ஜனவரி 19 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : கவிழும் கர்நாடக அரசு
- மீனா [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்க்க தேவகவுடாவின் மகன் செய்துவரும்  முயற்சிகள் மக்கள் அறிந்தவையே. தன்னை ஆதரிக்கும் தன் கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏக்களுடன் சேர்ந்து கவுடாவின் மகன் குமாரசாமி முதல்வராகும் கனவில் மிதக்கிறார். இந்நிலையில் குமாரசாமியின் தந்தை தேவகவுடா கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசைக் காப்பாற்ற வேண்டுமானால்  இப்பிரச்சனையில் சோனியா நேரடியாக தலையிடவேண்டும் என்றும் தன்னுடைய 9 நிபந்தனைகளை காங்கிரஸ்  மேலிடம் ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதில் குறிப்பாக மகாராஷ்டிராவைப் போல ஆட்சியில் நேரடியாகப் பங்கு பெறுவது, தன் கட்சியினர் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்குவது போன்ற  கோரிக்கைகள் அடங்கும். இதையெல்லாம் காங். மேலிடம் ஏற்றுக்கொள்ளாவிட்டால் தன்னால் தன் மகனது மனதை  மாற்றுவது கடினம் என்றும், பா.ஜனதா ஆதரவுடன் குமாரசாமி ஆட்சி அமைப்பது உறுதி என்றும் கிட்டத்தட்ட  மிரட்டும் தொனியில் தெரிவித்துள்ளார் தேவகவுடா.

ஆக தேவகவுடா கூறியதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி குமாரசாமி  சில நாட்களாவது முதல்வர் நாற்காலியில் அமர்வது நிச்சயம். தன் மகனை முதல்வராக்கி அழகு பார்க்கவேண்டும்  என்ற எண்ணத்தில் தேவகவுடாவே இத்தகைய பிரச்சனையைத் தூண்டி விட்டிருக்கலாம். அல்லது அவரது மகனுக்கு வந்த  ஆசையை நிராசையாக்க விரும்பாமல் - அதே நேரம் காங்கிரஸையும் பகைத்துக் கொள்ள விரும்பாமல்  பிள்ளையைக் கிள்ளி தொட்டிலை ஆட்டுவதைப் போன்ற ஒரு நாடகத்தை அட்டகாசமாக அரங்கேற்றியுள்ளார். எது  எப்படியோ சரியான நேரம் பார்த்து காங்கிரஸின் காலை வாரியுள்ளார் தேவகவுடா.

ஏற்கனவே காவிரிப்பிரச்சனை, தீவிரவாதிகள் தாகுதல் போன்ற பிரச்சனைகளால் திண்டாடிக்கொண்டிருக்கும்  கர்நாடக அரசை மொத்தமாக கவிழ்த்து விட்டுதான் மறுவேலை என்று இரங்கியிருக்கிறார்கள் அப்பாவும் மகனும்  என்று காங்கிரஸின் தீவிர ஆதரவாளரான சித்தராமையா தன் பங்கிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் ஒரு நிலையான அரசு அமையவேண்டும் - அப்படி அமைவதன் மூலமாவது தங்கள் பிரச்சனைகளுக்கு  ஓரளவாவது விடிவு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மக்கள் ஓட்டுப் போட்டு ஆளப்போகும் அரசைத்  தீர்மானிக்கிறார்கள். ஒரு கட்சி ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கும் எம்.எல்.ஏக்கள் தாங்கள்  தங்கள் சுயலாபத்திற்காக ஒருவருக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக தீர்மானித்தால், அவர்கள்  தயவால் வந்த எம்.எல்.ஏ பதவியையும் தூக்கி எறிவதுதானே முறை? அதை விடுத்து ஆட்சியைப் பிடிக்கவும்,  கோடி கோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கவும் எண்ணம் கொண்டு ஆட்சி மாற்றம் என்ற பெயரில்  இத்தகைய குதிரை பேரம் நடத்தும் நம் அரசியல்வாதிகள் மீது மக்கள் எப்படி மரியாதை வைப்பார்கள்?

இந்தியா முழுவதுமே கூட்டணி ஆட்சி அமைக்கும் அரசுகள் கூட்டணி ஆட்சிக்காலத்தின் பாதியில் முறிவதால்  கவிந்த கதைகள் பல உள்ளன. இத்தகைய ஆட்சிக் கவிழ்ப்பு அவலங்கள் மேலும் தொடராமல் இருக்க வேண்டுமானால்  நாம் கண்டிப்பாக செய்யவேண்டியவை:

1. தேர்தலின் போது ஒவ்வொரு இந்தியப் பிரஜையும் தவறாமல் ஓட்டுப்போட்டு தங்கள் பிரதிநிதிகளைத்  தேர்வு செய்யவேண்டும்.

2. ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் வெற்றி பெறும் மற்றொரு கட்சி, அந்த ஆட்சி பூரணமாக  நிறைவு பெற்று அடுத்த தேர்தல் வரும் வரை அக்கட்சியுடனே கூட்டணியில் இருக்க வேண்டும். தவிர்க்க இயலாத  காரணத்தால் தாங்கள் தரும் ஆதரவை வாபஸ் பெற்றால் அவர்கள் தயவில் - கூட்டணியில் பெற்ற தங்களுடைய  எம்.எல்.ஏ - எம்.பி பதவியை ராஜினாமா செய்யவேண்டும். அல்லது அவர்களிடமிருந்து கட்டாயமாக இப்பதவி  பறிக்கப்படவேண்டும். இதற்கான சட்டத்தை தேர்தல் கமிஷன் மற்றும் உச்சநீதி மன்றம் உடனடியாக நிறைவேற்ற  வேண்டும்.

அரசியல் ஒரு சாக்கடை என்ற எண்ணம் மக்கள் மனதிலிருந்து மாற விடவே மாட்டார்கள் போலிருக்கிறது இந்த  அரசியல்வாதிகள்.

oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |