கோஷ்டிப்பூசலும் காங்கிரஸும் பிரிக்க முடியாத ஒன்று என்று ஆகிவிட்ட இந்தக்காலத்தில் தன்னுடைய பங்கிற்கு கோஷ்டிப்பூசல் செய்து வந்த முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி இன்று தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். காமராஜர் காலத்திலிருந்த ஆரோக்கியமான அரசியலை தொடர்ந்து வழி நடத்திச் செல்லும் இயக்கமாக தனது கட்சி இருக்கும் என்றும், காங்கிரஸ் கட்சியில் தற்போது இருக்கும் சோர்வு, தொய்வு கோஷ்டி சண்டை முதலியவற்றிலிருந்து கட்சி மற்றும் தொண்டர்களை மீட்கவே தான் இந்தப் புதிய கட்சியை ஆரம்பித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
வரப்போகும் தேர்தலில் அவரது புதிய கட்சி அ.தி.மு.கவுடன் கூட்டு வைக்கும் என்று சூசகமாகத் தெரிவித்துள்ள அவர் எதற்காக புதிய கட்சி ஆரம்பித்தார் என்பது சின்ன குழந்தைக்கு கூடத் தெரியும். காங்கிரஸில் முக்கியத்துவம் பெற முடியாமல் போகும் முன்னாள் தலைவர்கள் செய்யும் ஒரு வழக்கமான வேலையைச் செய்துவிட்டு அதற்கு அவர்கள் வழக்கமாக சொல்லும் அதே காமராஜர் கதையையும் சொல்லியுள்ளார் ராமமூர்த்தி. இன்று கட்சியிலிருந்து பிரிந்து செல்லும் இவர் அடுத்த தேர்தல் வரும் போது தன்னுடைய கட்சியை தாய்கட்சியுடன் இணைத்துவிட்டு தனக்கும் தனக்கு வேண்டியவர்களுக்கு தாங்கள் வேண்டுவதை எப்படியாவது கேட்டுப் பெறுவார் என்பதும் தெரிந்த ரகசியம்தான். இதற்கு முன்பு காங்கிரஸிலிருந்து பிரிந்து மீண்டும் காங்கிரஸிலேயே சேர்ந்த பல தலைவர்கள் சொன்னதையும் செய்ததையும்தான் ராமமூர்த்தி தற்போது செய்துள்ளார்.
என்னதான் தலைகீழாக நின்றாலும் காமராஜரைப் போன்ற தலைவரை தமிழகம் மீண்டும் பார்க்கப்போவதும் இல்லை. காமராஜர் ஆட்சி தமிழகத்தில் அமையப்போவதும் இல்லை. அப்படி அமைய இன்றைய அரசியல்தலைவர்கள் விடவும் மாட்டார்கள். இதுவே நிதர்சனமான உண்மை. இதை மக்கள் என்று அப்பட்டமாக உணர்வார்களோ அதுவரை காமராஜர் பெயரைச் சொல்லி கட்சி நடத்தி சொந்த லாபம் பார்க்க நம் அரசியல்வாதிகள் தயங்கவே மாட்டார்கள்.
|