பிப்ரவரி 10 2005
தராசு
வ..வ..வம்பு
பங்குச்சந்தை ஒரு பார்வை
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
சிறுகதை
நையாண்டி
மஜுலா சிங்கப்புரா
கவிதை
ஆன்மீகக் கதைகள்
சமையல்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • ஹர்ஷத் மேத்தா
 • - சசிகுமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  பங்குச்சந்தை ஒரு பார்வை : பட்ஜெட்டை எதிர்நோக்கி...
  - சசிகுமார்
  | Printable version |

  பாண்டிச்சேரி வீதிகளில் குடிமகன்கள் நடக்கும் அழகைப் பார்த்திருக்கிறீர்களா ? குடிமகன்கள் நடக்கும் பொழுது  அவர்களின் நடையில் ஒரு கவிதை தென்படும். தங்களை மறந்து உச்சகட்ட நிலையை அடைந்தப் பிறகு எதைப் பற்றியும் கவலைப்படாத மனநிலை. அந்த ஆனந்த நிலையில் ஒரு புறம் நகர்ந்து, பிறகு மறுபடியும் பழைய  நிலைக்கே வந்து, பிறகு ஆனந்த நிலை முற்றிப் போய் ஒரு இடத்தில் விழுந்து, பின் தன்னுர்வைப் பெற்றப்  பிறகு எழுந்து, ஏன் விழுந்தோம் என்று ஆராய்ந்து, அடுத்தக்கட்ட ஆனந்த நிலைக்காக நேர்கோட்டில் வேகமாய்  பார்களை நோக்கி நகருவார்கள்.

  பங்குச்சந்தையும் அதைப் போன்ற ஒரு தள்ளாட்டத்தில் தான் இருக்கிறது. ஒரு நாள் உயர்வு பின் சரிவு  மறுபடியும் உயர்வு என்று தள்ளாடுகிறது. இந்த வார (பிப்ரவரி 7-11) மொத்த வர்த்தகத்திலும் பங்குச்சந்தை  சொற்ப அளவிலான 6 புள்ளிகள் உயர்வையேப் பெற்றது. கடந்த வாரம் (சனவரி 31 - பிப்ரவரி 4) சுமார் 200  புள்ளிகள் உயர்வைப் பங்குச்சந்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

  இது வரை நிறுவனங்களின் காலாண்டு அறிக்கை, வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு  போன்றவற்றுக்கு ஏற்ப எகிறுவதும், உயர்வதுமாகச் சந்தை இருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் வரை நல்ல  உயர்வைப் பெற்றிருந்தச் சந்தை, இந்த ஆண்டு கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டது. அமெரிக்காவில் வட்டி விகிதம்  உயரக்கூடும் என்ற அச்சம், குறியீடுகளின் உயர்நிலை போன்றக் காரணங்களால் வெளிநாட்டு முதலீட்டு  நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை விலக்கிக் கொண்டன. ஆனால் கடந்த வாரம் வெளியானச் செய்தி இந்தக்  கவலையை
  தற்காலிகமாகப் போக்கியுள்ளது என்றுச் சொல்லலாம். US Federal Reserve அமெரிக்காவில் உள்ள  வட்டி விகிதத்தை 0.25% மட்டுமே உயர்த்தியுள்ளது. மேலும், வட்டி உயர்வு மிக நிதானமாக, சூழ்நிலைக்கு  ஏற்றவாறே உயர்த்தப்படும் என்றும் அறிவித்தது. இதனால் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில்  தங்களின் முதலீட்டைக் குறைத்துக் கொள்ளுமோ என்ற அச்சம் தற்காலிகமாக நீங்கியுள்ளது.

  இந்த வாரம் பங்குச்சந்தைக்கு நல்லச் செய்திகளும் கிடைக்கவில்லை, பாதகமானச் செய்திகளும்  கிடைக்கவில்லை. திங்களன்று 88 புள்ளிகளும், வியாழனன்று 13 புள்ளிகளும் மும்பை பங்குச்சந்தை குறியீடு  BSE சரிந்தது. செவ்வாயன்று 10 புள்ளிகளும், புதனன்று 49 புள்ளிகளும், வெள்ளியன்று 54 புள்ளிகளும் குறியீடு  உயர்ந்தது. ஆக, சந்தையில் ஒரு தெளிவானச் சூழ்நிலை இல்லை.

  ஏன் இத்தகையைத் தள்ளாட்டம் ?

  சந்தைக்கு எந்தத் திசையில் பயணிப்பது என்பதே தெளிவாகப் புலப்படவில்லை. ஏன் இந்த திடீர் குழப்பம் ?

  பிப்ரவரி மாதம் வந்தாலே சந்தைக்கு குழப்பம் வந்துவிடும். பட்ஜெட் பற்றிய எச்சரிக்கைத் தான் முக்கிய காரணம்.  பட்ஜெட் எப்படியிருக்குமோ ? நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எத்தகைய வளர்ச்சிப் பாதையை பட்ஜெட்  அமைத்துக் கொடுக்குமோ போன்ற எண்ணங்கள் தான் சந்தையை ஏற்ற இறக்க வர்த்தக நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளது. கடந்த ஆண்டு கூட மன்மோகன் சிங் தலைமையிலான புதிய அரசு அமைந்து அதன் முதல்  பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் வரை சந்தை ஏறுவது, இறங்குவதும் எனத் தெளிவானப் போக்கில்  பயணிக்காமல் திசை தெரியாமல் தடுமாறியது. ஆனால் பட்ஜெட்டிற்குப் பிறகு சந்தை எகிறத் தொடங்கி  வெளிநாட்டு முதலீடுகள் சந்தையில் குவிந்து, குறியீடுகள் வரலாறு காணாத உயர்வை எட்டியதும் அனைவரும்  அறிந்ததே.

  தொலைத்தொடர்புத் துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) 49% இருந்து 74%மாக  அதிகரிக்கும்  திட்டத்தை அரசு அறிவித்ததே பொருளாதாரச் சீர்திருத்தங்களை இந்த அரசு தொடரும் என்ற நம்பிக்கைக்குச்  சான்று. என்றாலும் கடந்தப் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பு இப்பொழுது தான்  வெளியாகியிருக்கிறது. தாமதமாக வந்தாலும் வரவேற்றகத்தக்கது. ஆனால் காப்பீட்டுத் துறையில்  அறிவிக்கப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடு இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்பதையும் கவனிக்க  வேண்டும்.

  நாட்டின் உள்கட்டமைப்பில் தொலைத்தொடர்பு ஒரு முக்கியமானத் துறை. உலகில் வேகமாக வளர்ச்சியடையும்  தொலைத்தொடர்ப்புச் சந்தையில் இந்தியா முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்தியாவில் தற்பொழுது சுமார் 90  மில்லியன் தொலைபேசிகள் இருக்கிறது. இது மேலும் வளர்ச்சியடைந்து இன்னும் இரு வருடங்களில் 200  மில்லியனை எட்டும் என்று இத் துறை வல்லுனர்கள் கணிக்கிறார்கள். இத் துறை சுமாராக 30%  வளர்ச்சியடைந்துக் கொண்டிருக்கிறது. 1991ல் இருந்து 2004 வரை இத் துறையில் சுமார் 9000 கோடிக்கு  வெளிநாட்டு நேரடி முதலீடு வந்துள்ளது. ஆனால் இந்தியாவின் பலப் பகுதிகளுக்கும் தொலைத்தொடர்பைக்  கொண்டுச் செல்ல பெரும் நிதி தேவைப்படுகிறது. இத்தகைய நிதி வெளிநாட்டு நேரடி முதலீட்டை அதிகரிப்பது மூலமாகக் கிடைக்கும்.

  இந்த அறிவிப்பு சந்தையிலும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக பார்தி போன்ற பங்குகள் நீண்ட கால  முதலீட்டில் அதிகம் உயரும் என்று கருதப்படுகிறது. ஆனால் தற்போதையச் சூழலில் இந்தப் பங்குகள் உச்சகட்ட விலையை எட்டி பிறகுச் சரிந்துள்ளது. இந்த வாரம் கூட இந்தப் பங்குகள் 208 ரூபாய்க்குச் சரிந்துள்ளது. ஆனால்  இந்தப் பங்குகள் கடந்த வாரம் 230 ரூபாயை எட்டியது குறிப்பிடத்தக்கது. இத் துறையில் தற்பொழுது அதிக அளவில் காணப்படும் புதிய முதலீடுகளால் நிறுவனங்களின் கடன் அதிகரிக்கும். இந்த முதலீடுகளால் குறுகிய  காலத்தில் லாபம் கிடைக்காது என்பது போன்றச் சிலக் காரணங்களால் இந்தப் பங்குகள் தற்பொழுது  சரிந்துள்ளன. ஆனால் இந்த நிறுவனங்களின் நீண்ட கால வளர்ச்சி பிரகாசமாகவே இருக்கிறது.

  சரி..இந்த வாரம் உயர்ந்தப் பங்குகளையும், சரிந்தப் பங்குகளையும் கொஞ்சம் கவனிப்போம்

  குறியீட்டுப் பங்குகளில் இந்த வாரம் ஆட்டோமோபைல் பங்குகள் நல்ல உயர்வைப் பெற்றிருந்தன. குறிப்பாக  மாருதி, பஜாஜ், ஹிரோ ஹோண்டா போன்றப் பங்குகள் ஏற்றமடைந்தன. மாருதிப் பங்குகள் இந்த வாரம் சுமார்  8% உயர்வைப் பெற்றிருந்தன. டாட்டா டீ, ABB போன்ற பங்குகள் 10% அதிகமான உயர்வைப் பெற்றன.

  இந்த வார துவக்கத்தில் கடுமையாகச் சரிவுற்ற இன்போசிஸ், சத்யம் போன்ற மென்பொருள் பங்குகள் வார  இறுதியில் ஒரளவுக்கு உயர்வை எட்டியன.

  ஹிந்துஸ்தான் லீவர், பார்தி போன்ற பங்குகள் கடுமையாகச் சரிவடைந்தன. கடந்தச் சில மாதங்களாக  நுகர்வோர் பொருட்களை தயாரிக்கும் துறையைச் (FMCG) சேர்ந்தப் பங்குகளுக்கு இனி எதிர்காலம் இருக்கும்  என்று கருதப்பட்டது. ஹிந்துஸ்தான் லீவர் போன்ற பங்குகள் ஒரு காலத்தில் பணம் காய்க்கும் மரமாக  கருதப்பட்டன. கடந்த ஆண்டு கடுமையானச் சரிவைப் பெற்ற இந்தப் பங்குகள், பிறகு கடந்தச் சில மாதங்களாக  உயர்வடைந்தன. ஆனால் இந்த வாரம் ஹிந்துஸ்தான் லீவர் பங்குகள் மறுபடியும் சரிந்தன. இவை மேலும் சரியக்கூடும்.

  ஹிந்துஸ்தான் லீவரின் காலாண்டு அறிக்கை இதனையே சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. வெள்ளியன்று  வெளியான இந் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையில் அதனுடைய லாபம் சுமார் 32% அளவுக்கு வீழ்ச்சி  அடைந்துள்ளது. விற்பனை 0.7% அளவுக்கு மட்டுமே உயர்ந்துள்ளது. கடுமையானப் போட்டிக் காரணமாக பொருட்களின் விலையை குறைக்க நேர்ந்ததால் தான் லாபத்தில் வீழ்ச்சி அடைந்ததாக இந் நிறுவனம்  தெரிவித்தது. ஆனால் பொருட்களின் விலை குறையும் பொழுது அதன் விற்பனை அதிகரித்திருக்க வேண்டும்.  மாறாக 0.7% அளவுக்கு மட்டுமே விற்பனை உயர்ந்துள்ளது.  இது ஏமாற்றத்தையே அளிக்கிறது. புதிதாகப் எந்தப்  பொருளையும் அறிமுகப்படுத்தாத சூழலில் இந் நிலையே இனியும் தொடரும் என்று தெரிகிறது. இந்தப் பங்குகள்  மேலும் சரியக்கூடும்.

  வரும் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் முக்கியப் பிரச்சனை நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit). நிதிப்  பற்றாக்குறையை குறைக்க, அரசின் வருவாயான வரி விதிப்பு முறைகளில் மாற்றங்களை நிதியமைச்சர்  அறிவிப்பார் என்றே தெரிகிறது. கடந்த வாரம், சர்வதேச மதிப்பீட்டு (Ratings) நிறுவனமான S&P (Standards and  Poor) இந்தியாவின் மதிப்பீட்டை ஒருப் படி உயர்த்தியுள்ளது - BB+. ஆனால் இந்தியா முதலீடு செய்வதற்கான மதிப்பீட்டில் இருந்து ஒரு படி கீழே உள்ளது. அதாவது இந்தியா முதலீடு செய்யத் தகுதியான நாடு அல்ல என்பது  இதன் பொருள். (இந்த மதிப்பீடே இதைப் போல இருக்கும் பொழுது இதற்கு முன் எத்தகைய மதிப்பீட்டில் நாம்  இருந்தோம் என்பதையும் கவனியுங்கள்)

  இந்தியாவிற்கு கடந்த ஆண்டு குவிந்த முதலீட்டைப் பார்க்கும் பொழுது இந்த மதிப்பீடு கேள்விகளை  எழுப்பினாலும் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறைத் தான் நமக்கு இந்த மதிப்பீட்டை பெற்றுக் கொடுத்துள்ளது.  இந்தியாவின் GDP யில் நிதிப் பற்றாக்குறை 10% மாக இருப்பதாலேயே முதலீட்டு பிரிவில் இந்தியா இடம்  பெறவில்லை. தற்போதையச் சூழலில் இந்தியாவின் மதிப்பீடு ஒரு படி உயர்ந்துள்ளது நல்லச் செய்தி தான்  என்றாலும், நமது பற்றாக்குறையை மறுபடியும் ஞாபகப்படுத்தியுள்ளது.

  பட்ஜெட் பற்றியத் தெளிவில்லாத சூழல், சந்தை திசை தெரியாமல் தள்ளாடுவதற்கு முக்கியக் காரணமாக  இருந்தாலும் பட்ஜெட் பற்றிய நம்பிக்கை சந்தையை அதிகம் சரிவடையாமல் காப்பாற்றியுள்ளது. நிதியமைச்சர்  ப.சிதம்பரம் இந்தியப் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் ஒரு தெளிவான நிதிச்  சீர்திருத்தமிக்க பட்ஜெட்டை தாக்கல் செய்வர் என்றே அனைவரும் கருதுகின்றனர். இந்தக் கருத்தும் சந்தையை  வெள்ளியன்று உயர்த்துவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. சந்தை வெள்ளியன்று சுமார் 55 புள்ளிகள்
  உயர்ந்தது.

  இது தவிர கடந்த மாதம் தங்களது முதலீடுகளை இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து விலக்கிக் கொண்ட  வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், இம் மாதம் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர். பங்குச்சந்தை உயரும்  பொழுதெல்லாம் லாபவிற்பனை (Profit Booking) சந்தையைச் சரிய வைத்தது. பட்ஜெட் நெருங்கும் சூழலில் ஒரு  வித எச்சரிக்கை உணர்வுடனே முதலீட்டாளர்கள் சந்தையில் காணப்பட்டனர். தங்களுக்கு லாபம் கிடைக்கும்  ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டனர். இதைப் போலவே சந்தை சரியும் பொழுதெல்லாம் குறைந்த விலைக்கு பங்குகளை வாங்குவதிலும் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். இதனால் அதிகமாக  எகிறாமலும் அதிகம் சரியாமலும் ஒரு தள்ளாட்டத்துடனேயே சந்தை இருந்தது.

  பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை இந்தப் போக்கே நீடிக்க கூடும்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2005 Tamiloviam.com - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |