Tamiloviam
ஜனவரி 18 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறுகதை : சுட்ட எண்ணையும் ; சுந்தரேசன் ஸாரும் !
- பாபுடி [rajputh61@rediffmail.com]
| | Printable version | URL |


ஏட்டிக்கிப்  போட்டியென்றால்  அது எங்க ஊர்  சுந்தரேசன்  ஸார்  தான். எல்லாரும் குதிரைக்கு குர்ரமென்றால் அவர் அர்ரமென்பார்.  கேட்டால் '' குர்ரமென்னா  மாத்திரம் குதிரைக்கு புரிஞ்சிட போகுதா! '' என்று வியாக்யானமும் தயாராக வைத்திருப்பார். அவரிடம் வாயை கொடுத்து முழு மூக்கோடு மீண்டவர்கள் கொஞ்ச பேர் தான். அவர்களும் அவரால், பிழைத்துப் போகட்டுமென விடப்பட்டவர்களாக தானிருக்கும்.
 
சுவாரஸ்யமான அந்த கேரக்டர் உங்க எழுத்துக்கு உபயோகமாக இருக்குமே என்பதால் எங்கள் ஊருக்கு உங்களை அழைத்து போய்க் கொண்டிருக்கிறேனென்றாலும்  உங்கள் மூக்குக்கு என்னால் உத்தரவாதம் தர முடியாது. அது உங்கள் சாமர்த்தியம் சம்பந்தப்பட்டது.

நான் சொல்வது அதிகப்படியானதில்லை என்று இன்னும் கொஞ்ச நேரத்திலேயே உங்களுக்கு நிச்சயம் புரிந்து போகும்.

அடுத்தவன் சப்பி கீழே போட்ட லாலிபாப் மிட்டாய் குச்சியை பல் குத்த பொறுக்கியெடுத்து கொள்ளாமல் ' லேட்டரல் திங்கிங்'கோடு இருக்க வேண்டுமென்கிற சுந்தரேசன் ஸாரோட சித்தாந்தத்தைப் புரியாமல் அவருக்கு ஊரில் பல பேர் ' உல்டா ஸார் ' என்ற பட்டப் பெயர் கொடுத்து கேலி பேசி திரிகிறார்கள்.

அது அவருக்கும் தெரியாமலில்லை. ஆனாலும்,  ' சுட்ட எண்ணையிலேயே திரும்பத் திரும்ப வடையை சுட்டு தின்ற பயலுங்க' என்று ஊர் ஜனங்கள் மேல் திட்டவட்டமான அபிப்பிராயம் கொண்டுள்ளதால் சுந்தரேசன் ஸார் இதுக்கெல்லாம் அலட்டிக் கொள்வதில்லை.

ஸாருக்கு வயசு மிஞ்சி மிஞ்சிப் போனால் நாப்பதை தாண்டாது. எங்கள் ஊரில் எடிஷனை வைத்திருக்கும் மாலைப் பத்திரிக்கையொன்றில் அவருக்கு சப்-எடிட்டர் உத்யோகம். வரும்படி சொல்லிக் கொள்கிறார் போலில்லை.  மனைவி உள்ளூரில் பிரபலமான தனியார் மேனிலைப்பள்ளி ஒன்றில்  பி.ஜி. டீச்சர்.  சம்பளம் பரவாயில்லையாதலால் குடும்ப வண்டி 'பிரேக் டவுன்' ஆகாமல் எதோ ஓடிக்கொண்டிருக்கிறது.

ஸார் ' வீட்டை காட்டிலும் வேப்பமரத்தடி தேவலை' ரகம்.  சாயந்திரம் ஐந்து மணிக்கு டியூட்டி முடிந்து வெளியே வரும் ஸாருக்கு, அவர் அநேகமாக ராத்திரி ஒன்பதடிக்க வீடு போய் சேருகிற வரைக்கும் -  இப்போது நாம் போய்க் கொண்டிருக்கிறோமே, அந்த சின்ராஜ் டீக்கடை தான் பிரதான ஜாகை.

ஒரு கைப்பிடிக்கு அள்ளிப் போட்ட டீத்தூளை சப்ஜாடாய் இருபத்தைந்து, முப்பது சிங்கிள் வரை  மாற்றாமல்  நீர்க்க நீர்க்க டீத் தரும் சின்ராஜ் கடைக்கு அவ்வளவாகக் கூட்டம் வராதது, சுந்தரேசன் ஸார் வகையறாவுக்கு நல்ல சவுகரியமாய் போச்சு. டீக்கு ஆர்டர் குடுத்து விட்டு  அரைக்கட்டு பீடியுடன்  ( மாத முதல் வாரத்தில் நான்கு நாளுக்கு மாத்திரம் ' வில்ஸ் ·பில்டர் ' )  கடை  பெஞ்சில் உட்கார்ந்து  கச்சேரியை  ஆரம்பித்தால் அதுபாட்டுக்கு போய் கொண்டேயிருக்கும்.

சின்ராஜ் கடை மட்டும் தானென்றில்லை. மாதத்தின் முதல் வாரத்தில் ஒரு நாளோ இல்லை தற்செயலாய் ' ஓசி ' சிக்கும் சந்தர்ப்பங்களிலோ தாலூகாபீஸ் ரோட்டில் முட்டுச் சந்தில் இருக்கும் கூறை வேய்ந்த டாஸ்மாக் 'பார்'ரில் மூலையோரத்து பெஞ்சிலும் பார்க்கலாம்.

சாதாரணமாகவே ஸாருக்கு வாய் சும்மா இருக்காது. அப்படியே அபூர்வமாய் எப்போதாவது இருக்க முயன்றாலும், அதை கிண்டி கிளறுவதற்கென்று எப்படியும் நான்கைந்து உருப்படிகள் வந்து சேர்ந்து விடும்.

மசாலா பொரியை விட பேச்சு தான் அங்கே காரசாரமான ' சைட்டிஷ் ' ஆக இருக்கும். நவீன சிறுகதைப் போஸ்ட்மார்ட்டம்...பின் நவீனத்துவம் போன்ற புரியாததுகளில் தொடங்கிசத்ய சாய்பாபாவின் யாகம் ...  ஆறடிக்கு ஆறடி நடிகையின் ரோடுரோலர் இடுப்பு.... என்று நுழைந்து எங்கெங்கோ போய் கொண்டிருக்கும். 'சரக்கு' உள்ளே இறங்கிறங்க சப்ஜெட்டுகளும் சத்தமும் ஏறிக் கொண்டே போகும்.

ஆனாலொன்று. எதைப் பற்றி பேசினாலும் அதில், அவர் அடிக்கடி சொல்லும் ' சுட்ட எண்ணை வடைத் தனம் ' வந்திடாமல் உஷாராக பார்த்துக் கொள்ளும் சாமர்த்தியம் சுந்தரேசன் ஸாரை போல இன்னொருத்தருக்கு சுட்டுப் போட்டாலும் வராது. யாராவது ஒன்று சொன்னால் அதுக்கு எடக்குமடக்காய் எதாவது பதிலடி ஸாருக்கு எப்படித்தான் சரளமாய் வருமோ ஆண்டவனுக்கே வெளிச்சம் !

உதாரணமாய், தீபாவளி சீசனில் 'பர்சேஸ்' பற்றி யாராவது வாயை திறந்தால் அடுத்த கணமே, 'தீபாவளி ஒரு பண்டிகையே இல்லை. நரகாசூரனுக்கு திவச நாள்' என்பார். எங்கேயாவது குண்டு வெடிப்புகள், ரயில் விபத்துகளில் ஜனங்கள் பலியானதற்கு பி.எம்., சி.எம்., போன்ற தலைவர்களின் இரங்கல் செய்தி  'டிவி',  நியூஸ் பேப்பர்களில் வந்தாலும் அப்படித் தான். " ஆமாய்யா,  இதுக்கு  இன்னைக்கி  பூராவும்  இவங்க  சாப்பிடாம கொள்ளாம துக்கம் அனுஷ்டிக்க போறாங்களாக்கும். என்னமா ஆக்ட் கொடுக்கறாங்க பாரு..." என்று உடனே கமெண்ட் கிளம்பிடும் ஸாரிடமிருந்து.

தமிழ் பண்பாடு, கற்பு, கலாசாரம் என்று கிளப்பினால் ஸாருக்கு பழுத்த ருமானியா மாம்பழம் சாப்பிடுவதை போல. கொட்டையோடு  உறிஞ்சியெடுத்து விடுவார்.
இப்படி தான், கற்பு பற்றி நடிகை எதோ சொல்லி விவகாரம் வெடித்த சீசனில் இவரை பார்க்க வேண்டுமே! பிரம்மன், இந்த சுந்தரேசனுக்கு மாத்திரம் வாயை ஸ்பெஷலாய் ரப்பரில் செய்து அனுப்பி விட்டானோ என்று ஊரில் பல பேருக்கு சந்தேகமே வந்து விட்டதென்றால்  பார்த்துக் கொள்ளுங்களேன்.

" இந்த கற்பு கற்புன்னு அடிச்சிக்கிறானுங்களே, அதெங்கப்பா இருக்கு.  ஒருவேளை அது  இந்த  பண்பாடு, கலாசாரம்னு சொல்றாங்களே, அதுக்குள்ளார  ஒளிஞ்சிகிட்டிருக்கோ; மந்திரவாதி  மூஸாவோட உயிர், கிளிக்குள்ளார ஒளிஞ்சிகிட்டிருக்கிறாப்பல " - என்றபடி, அலட்சியமாய் அடிவயிற்றிலிருந்து பீடி புகையோடு சேர்த்து  ஒரு சிரிப்பை வெளியே தள்ளுவார் பாருங்க, அது அவருக்கு மட்டும் தான் வரும்.

ooOoo

ஆச்சு. சின்ராஜ் கடையை நெருங்கி விட்டோம். இன்னும் ஐந்து நிமிட நடை தான்.  அதற்குள்ளாக, உங்களை சந்திக்க நேற்றைக்கு மதியம் நான் ஊரை விட்டு கிளம்புவதற்கு முன்,  முட்டுச்சந்து டாஸ்மாக் 'பார்'ல் வைத்து சுந்தரேசன் ஸார்,  தமிழ் சினிமா ஒன்று கிளப்பிய சர்ச்சையை அலசி துவைத்து காயப் போட்டதை சொல்லி விடுகிறேனே. சொல்லி முடிக்கவும், கடையை நாம் போய் சேரவும் சரியாக இருக்கும்.

அன்றைக்கு மூன்றாவது 'ரவுண்டு' தாண்டியிருக்குமென நினைக்கிறேன். சொன்னபடி கேட்கும் கட்டமும் தாண்டி விட்டிருந்தது.  ஆனாலும் தலை, சுண்டல் சிதறல்களும் தீய்த்துப் போட்ட  பீடித்துண்டுகளுமாக கிடந்த மேஜையோடு சரிந்து செட்டிலாகி விடாதபடிக்கு சுதாரித்துக் கொண்டிருந்தார் ஸார். கூடயிருந்த எவனோ சும்மாயில்லாமல் கொளுத்திப் போடவே ஆரம்பித்து விட்டார் அவர்:

"கொழுந்தனை  அண்ணிக்காரி கணக்கு பண்றதா அதுலே காண்பிக்கிறாங்களாம். விடுவாங்களா. உடனே கெளம்பிட்டாங்கய்யா பண்பாடு  கலாச்சாரம்னு. பிரதர். இந்த ஒடம்பு பசி,  வயித்துப் பசியெல்லாம்  ஒருவிதத்திலே  சா·ப்ட்வேருங்க தான்.  அதுகளை நம்ம ஒடம்புலே 'இன்ஸ்டால்' செஞ்சிட்ட பெறகு  தான்  ஆண்டவனே நம்மளை ரிலீஸ் பண்றான்.  அந்த சா·ப்ட்வேர் புரோக்கிராமுங்க  இருக்கே,  அதுங்களோ ரொம்ப அதிகப் பிரசங்கிங்க.  நம்ம கிட்ட மரியாதைக்கு கூட ஒரு வார்த்தை கேக்காதுங்க. அதுங்களுக்கு வேணுங்கிற போதெல்லாம் அதுங்களாகவே ஓப்பனாகி விடுதுங்க. இதுக்கு யார் என்ன பண்ண முடியும் சொல்லு? யாரை குத்தம் சொல்ல முடியும்?

மேஜிக் ஷோ பாத்திருக்கிறீங்கில்ல. அது போல தான். பொம்பளைங்களை சங்கிலியாலே கட்டி பொட்டிக்குள்ளார போட்டு மூடி அதுக்கு மேலே ஒக்காந்து ஆம்பளைங்க போடுற கூப்பாடு தான் இந்த கற்பு, கலாச்சாரம் மண்ணாங்கட்டியெல்லாம். ஆம்பளைக்கு மாத்திரம் தானரிக்குமா ? அட..உட்டுத் தள்ளுங்க பிரதர்."

ooOoo

இதோ. வந்து சேர்ந்தே விட்டோம்.  இன்றைக்கெனப் பார்த்து  கடை  வெளி பெஞ்சில் சாஸ்திரத்துக்கு கூட ஈகாக்காய் இல்லை. பால் பாத்திரத்துக்குள் ஓரங்களில் படிந்து காய்ந்திருக்கும் பாலாடை கசடுகளை கரண்டியால் சுரண்டிக் கொண்டு சின்ராஜ் மாத்திரம் இருக்கிறான்.  உள்ளே , பெஞ்சில் சுந்தரேசன் ஸாரை காணவில்லையே.

நேரம் சாயந்திரம் ஆறுக்கு மேலாகிறது. வழக்கமாய் இருக்கும் நேரந்தான். வேறெங்கே போயிருக்க முடியும் ? மாத கடைசி வேற. முட்டுச்சந்து டாஸ்மாக்குக்கு போயிருப்பதற்கான சாத்தியமும் குறைச்சல். ஒருவேளை 'ஓசி' சிக்கியிருக்குமோ !

" ஏங்கண்ணு. ரெண்டு சிங்கிள் போடவா? "

எண்ண ஓட்டம் தடைபட்டது. " இல்லே சின்னு.  இப்போ வேணாம்.  நம்ம சுந்தரேசன் ஸாரை பாக்கணும்னு தான் வந்தேன். மாமூலா இருக்கிற நேரமாச்சே. இன்னும் வரலியா? "

" யாரு நம்ம உல்டா ஸாரு தான!"

சின்ராஜ் ஒருமுறை ஏற இறங்க பார்த்த பார்வையில் ஒரு அசாதாரணம் நெருடுகிறதே!

சில நொடிகள் நிலவிய மவுனத்தை சின்ராஜே கலைத்தான்." நீ வேற. ஒனக்கு விஷயம் தெரியாதா. அவுரு மருந்தடிச்சிபுட்டு பெரியாஸ்பத்திரியிலேயில்ல சாகக் கெடக்குறாரு"

அதிர்ச்சி! கும்மிருட்டில் புழக்கடையில் கால்பட்டு நெளியும் கயிறால் தான் இப்படியொரு திடுக் அதிர்ச்சியை தர முடியும்.

" ஸாரு, பாய்ஸனடிச்சிட்டாரா? என்ன சொல்றே நீ...சின்னு?"

"என்னத்த சொல்றது போ. அவுரு சம்சாரத்துக்கும் இன்னொரு ஆளுக்கும் கனெக்சனாம். ரொம்ப நாளாவே சீக்ரெட்டாய் நடந்து வந்திருக்கு போல. நேத்திக்குனு பாத்து நம்மாளு அதிசயமாய் வூட்டுக்கு சீக்கிரமாய் போக, அப்போ அந்த கண்றாவியை நேருக்கு நேரா பாத்து தொலச்சிப்புட்டாராம். அதே வேகத்திலே மனுஷன் மருந்தடிச்சிபுட்டதா சொல்றாங்க. மெய்யாலும் என்ன நடந்துச்சினு யாருக்கு தெரியும் சொல்லு ?"

மெய் தான். எது நிஜமென்று யாருக்கு தெரியும் சொல்லுங்கள் !

| | |
oooOooo
                         
 
பாபுடி அவர்களின் இதர படைப்புகள்.   சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |