Tamiloviam
பிப் 05 2009
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : சத்யம் - இனி என்ன ஆகும்?
- மீனா [feedback@tamiloviam.com]
  Printable version | URL |

கிட்டத்தட்ட 8000 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் - அகில உலக அளவில் இந்திய ஐ.டி நிறுவனங்களின் நம்பிக்கையை சிதற அடித்தது - ஏறத்தாழ 50000 ஆயிரம் ஊழியர்களை நாளை என்ன நடக்கும் என்று தெரியாமல் பரிதவிக்க விட்டது போன்ற பல விஷயங்களின் சொந்தக்காரர் சத்யம் நிறுவன முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு. என்று ராஜு உலகத்திற்கு தான் செய்த மோசடிகளைப் பற்றி அறிவித்தாரோ அன்று எரிய ஆரம்பித்த இந்த விவகாரம் இன்னும் சூடு தணிந்த பாடில்லை. ஒன்றும் தெரியாத பொதுமக்கள் வேண்டுமானால் ராஜு மட்டும் தான் குற்றவாளி, 8000 ஆயிரம் கோடி ரூபாயை தனது தவறான நடவடிக்கைகளால் இழந்துவிட்டார் என்று நம்பியிருப்பார்கள். அரசியல் விவரம் தெரிந்த ஒருவர் கூட ராஜுவின் இந்த வாக்குமூலத்தை நம்பவில்லை.

தற்போதைய காங்கிரஸ் அரசு மட்டுமல்லாது முந்தைய சந்திரபாபு அரசிலும் ராஜு ஒரு பவர்புல் மனிதராகவே உலவி வந்தார். ஆந்திர அரசு தகவல் தொழில்நுட்ப வளர்சியில் அபார அக்கரை காட்டியபோது அதன் கணிசமான பலனை அனுபவித்தவர்களுள் ராஜு முகியமானவர். ஆந்திர அரசு அள்ளித்தந்த கணக்கற்ற சலுகைகளை ராஜு அனுபவிக்க ஆந்திர அரசியல்வாதிகளில் பலர் கட்சி பாகுபாடின்றி உழைத்தனர். பதிலுக்கு அவர்களுக்குச் சேரவேண்டியதை ராஜு சரியாகக் கொடுத்திருப்பார் என்பதை விரிவாகச் சொல்லத்தேவை இல்லை. 8000 ஆயிரம் கோடி ரூபாய் மெகா உழல் அம்பலமாவதற்கு சில நாட்களுக்கு முன்பாகக் கூட ஆந்திர அரசு தனக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலத்தை ராஜுவுக்கு மார்கெட் மதிப்பிற்கு வெகு குறைவாக விற்றதும் ராஜுவின் மகன் நடத்தும் மெடாஸ் நிறுவனத்திற்கு ஆந்திர அரசு பல ஒப்பந்தங்களை வழங்கியுள்ளதும் நிச்சயம் ஆந்திர அரசை சந்தேக வளையத்திற்குள் கொண்டு வருகின்றன. மேலும் சந்திரபாபுவும் ராஜசேகர ரெட்டியும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக்கொள்வதிலிருந்தே ஆந்திர அரசியல்வாதிகள் ராஜுவிற்கு சாதகமாகச் செயல்பட்டுள்ளது வெட்ட வெளிச்சமாகிறது.

மேலும் தனது நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தனது தகிடுதண்டாக்களைப் பற்றி தெரியாது என்று ராஜு சொல்வதை ஒருவரும் நம்பத் தயாரில்லை. ஒரு தனி மனிதர் முடிவெடுக்க சத்யம் நிறுவனம் ஒன்றும் பெட்டிக்கடையல்ல. நிர்வாக இயக்குனர்கள் மற்றும் தணிக்கை அதிகாரிகளுக்குத் தெரியாமல் ராஜு கூறியபடி 8000 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்பது சாத்தியமே கிடையாது. அதிலும் சத்யம் நிறுவனத்திற்கான தணிக்கை நிறுவனம் பிரைஸ் வாட்டர்ஸ் கூப்பர்ஸ் ஒரு மிகப்பெரிய நிறுவனம் - திறமையான ஆட்கள் நிறைந்த ஒரு ஸ்தாபனம். அவர்கள் கண்ணில் ராஜு மண்ணைத்தூவினார் என்பதை விட ஒரு பங்கை கொடுத்து தனது ஊழலுக்கு அவர்களையும் துணையாக்கிக் கொண்டார் என்பதே உண்மை. மொத்தத்தில் அரசியல்வாதிகள் மற்றும் தனது நம்பிக்கைக்கு பாத்திரமான நிர்வாகிகள் துணையுடன் 8000 கோடி ரூபாயை ராஜு அபேஸ் செய்துள்ளார்.

சத்யம் நிறுவனத்தைப் பாதுகாக்க மத்திய அரசு புதிதாக நிர்வாகிகள் குழுவை அமைத்துள்ளது - ராஜு கைது செய்யப்பட்டார் - அவருக்கு உதவிய அவரது நிறுவன அதிகாரிகள் சிலரையும் மாநில அரசு கைது செய்துள்ளது - இந்த ஊழலுக்கு உடந்தையாக இருந்த மேலும் பலர் மீது வழக்கு பாயும் - சத்யம் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் வேலைக்கு உடனடி ஆபத்து இல்லை - வழக்கை சி.பி.ஐ விசாரிக்க மாநில முதல்வரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.. இப்படி பல நடவடிக்கைகளை அரசு எடுத்தாலும் இந்த வழக்கின் எதிர்கால நிலை தெளிவாகத் தெரிகிறது.

தனது அரசியல் செல்வாக்கால் ராஜு சில மாதங்கள் மட்டும் சிறை வாசம் அனுபவித்துவிட்டு ஒன்றுமே நடக்காதது போல வெளியே வருவார் - அவர் மீதுள்ள வழக்குகளுக்காக விசாரணை நடக்கும் நடக்கும் நடந்து கொண்டே இருக்கும்.. தண்டனை மட்டும் பெரிய அளவில் இருக்காது - அப்படி பெரிய தண்டனை கிடைத்தாலும் அதை உயர்நீதி உச்சநீதி மன்றத்தில் நீர்த்துப்போகும்படி செய்வார்கள் ராஜுவால் நியமிக்கப்பட்ட பெரிய வழக்கறிஞர்கள் - ராஜு விடுதலையாக அவர் கையாடல் செய்த பல ஆயிரம் கோடி ரூபாயில் ஒரு பகுதி அவருக்கு உதவிய, உதவப்போகும் மாநில மத்திய அரசியல்வாதிகளுக்குக் கைமாறும். சத்யம் நிறுவன ஊழியர்களின் வேலை பிடித்திருப்பதால் மீண்டும் அந்த நிறுவனத்திற்கே ஒப்பந்த முறையில் வேலை கொடுக்க உலக நிறுவனங்கள் முன்வரலாம். இதெல்லாம் சத்யம் மற்றும் ராஜுவிற்கான லாப கணக்கு.

ஆனால் சத்யத்தின் பங்குகளை வாங்கி தற்போது நஷ்டப்பட்டுள்ள பங்குதாரர்கள் மட்டும் என்ன ஆவார்களோ தெரியவில்லை.. ஒருவேளை சத்யம் நிறுவனத்தின் பங்குகள் அபார வளர்சி அடைந்தால் போட்ட பணத்தை பங்குதாரர்கள் ஓரளவிற்கு எடுக்கலாம் - அப்படி நடக்காத நிலையில் பங்குதாரர்களுக்கு ஏற்பட்ட அந்த நஷ்டத்தை ஒருவரும் ஈடு செய்யப்போவதில்லை என்பது நிச்சயம். ஆக குறுக்கு புத்தியிள்ள ஒரு சிலரும் அவர்களுக்குத் துணைபோன அரசியல்வாதிகளும் சேர்ந்து நடத்திய ஒரு மெகா நாடகத்தில் நஷ்டப்பட்டு நொந்து போனது திருவாளர் பொதுஜனம் தான்..

oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |