் கணிப்பு நடத்தி தேர்தல் முடிவை முன்கூட்டியே தெரிவிக்கிறார்கள். அவர்கள் சொன்ன மாதிரியே அந்த இடைத்தேர்தல் முடிவும் அமைகிறது. இதனால் ஆத்திரமடையும் ஆளும்கட்சி வேட்பாளர் சண்முகராஜன் தனது அடியாட்கள் மற்றும் போலீஸ் துணையுடன் அந்த கல்லூரியில் ஒரு கலவரத்தை உண்டு பண்ணி மாணவர்களைத் தாக்குவதோடு மட்டுமல்லாமல் கல்லூரி கட்டிடம் ஒன்றிற்கும் தீ வைக்கின்றனர். இதில் 40 மாணவ, மாணவிகள் எரிந்து சாம்பலாகிறார்கள். மேலும் இதில் விஷாலின் தந்தை மணிவண்ணனும் பலியாகிறார். தந்தை மற்றும் நண்பர்களை இழந்து கதறும் விஷால் சண்முகராஜனை பழிவாங்கத் துடிக்கிறார். அவரை அடக்கும் பேராசிரியர் ரகுவரன் சரியான சமயத்திற்காக காத்திருக்குமாறு கூறுகிறார்.

பிளாஷ்பேக் முடிய - காத்திருந்த சந்தர்ப்பம் கிடைத்ததால் வேட்பாளர்களை கொன்று மொத்த காவல்துறையின் கவனத்தையும் கவர்கிறார் விஷால். இவரது கொலைகளை நியாயப்படுத்த ஒரு தரப்பு முயல - முடிவில் விஷாலின் நிலை என்ன ஆனது என்பதே கிளைமாக்ஸ்.

azhagarவழக்கமான ஆக்ஷன் நடிப்பிலிருந்து கொஞ்சம் மாறுபட்டிருக்கிறார் விஷால். முதல் பாதியில் அமைதியாக வலம் வந்து பிற்பாதியில் ஆக்ரோஷமாக சீறும் போது சபாஷ் போட வைக்கிறார்.  நீண்ட இடைவெளிக்குப்பிறகு ரகுவரனை மாறுபட்ட தோற்றத்தில் காட்டிய இயக்குனருக்கு பாராட்டுகள்.  தன்னுடைய அருமையான - அமைதியான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார் ரகுவரன். கொஞ்ச நேரமே வந்தாலும் நிச்சயம் நினைவில் நிற்கும் பாத்திரம் மணிவண்ணனுக்கு.

நாயகி மம்தா வழக்கமான கதாநாயகிகள் செய்யும் வேலையை மட்டுமே செய்கிறார். நடிக்க பெரிதாக வாய்ப்பு ஒன்றும் இல்லை. கஞ்சா கருப்புக்கு காமெடி கலந்த குணச்சித்திர வேடம்.

சரியாக செய்திருக்கிறார். விஷாலிடமிருந்து கற்றுக் கொண்டு பஸ்ஸில் அவர் கேட்கும் வாயில்லாத பிராணி எது... போன்ற கேள்விகள் சூப்பர்.. மேலும் கொலைக்கான காரணத்தை கண்டுப்பிடிக்கும் சி.பி.ஐ. அதிகாரி பாத்திரத்தில் உபேந்திரா லிமாயே மிக இயல்பான நடிப்பில் தன்னை கவனிக்க வைத்திருக்கிறார். சண்முகராஜனின் வில்லத்தனத்தை இன்னும் கொஞ்சம் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கலாம் இயக்குனர்.

வித்தியாசாகர் இசையில் பாடல்கள் ஓக்கே ரகம். கோபிநாத்தின் அருமையான ஒளிப்பதிவு வைகை ஆற்றில் அழகர் இறங்கும் காட்சிளில் அருமையாக வெளிப்படுகிறது.  சுரேஷ்அர்ஸின்

படத்தொகுப்பும், சூப்பர் சுப்பராயனின் சண்டை பயிற்சியும் படத்திற்கு பக்க பலம். படத்தில் ஆங்காங்கே லாஜிக் ஓட்டைகள் - முக்கியமாக கூட்டம் நிறைந்த இடத்தில் சர்வசாதரணமாக வேட்பாளர்களின் வயிற்றில் குத்திவிட்டு யார் கண்களிலும் மாட்டாமல் விஷால் தப்பிப்பது போன்ற காட்சி. மேலும் மறைந்திருந்து நாயகன் விரோதிகளை அழிப்பதும் வெளியே வந்து புரட்சி வசனம் பேசி ஜெயிலுக்குப் போவதும் பார்த்து பார்த்து அலுத்த விஷயங்கள்.

ஆனாலும் கடைசி காட்சிகளில் வேட்பாளர் தேர்வு குறித்த விழிப்புணர்வை விஷால் பேசும் வசனங்கள் வழியாக மக்களுக்கு சொல்லும் போது பாராட்டுகளைப் பெருகிறார் இயக்குனர் கரு.பழனியப்பன். கதை மற்றும் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் சிவப்பதிகாரம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

| | | |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |