Tamiloviam
பிப்ரவரி 07 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : ஜனாதிபதி தேர்தல் - அமெரிக்கர்களுக்கு குழந்தை மனது.
- பாஸ்டன் பாலாஜி
| | Printable version | URL |

Obama & Hillaryஅமெரிக்க ஜனாதிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தேர்வு குடியரசு கட்சி சார்பிலும் ஜனநாயக கட்சி சார்பிலும் நடந்து வருகிறது.

எனக்கு நேரடியாகத் தெரிந்த, பழக்கமான அமெரிக்கர்களிடம் 'உங்க வோட்டு யாருக்கு' என்று வினவியதில் எவரும் நேரடியாக பதில் சொல்லாமல் நழுவி விட்டார்கள். கட் அன்ட் ரைட்டாக மகளிடமிருந்து மட்டும் பதில் வந்தது.

பள்ளியில் ஒவ்வொரு வேட்பாளரைக் குறித்தும் சிறு அறிமுகம் கொடுத்த வாத்தியார், அதன் பிறகு புகைப்படத்தைக் காட்டி வாக்கு கோரி இருக்கிறார்.

முதலாம் வகுப்பின் வாக்கு எண்ணிக்கை நிலவரம்:

மொத்தம் - 21 +  20 (ஏ & பி - இரு பிரிவுகள்)

ஹில்லரி: 15

ஒபாமா: 6

ராம்னி: 9

மெக்கெயின்: 8

மற்றவை - செல்லாதவை & இன்ன பிற

இருபத்திரண்டு பெண்கள் இருந்தும், என்னுடைய மகள் வாக்கையும் சேர்த்து பதினைந்து மட்டுமே ஹில்லரிக்கு விழுந்துள்ளது.

க்ளின்டனுக்கு ஏன் வாக்களித்தாய் என்றும் கேட்டிருக்கிறார்கள். மகள் மூன்று காரணங்களை முன்வைத்தாள்:
1. அவர் மட்டும்தான் பெண் வேட்பாளர்

2. ஏற்கனவே கேட்ட பெயராய் இருந்தது (வீட்டில் ஹில்டன் பெயர் அடிபட்டிருக்கும்; பாரிஸ் ஹில்டனுக்கும் ஹில்லரி கிளின்டனுக்கும் இடையே குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்)

3. மறந்து போச்சு என்றாள் (இரண்டாம் காரணத்தை இங்கு மீண்டும் படித்துக் கொள்ளவும்)

அமெரிக்கர்களுக்கு குழந்தை மனது.

நாளையை குறித்த கவலை இருக்க கூடாது (பொருளாதாரம்). அவர்களின் பொம்மை அவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் (குடிபுகல்). பனிப்பொழிந்தோ அல்லது இன்ன பிற உபாதைகளினாலோ வாரயிறுதி கொண்டாட்டாங்கள், பிறந்தநாள் விருந்துகள் தடைபடக் கூடாது (புவிவெப்பமடைதல்). தன்னை விட யாரும் பாப்புலர் ஆகிவிடக் கூடாது (இராக்/இரான்/போர்). ரொம்ப வீட்டுவேலை செய்ய வைக்க கூடாது (வரிச்சுமை).

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
...
பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது
அந்த பிள்ளையோடு தெய்வம் வந்து குடியிருந்தது
வயது வந்த பிறகு நெஞ்சில் மயக்கம் வந்தது
அங்கு வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது

குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மீது கொள்ளைப் பிரியம். அதே போல், வேட்பாளராகக் களத்தில் குதிக்கும்போது அமெரிக்க வாக்காளர்களுக்கு பிடித்த மாதிரி இருக்கிறார்.

'இதைச் செய்யாதே; வீட்டுப்பாடம் செய்' என்றெல்லாம் கட்டளை இடும்போதுதான் வாக்காளர்களுக்கு கோபம் கலந்த வெறுப்பு வருகிறது. தாத்தா, பாட்டி, அத்தை, நண்பர் என்று பாசம் திசை மாறுகிறது.

ஜனநாயகக் கட்சியின் ஒபாமா மேல் இன்னும் தூஷணப் பட்டியல் துவங்கவில்லை. ஹில்லாரியை வெறுத்து ஒதுக்குவதற்கென்றே ஆயிரத்தெட்டு வலையகங்கள் இருக்கின்றன. இதெல்லாம் கனகச்சிதமாக அரங்கேற்றும் குடியரசு கட்சி வேட்பாளரே இன்னும் முடிவாகத்தால் அவர்கள் அடக்கி வாசித்து வருகிறார்கள்.

மிட் ராம்னி இடைவிலகல்

குடியரசு கட்சியின் வேட்பாளராகும் போட்டியில் இருந்து தாற்காலிகமாக விலகிக் கொள்வதாக முன்னாள் மாஸசூஸட்ஸ் ஆளூநர் மிட் ராம்னி அறிவிக்கப் போவதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போட்டியில் இருந்து முற்றிலுமாக விலகிக் கொள்ளாமல் இவ்வாறு இடைநிறுத்துவதன் மூலம், ஏற்கனவே பெற்றிருந்த வெற்றி மாகாணங்களை கைவிட்டு விடாமல் தக்கவைத்துக் கொள்ள இயலுகிறது. பணம் செல்வழிப்பதையும் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். வேட்பாளருக்கான இறுதி முடிவில் எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம்.

மிட் ராம்னி இடைவிலகியதால் குடியரசு கட்சிக்கான போட்டியில் தற்போது ஜான் மெகெயின், மைக் ஹக்கபீ, ரான் பால் ஆகியோர் மட்டுமே களத்தில் உள்ளனர். கடந்த செவ்வாய் நடந்த தேர்தலில் ஜான் மெக்கெயின் பெரும்பான்மை பெற்றிருந்தாலும், யார் வேட்பாளர் என்று அறுதியிட்டு சொல்ல இயலாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. இதே நிலை பின்வரும் மாகாணங்களிலும் தொடர்ந்தால், மிட் ராம்னியின் பிரதிநிதிகள் (delegates) முக்கியத்துவம் அடைவார்கள்.

இப்பொழுது சில மேற்கோள்கள்: விவாதம், கருத்து, தற்போதைய நிலை: ஒபாமா வெல்லட்டும்
இலவச கொத்தனார்: ஹிலாரி அதிபரானால் பில் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் நியமிக்கப்படும் சாத்தியக்கூறு இருப்பதாகச் சொல்லப்படுவது

சுந்தரமூர்த்தி: இப்போது முதன்மை கட்டத் தேர்தலில் ஹிலரி (பெண்) - ஒபாமா (கறுப்பர்) போட்டியே இவ்வளவு ஆவலைத் தூண்டுகிறதென்றால், அரசியல் பண்டிதர்கள் கணித்தமாதிரி இறுதித் தேர்தல் ஹிலரி vs காண்டி என்றிருக்குமானால் கன்சர்வேடிவ் வெள்ளைக்கார ஆண்களுக்கு எவ்வளவு பெரிய சிக்கல்? வெள்ளைக்கார லிபரல் பெண்ணை ஆதரிப்பதா அல்லது கறுப்பு கன்சர்வேடிவ் பெண்ணை ஆதரிப்பதா?

சன்னாசி:ஒபாமா விஷயத்தில் பராக் ஹூசைன் ஒபாமாவின் பெயரிலிருக்கும் 'மத்திப் பெயர்' இன்னும் முழு அளவில் வலதுசாரி மீடியாக்களால் வம்பிழுக்கப்படவில்லை. ஜனநாயகக் கட்சியின் நாமினேஷன் கிடைத்தால் முழு வீச்சில் இது இறங்குமென்று நினைக்கிறேன்.

... இந்த வருடமும் swift boat veterans 'for truth' கள் மறுபடி வரலாம், அல்லது ஒசாமாவிடமிருந்து தேர்தல் நேரத்தில் ஒரு வீடியோ வரலாம்.

சில கேள்விகள்:

இ.கொ.://ரான் பால் அவர்களின் நிலைப்பாடுகள் பல எனக்குப் பிடித்திருக்கிறது.// சு.மூ.: எந்தெந்த நிலைப்பாடுகள்?

1. அமெரிக்காவின் பணம் அமெரிக்காவுக்கே செலவழியட்டும் என்பது பலருக்கு ஒப்புதலாக இருக்கிறது. ஆப்கானிஸ்தான், இராக், இரான் என்று சண்டைக்குப் போகாதே என்கிறார். 'அவர்கள் அணு ஆயுதம் வைத்துக் கொண்டால் உங்களுக்கென்ன குடிமுழுகிப் போகிறது' என்று பட்டும் படாமலும் இருக்க வைப்பேன் என்கிறார்.

2. வருமான வரியே இல்லாத அமெரிக்காவைக் கொண்டு வருவேன் என்பது பலருக்கு பிடித்திருக்கிறது. AMT எனப்படும் குறைந்தபட்ச மாற்று வரி அல்லது எளிமையாக்கப்பட்ட வருமான வரி போன்றவற்றுக்கு நெடுங்காலமாக அபிமானிகள் இருந்து வருகிறார்கள். தற்போதுள்ள மூன்று குழந்தை, இரண்டு மனைவி, ஒன்றரை நிறுவனம், அரை வீடு என்றால் இத்தனை தள்ளுபடி என்னும் குழப்ப விதிகளை எல்லாம் நீக்குவேன் என்பதும் சிலரை கவர்ந்திழுக்கிறது.

நியூ யார்க் மேயர் ப்லூம்பர்க்

இவர் ஜனாதிபதி வேட்பாளராக உள்ளே நுழைந்தால் அல்லது ஒபாமவிற்கு/மெகெயினுடன் துணை ஜனாதிபதியாக நுழைந்தால்… என்று பல அனுமானங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது.

இவரும் நியு யார்க் சார்பாக போட்டியிட்டு வென்றவர் என்பதால், ஹில்லரி க்ளின்டனுடன் ஜோடி கட்ட முடியாது. ஒபாமாவுடன் மட்டுமே துணை ஜனாதிபதியாக சேர முடியும்.

ப்ளூம்பெர்க் போட்டியிட்டால் யாருடைய வாக்குகள் அதிகமாக சிதறும்?

1) நியு யார்க் செனேட்டர் ஹில்லரி - சென்ற முறை ஜனநாயகக் கட்சி எளிதில் வென்ற நியு ஜெர்சி, நியு யார்க், கலிஃபோர்னியா போன்ற இடங்களில் தோல்வியைத் தழுவலாம்.

2) முன்னாள் சக குடியரசு கட்சி வேட்பாளர் மெக்கெயின் - மதில் மேல் பூனைகள் நிறைந்த ஒஹாயோ, மிச்சிகன் போன்ற இடங்களில் குடியரசு கட்சி வாக்காளர்கள் சிதறலாம்.

3) புது இரத்தங்களை வாக்குசாவடிக்கு வரவழைக்கும் ஒபாமா?

கூடவே ரால்ஃப் நாடர் கூட களத்தில் குதிக்கப் போவதாக பேசிக் கொள்கிறார்கள். அவரும் வந்துவிட்டால் குடியரசு கட்சிக்கு டபுள் போனசாக அமையலாம்.

துணை ஜனாதிபதி

மெக்கெய்னுக்கு இருக்கும் காக்கேசிய, கத்தோலிக்க ஆதரவை மழுங்கடிக்க எட்வர்ட்ஸ் துணை ஜனாதிபதியாக நின்றால் ஓரளவுக்குச் சாத்தியமாகும். ஒபாமா என்றால் அவர் சேரக்கூடும்

எட்வர்ட்ஸ் துணையாக இருப்பதை இருவருமே விரும்ப மாட்டார்கள். உதவி ஜனாதிபதிக்கு போட்டியிடுபவர்களுக்கு இரண்டு லட்சணங்களைப் பார்க்கிறார்கள்:

1. அவரால் எத்தனை மாகாணங்களில் வெற்றி வாய்ப்பு பலமடையும்?
2. எவ்வளவு தூரம் கீழிறங்கி ஒண்டிக்கு ஒண்டி சண்டையில் குதித்து, எதிர்க்கட்சி வேட்பாளரை அலற வைப்பார்??

சென்ற தேர்தலில் 'அடுத்த முறை நமக்கு வாய்ப்பு வரலாம்' என்று ஜான் எட்வர்ட்ஸ் அடக்கி வாசித்து நேர்மறையாக பட்டும் படாமலும் பிரச்சாரம் செய்ததை ஜான் கெர்ரி மறந்தாலும் க்ளின்டன் மறந்திருக்க மாட்டார்.

மேலும் ஜான் எட்வர்ட்சால் தனது பிறந்த மாநிலத்தையே வெற்றி கொள்ள இயலவில்லை. இவரால் எப்படி ஜனாதிபதியாகும் வாய்ப்பு பிரகாசமப் போகிறது என்றும் தள்ளுபடியாவார்.

மெக்கெய்ன் ஒரு அசைக்க முடியாத நபர்

ஊடகங்கள் அப்படித்தான் கட்டமைக்கிறது. மேலும் சமயத்துக்கு தக்கவாறு மாறிக் கொள்வதில் மெக்கெயின் வல்லவர்.

இன்றைய தேதியில் ஒரு பழமைவாதிக்கும் ஒரு மிதவாதிக்கும் இடையேதான் குடியரசு கட்சியில் போட்டி நிலவும் வாய்ப்பு. ரீகனுக்கும் அப்பா புஷ்ஷுக்கும் நடந்த போட்டி போன்றவற்றை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆரம்பத்தில் இருந்தே மெக்கெயின் மிதவாதியாக தோற்றம் காண்பித்து போட்டியிட, எதிரணியில் பழமைவாதியாக சித்தரிக்கப்பட மிட் ராம்னி மட்டும் போட்டாபோட்டி போட்டுக் கொண்டிருந்தார். மாஸசூஸ்ட்சுக்கு ஒரு நிலை, ஜனாதிபதியாக இன்னொரு நிலை என்று ராம்னி அவதாரம் எடுத்ததை விரும்பாத குடியரசு கட்சி வாக்காளர்கள், மைக் ஹக்கபீ பக்கம் சாய்ந்துள்ளனர்.

மிதவாதிகள் பக்கம் இருந்த ரூடி ஜியுலீயானியும் விலகிக்கொள்ள தனிக்காட்டு ராஜாவாக மெக்கெயின் உள்ளார்.

நாளைய தேதியில் குடியரசு கட்சி வேட்பாளராகி விட்டால், தன் 'கொள்கை'களை (?!) கட்சி விருப்பதிற்கேற்ப தளர்த்திக் கொள்ள தயங்கக் கூடாது என்பதுதான் ஆன் கூல்டர், ரஷ் லிம்பா போன்றவர்களின் விருப்பம்.

மெகெயின் x ஒபாமா:

இருவருமே தங்களது கட்சிகளின் விசுவாசிகளத் தவிர்த்து புதிய ரத்தத்தைக் கவர்ந்திழுக்கிறார்கள். இளைஞர்களை வாக்குப்பெட்டிக்கு வரவைப்பதில் ஒபாமா முன்னணியில் இருக்கிறார் என்றால் நடுநிலையாளர்களை மெகெயின் சொக்குப்பொடி போடுகிறார்.

சென்ற முறை புஷ் வென்ற அனைத்து மாகாணங்களையும் இம்முறையும் குடியரசு கட்சி தக்கவைத்துக் கொள்ளுமாறு மெக்கெயின் பேசுகிறார்; நடந்து கொள்கிறார். ஒஹாயோ, ஃப்ளோரிடா போன்ற இடங்களை ஒபாமா (அல்லது) ஹில்லாரி தட்டி பறிப்பது மிகவும் துர்லபம்.

இறுதியாக சில பலஸ்ருதிகள்:

1. ஜனநாயகக் கட்சி சார்பில் யார் வேட்பாளர்: இன்றைய தேதியில் ஹில்லரி க்ளின்டனுக்குதான் சாத்தியம் அதிகம் இருக்கிறது. கட்சியில் உள்ள செல்வாக்கு, பெருந்தோல்வி காணாத நிலை மற்றும் சிறிய அளவுதான் என்றாலும் பெரும்பான்மை பிரதிநிதிகள்.

2. குடியரசு கட்சி: மிட் ராம்னி விலகிவிட்டார். ரான் பால் எதற்காக இன்னும் இருக்கிறார் என்பது அவருக்கே தெரியாது. ஹக்கபீ துணை ஜனாதிபதியாவது ஆகிவிடும் முடிவோடு இருக்கிறார். மெக்கெயின் எல்லோரையும் சமாதானப்படுத்தி தனிப்பெரும் தலைவராகி விடுவார்.

3. வெள்ளை மாளிகை யாருக்கு: ஒபாமா நின்றால் ஜனநாயகக் கட்சி வெற்றியடையும் வாய்ப்பு பிரகாசம். ஹில்லரி என்றால் சிரமபிரயத்தனம்தான். நடுவில் கரடியாய் ராஸ் பெரோ அல்லது ரால்ஃப் நாடெராக மூன்றாம் வேட்பாளர் எந்தக் கட்சியைக் கவிழ்க்கப் போகிறார், அடுத்த பில் கிளின்டனாகவோ அல்லது ஜார்ஜ் புஷ்ஷாக எவரை அதிர்ச்சி வெற்றிய்டையவைக்கப் போகிறார் என்பதில்தான் சஸ்பென்ஸ் இருக்கிறது.

| |
oooOooo
                         
 
பாஸ்டன் பாலாஜி அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |