பிப்ரவரி 09 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
ஹாலிவுட் படங்கள் : 21 Grams
- பாஸ்டன் பாலாஜி
| Printable version | URL |

திரைப்படத்தில் இருந்து சில வசனங்கள்:

உண்மையைத் தேடி கண்டுபிடிப்பவன், அதற்கான தண்டனையைப் பெறத்தக்கவன் தான்! (Whoever looks for the truth deserves punishment for finding it.)

உன்னையும் என்னையும் இணைக்க உலகம் உருண்டது :: Eugenio Montejo

உன்னையும் என்னையும் இணைக்க உலகம் உருண்டது
தனக்குள்ளும் நமக்குள்ளும் சுழல்வது
மன்றத்தில் செதுக்கியுள்ளது போல்
கனவாக இறுதியில் நம்முடன் இணைகிறது

21gramsஅமோரஸ் பெரோஸை (Amores Perros) இயக்கிய அலெக்ஸாண்ட்ரோ கொன்ஸாலஸின் (Alejandro Gonzalez) படம் என்பதால் முறுக்குப்பிழி நடைக்கும் சிதறலானத் திரைக்கதைக்கும் தயாராகவேப் பார்க்க ஆரம்பிக்கிறேன். 'மெமண்டோ' கொடுத்த கிறிஸ்டோபர் நோலனையும், க்வெண்டின் டாரண்டினோவையும் நினைத்துக் கொள்கிறேன்.

முந்தையப் படத்தைப் போலவே திரைப்படத்தில் விபத்து உண்டு. விபத்தினால் மூன்று பேர்களின் வாழ்வு பாதிக்கிறது. மூவருக்கும் விதவிதமான வண்ணக்கலவைகள் குறியீடு கண்ணை உறுத்தாமல் கிடைக்கிறது. ஒற்றுமைகள் அவ்வளவே.

சாலை விபத்து ஒன்றில் கணவனையும் இரு மகள்களையும் இழக்கிறாள். சாகும் தருவாயில் மாற்று இதயத்துக்காக நாட்களை எண்ணிக் கொண்டிருப்பவன் இரண்டாவது கதாபாத்திரம். விபத்தை செய்து குற்றவுணர்ச்சியில் துடிப்பவர் மூன்றாமவர்.

மூன்று பேரின் குணாதிசயங்களையும் அவர்களின் உறவுகளையும் நட்புகளையும் அன்றாட சிக்கல்களையும் நேர்க்கோட்டில் சொல்லாவிட்டாலும், கோர்வையாக நிரப்பிக் கொண்டு வருகிறார்கள். எடிட்டிங், ஒளிப்பதிவு, திரைக்கதை மூன்றுமே, நம்மை இயல்பாக படத்தில் உள்ளிழுத்து ஆட்கொள்ள, இயக்குநருக்கு வாகாக அமைந்திருக்கிறது.

எல்லாமே விதிப்படிதான் நடக்கும் என்னும் முகாரியான ஆரம்பம்.

உயிருக்கு ஊசலாடும் சான் பென் (Sean Penn). திருந்தி நேர்வழியில் செல்ல நினைக்கும் முன்னாள் சிறைவாசி பெனிசியோ டெல் டோரோ (Benicio Del Toro). குடும்பமே விபத்தில் இழந்தபிறகு, கணவனின் கடைசி நிமிடங்களில் இதயத்தை தானமாக அளிக்கும் நவோமி வாட்ஸ் (Naomi Watts).

சஸ்பென்ஸ் த்ரில்லரை பார்ப்பது போல் படம் முன்னேறுகிறது. யார் இறந்தார்கள்? எவரைக் கொலை செய்ய சான் பென் திட்டமிடுகிறான்? தனிமையில் வாடி, போதை உட்கொள்ளும் நவோமி எப்படி மகிழ்ச்சியாக இருந்தாள்?

துப்பறியும் கதையில், உளவியல் ஆராய்ச்சி நடத்தும், முடிச்சுகளை உங்களுக்குள்ளேயே அவிழ்க்க சொல்லும் திரைக்கதை.

கதாநாயகர்கள் மூவருமே பழக்கத்திற்கு அடிமையானவர்கள். சிகரெட் பிடித்தால் கொஞ்சநஞ்ச இதயத்துடிப்பும் நின்றுவிடும் என்னும்போதும் நிறுத்த முடியாதவன் சான் பென். போதை மருந்தை விட்டு விலகி வந்திருந்தாலும், குழந்தைகளின் பிரிவுத்துயரினால், மீண்டும் பழைய சிநேகங்களை அழைத்து, போதைக்குள்ளாகும் நவோமி வாட்ஸ். குடியை விட்டு கடவுளைக் கண்டெடுத்து, மீண்டும் குடிக்க ஆரம்பிக்கும் பெனிசியோ டெல்டோரோ.

தெய்வம் என்பதும், மழலைகளின் அன்பு என்பதும், வாழ்க்கை என்பதும் போதைதானோ என்று மனதிடம் கேட்டுப் பார்க்கிறேன்.

கதாபாத்திரங்கள் அனைத்துமே நம்பக்கூடியதாக உலாவுகிறார்கள். விபத்து நடத்திய கணவனிடம் 'ஒப்புக் கொள்ளாதே' என்று கதறி, மீறி போலீஸிடம் சரணடைந்தவனை சாதுரியமான வக்கீல் கொண்டு மீட்டெடுக்கும் பெனிசியோ டெல் டோரோவின் மனைவி; முன்னாள் காதலன் சான் பென், உயிருக்குப் போராடுகிறான் என்பதை அறிந்ததும் அவனுக்கு சேவை செய்யத் திரும்பும் பிரிட்டிஷ் காதலி; மகளின் எல்லா உறவுகளும் விபத்தில் காணாமல் போன பின், விட்டேத்தியாக நடந்ததையே எண்ணிப் புழுங்காமல், வாழ்க்கையின் அடுத்த அடிகளை நோக்குமாறு சொல்லும் அப்பா; விபத்தை நிகழ்த்தியவனைக் கொல்லத் துடிக்கும் நவோமி வாட்ஸ்; இதயம் கொடுத்தவளைக் கண்டு கொள்ளத் துடிக்கும் சான் பென்...

கழிவிறக்கமா, பச்சாதபமா, ஆதுரமா, இயலாமையா, விதி வசமா, சுய மீட்பா, கடமையா, இறை நம்பிக்கையா... பல தேடல்களை முன்னிறுத்துகிறார்.

மரணிக்கும் ஒவ்வொருவரின் எடையும் 21 கிராம் குறைவதாக டங்கன் மெக்டூகல் (Dr. Duncan MacDougall) ஆராய்ச்சியின் முடிவில் கண்டுபிடித்திருக்கிறார். எத்தனை முறை நம்முடைய ஆன்மா இறக்கிறது என்பதை நீங்கள் மட்டுமே கணிக்க முடியும்.

நமக்கு எத்தனை உயிர்கள் இருக்கிறது? எத்தனை முறை இறக்கிறோம்? நாம் இறக்கும் தருணத்தில் இருப்பத்தியொன்று கிராம்களை, நம் உடம்பு இழப்பதாக சொல்கிறார்கள். துல்லியமாக 21 கிராம்கள். அந்த 21 கிராம்களுக்குள் எதை அடைக்க முடியும்? அந்த எடை நம்மை விட்டு செல்வதால், எதனை இழக்கிறோம்? அதனால் என்ன கெட்டுப் போகிறது? எதை அடைகிறோம் ?

| |
oooOooo
பாஸ்டன் பாலாஜி அவர்களின் இதர படைப்புகள்.   ஹாலிவுட் படங்கள் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |