Tamiloviam
ஜனவரி 15 2009
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : இடைத்தேர்தல் வெற்றி
- மீனா [feedback@tamiloviam.com]
  Printable version | URL |

ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே பெரிய கவுரவப் பிரச்சனையாகக் கருதப்பட்ட திருமங்கலம் இடைத்தேர்தல் அமைதியாக நடந்துமுடிந்து முடிவுகள் ஒருவழியாக வெளிவந்துவிட்டன. ஆளும்கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது - திருமங்கலத்தில் கிடைத்துள்ள இந்த வெற்றி திமுக தரப்பில் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. வழக்கம் போல இது நீதிக்கும் நேர்மைக்கும் அரசின் 3 ஆண்டு சாதனைக்கும் கிடைத்த வெற்றி என்று தி.மு.க தலைவர் கருணாநிதியும் இது நிஜ வெற்றியல்ல - வாங்கப்பட்ட வெற்றி என்று  அ.தி.மு.க தலைவி ஜெயலலிதாவும் கூறியுள்ளனர்.

உண்மையாக ஜெயித்தார்களோ - கோல்மால் செய்து ஜெயித்தார்களோ திருமங்கலம் தொகுதி மக்கள் இந்த வெற்றியை பெரிய அளவில் எடுத்துக்கொள்ளப்போவதில்லை என்பது சர்வ நிச்சயம். திருமங்கலம் தேர்தல் மட்டுமல்ல, இக்காலத்தில் நடைபெறும் எந்தத் தேர்தல்களையும் மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இந்த மோதல்களும் கொண்டாட்டங்களும் கட்சிகளோடு சரி. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் மக்களுக்கு ஒன்றுதான். என்ன இத்தனை ஆண்டுகளாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த திருமங்கலத்தில் இந்த இடைத்தேர்தல் மூலமாக பணப்புழக்க மிக அதிக அளவில் காணப்பட்டது - அரசின் இலவசங்கள் இனி திருமங்கலம் தொகுதி மக்களுக்கும் ஓரளவிற்கு போய்சேரும்.. என்னதான் ஆளும்கட்சியினர் திருமங்கலத்தை அடியோடு மாற்றிக்காட்டுவோம் என்று கணக்கிலடங்கா வாக்குறுதிகள் கொடுத்திருந்தாலும் அங்கே பெரிய அளவில் மாற்றம் ஒன்றும் வரப்போவதில்லை.

இடைத்தேர்தலை நடக்கப்போகும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம் என்று ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் கருதியது மிகப்பெரிய தவறாகும். ஏனென்றால் திருமங்கலத்தில் மட்டுமே தேர்தல் நடந்ததால் தான் எல்லாகட்சியினரும் தங்களது பந்து மித்திரர்கள் சகிதமாக அங்கே நாள் கணக்கில் தங்கி பிரச்சாரம் செய்யமுடிந்தது. ஆனால் இனி நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் இப்படிஎல்லாம் பிரச்சாரம் செய்வதோ, அன்பளிப்புகள் வழங்குவதோ நடக்காத காரியம். மேலும் அ.தி.மு.க ஆளும் கட்சியாக இருந்தபோதுதான் தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை இருகட்சிகளுமே நினைவில் வைக்கவேண்டும். எதிர்கட்சிகள் மீதான தாக்குதல் என்பது ஒரு வரைமுறைக்குள் இருக்கவேண்டும் என்பதும் தாங்கள் ஜெயித்தால் அந்தத் தொகுதிக்காக என்ன செய்ய இருக்கிறோம் என்பதை மக்களுக்கு சரியான முறையில் விளக்கவேண்டும் என்பதும் அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.கவிற்கான தேர்தல் பாடம்.

ஆக மொத்தத்தில் திருமங்கலம் வெற்றி மூலமாக அழகிரிக்கு புதிய பொறுப்பை வழங்கி அழகு பார்த்துள்ளார் கருணாநிதி. தி.மு.கவிற்கு சட்டசபையில் மேலும் ஒரு இடம் கிடைத்துள்ளது. அவ்வளவே.. மற்றபடி ஜெயித்தவர்கள் ஓஹோவென கொண்டாடி மகிழவும் தோற்றவர்கள் துக்கம் தாங்காமல் அழவும் இது ஒன்றும் வரலாறு காணாத தேர்தல் வெற்றியில்லை.

 

oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |