எனக்கு பசி அதிகமாக இருக்கிறது. உங்களால் முடிந்த உதவியை செய்ய முடியுமா? என்று சொல்லி வீடுகளில் கிடைத்தவற்றை வாங்கிச் சாப்பிட்டு வாழ்ந்து வருகிறார் குணசீலன். இதில் வியப்பு என்னவென்றால் குணசீலன் இயற்யியலில் எம்.எஸ்.சி. பி.ஹாச்.டி பட்டம் பெற்றவர். 2004ம் ஆண்டு சுனாமி தாக்குதலில் தனது குடும்பத்தை இழந்தவர். மனநலம் பாதித்து, பித்துப் பிடித்து எல்லாவற்றையும் இழந்து, நாடோடியாய் பல ஊர்களில் வாழ்ந்து வருகிறார்.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டே திரிந்தவரிடம் யதார்த்தமாக பேசிய பொழுது வாழ்க்கை இவ்வளவு வினோதமானதா? என்று தோன்றியது. நாகை மாவட்டத்தில் கடலை ஒட்டிய வீட்டில் காதலித்து, வீட்டின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்ட அன்பான மனைவி, இரண்டு பெண் பிள்ளைகளோடு வாழ்ந்து வந்தேன். தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியர் வேலை. வாழ்க்கை வசந்தமாகவே சென்றது. மகிழ்ச்சியாகவே வாழ்ந்த எங்களை 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வந்த சுனாமி என்ற கடல் அலை பிரித்து விட்டு சென்று விட்டது. அலையோடு போன எனது மனைவி, குழந்தைகள் யாராலும் திருப்பிக் கொண்டு வந்து தர முடியவில்லை. போனவர்களை நான் எங்கு கண்டெடுப்பேன். செயல் இழந்து போன எனது வீட்டை பார்த்த பொழுது எனக்கு அங்கு இருக்க பிடிக்கவில்லை. அப்பொழுது அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்ட இந்து முன்னனியினர் கொடுத்த காவி வேட்டி, துண்டை வாங்கிக் கட்டிக் கொண்டு கிளம்பியவன் தான். இன்று பல இடங்களில், பல மனிதர்களிடையே வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது.
போட்டான், லெப்டான், நியூட்ரினோ, மிசான், ஹைப்ரான், பாரியான் போன்ற துகள்களை இயற்பியலின் அடிப்படைத்துகள்கள். இது போல் தான் இங்கு மனிதர்களும் இருக்கிறார்கள். நல்லவன், கெட்டவன், நல்லவள், கெட்டவள், அடிப்பவள், விரட்டுபவன், அனைப்பவன், அன்பை பொழியும் பெண்களாக இங்கு இருக்கிறார்கள். நான் யாரையும் டிஸ்டப்பன்ஸ் செய்வது கிடையாது. ஏன் செய்ய வேண்டும், எதற்காக செய்ய வேண்டும். வயிறு பசித்தால் போய் வீடு, வீடாக கேட்பேன். வயிறு பசிக்க வில்லை என்றால் நடையைக் கட்டுகிறேன். வாழ்க்கை, ஆகா வாழ்க்கை அழகாக, ஒரு ருதர்போர்டு அணு வடிவமாக இருக்கிறது என்று சொல்லி கண்களை மூடியபடி இருக்கிறார். திடீரென்று சிரிக்கிறார், மௌனமாகிறார், கண்களில் கண்ணீர் கசிகிறது.
இரவு நேரங்களில் எங்கு தங்குகிறீர்கள், வாருங்கள் பழையபடி வாழ்வதற்கு முயற்சி செய்து பார்க்கலாம் என்ற கேள்வியை அவர் முன் வைத்த பொழுது............
கடல் அலை வந்தால் நீயும், நானும் தாக்குப்பிடிக்க மாட்டோம். நியூக்ளியர் பாம் எப்படி வெடிக்கும் தெரியுமா? பார்த்திருக்கிறாயா? அதப் பார்த்தால் மகனே நீ சாம்பல் தான். நான் பார்த்தேன். கடல் அலைகளின் மூலம் பார்த்தேன். என்னிடம் கேமிராக்கள் அப்பொழுது கையில் இல்லாமல் போய் விட்டது. இருந்திருந்தால் அதனை படம் எடுத்து உனக்கு விளக்கி இருப்பேன். உங்களிடம் மார்க்கர் பேனா இருக்கிறதா? இருந்தால் கொடுங்கள், உங்களுக்கு விளக்கமாக சொல்கிறேன். ஆமா உனக்கு பிசிக்ஸ் பத்தி தெரியுமா? கடலை பார்த்திருக்கிறாயா? என்கிறார்.
இரவு நேரத்தில் தூங்குவதற்கு இடமா இல்லை. பல இடங்கள் இருக்கிறது. யாரும் என்னை தொந்தரவு செய்வது கிடையாது. என்னாலும் யாருக்கும் தொந்தரவு கிடையாது. இருக்கவே இருக்கிறது. இந்த காவி வேட்டி, துண்டு. இதற்கு நல்ல மரியாதை இருக்கிறது. நேற்று ஒரு பழக்கடைக்காரன் என்னைக் கூப்பிட்டு சாமி இந்த, இத சாப்பிடு என்று சொல்லி 5 வாழைப்பழத்தைக் கொடுத்தான். எனக்கு பசி இருந்ததால் வாங்கிக் கொண்டு, நான் சாமி இல்லை. புரப்பஸர், டிப்பார்ட்மென்ட ஆப் பிசிக்ஸ் என்றேன். என்னைப் பார்த்து போடா லூசு என்று சொல்லி விட்டான். பாவம் அவன் புத்தி அவ்வளவு தான், என நினைத்துக் கொண்டேன் என்று சொல்லி வரிசையாக இருக்கும் வீடுகளை பார்த்துக் கொண்டே இருக்கிறார். குளிக்காத உடல், அழுக்குப் படிந்த தலை, சரி செய்யப்படாத முடி, தாடி என்று பார்ப்பதற்கு பரிதாபமாக இருக்கிறார்.
இவரை ஒரு புகைப்படம் எடுக்கலாம் என்று நினைத்து கேமிராவை எடுத்த பொழுது, ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்து விட்டார். திடீரென்று தமிழுக்கு மாறுகிறார். ஜக்னோஸ்கோப்ஸ் ஒரு தொலைக்காட்சி கேமிரா. அது போட்டோக்களை மின் அலைகளாக மாற்றும் தன்மை உடையது. ஜக்னோஸ்கோப்பில் உள்ள படங்கள் பிம்பத்தின் ஒளி தன்மைக்கு ஏற்ப மின் அலைகளை ஏற்படுத்தும் என்கிறார்.
இரண்டு டீ, சில ரொட்டி பாக்கெட்டை வாங்கிக் கொண்டு ஒரு மரத்தடியில் உட்கார்ந்தோம். பேராசிரியருக்கே உரிய தன்மையோடு, ரொட்டியை அழகாக எடுத்து டீயில் நனைத்து, எடுத்து சாப்பிடுகிறார். ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார். டீயைக் குடித்துக் கொண்டு கப் ஆப் டீ கதை தெரியுமா என்கிறார். தெரியாது என்றவுடன் ஆங்கிலத்தில் விவரிக்க ஆரம்பித்து விட்டார். நடப்பு அரசியல், இன்றைய காலக்கட்டம் எதுவுமே இவரது மூளைக்கு சென்றடைய வில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் இன்றைய தமிழக முதல்வராக இருப்பதாக சொல்கிறார். அவரது ஆட்சி சரியில்லை என்கிறார். ஆனால் அவரை எனது மனைவிக்கு அதிகமாக பிடிக்கும் என்கிறார். ஒரு இந்து ஆங்கில பத்திரிக்கையை வாங்கி படிக்கக் கொடுத்த பொழுது, ஜ டோன்ட் லைக் இட். வேறு எதாவது வேண்டுமா ஸார் என்ற பொழுது வேண்டாம். நான் அடுத்தவரிடம் தேவையில்லாத பொழுது எதையும் வாங்கிக் கொள்வதில்லை என்கிறார். சிறிது பணத்தை கொடுத்து வைத்துக் கொள்ளுங்கள் தேவைக்கு உதவும், என்னோடு வாருங்கள் என்னோடு தங்கிக் கொள்ளலாம் என்ற பொழுது, வாழ்க்கை அருமையான ஒன்று அதனை நான் அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன் என்று சொல்லி திடீரென்று விலகி வேகமாக நடக்கத் தொடங்கி விட்டார். கனத்த மதிய நேர வெயிலில் எதையோ பிடிப்பதற்கு ஓடும் மனிதர் போல அவர் செல்வதை பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது.
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கிலும் மெய்ப்பொருள் காண்பது.........
என்ற மாணிக்கவாசகரின் பாடல் வரிகள் எங்கிருந்தோ ஒலித்துக் கொண்டிருந்தது.
|