Tamiloviam
பிப் 26 2009
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : எரியும் உள்ளூர் பிரச்சனை
- மீனா [feedback@tamiloviam.com]
  Printable version | URL |

 கடந்த 3 மாதங்களாக இலங்கைப் பிரச்சனையைப் பற்றி தமிழகத்தில் பேசாத நாளில்லை - நடத்தாத போராட்டமில்லை என்னும் அளவிற்கு அரசியல்வாதிகள் ஸ்டண்ட் அடித்து வருகிறார்கள். தங்களது போராட்டங்களால் தாங்கள் சாதிக்கப்போவது ஒன்றுமில்லை என்பது நன்றாகத் தெரிந்தும் மக்களை தங்கள் பக்கம் ஈர்க்க அரசியல்வாதிகள் கட்சி பாகுபாடின்றி இதைச் செய்து வருகிறார்கள். இவர்களில் எத்தனைப் பேர் ஈழத்தமிழர்கள் மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் என்பதும் எத்தனை பேர் புலிகள் அனுதாபிகள் என்பதும் எத்தனை பேர் வெறும் அரசியல் ஆதாயத்திற்காக இத்தகைய போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதும் மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்பது இவர்களுக்குத் தெரியுமா??

பெற்ற தாய் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த போது அவளை வீட்டை விட்டு துரத்திய மகன் தெரு முனையில் அன்னதானம் செய்த கதையாக நமது அரசியல்வாதிகளுக்கு நம் தமிழக மக்களின் அவல நிலை கண்ணை விட்டு முழுவதுமாக மறைந்துவிட்டதா?? மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, மின்சாரம், தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகளுக்காக நம் தமிழக மக்கள் தினந்தோறும் போராடிக்கொண்டிருப்பது இவர்களது கண்ணில் படவே இல்லையா???

பள்ளி கல்லூரி மாணவர்களின் தேர்வு நேரமான இந்த சமயத்திலும் நாள்தோறும் குறைந்தது 5 மணி நேரமாவது மின்சாரத்தடை ஏற்படுகிறது. பெட்ரோல் விலை உச்சத்தைத் தொட்ட சமயத்தில் விண்ணைத் தொடும் அளவிற்கு ஏறிய விலைவாசி பெட்ரோல் விலை குறைந்த பிறகும் கூட கொஞ்சமும் இறங்கவில்லை. காய்கறி, மளிகைப் பொருட்கள், பால் என அனைத்து பொருட்களும் ஏழைகளுக்கு கிட்டத்தட்ட எட்டாக் கனியாகிவிடும் நிலை நீடிக்கிறது. ஏழைகள் மட்டுமல்லாது நடுத்தர வர்கத்தினரே மாத ஆரம்பத்திலேயே கையைப் பிசையும் நிலை.. 1 ரூபாய்க்கு அரிசி கிடைத்தால் மட்டும் போதுமா?? மற்ற பொருட்களின் விலை என்ன ஆகிறது?? குடும்பத்தை எப்படி சமாளிப்பது என்று அனைத்து தரப்பு மக்களும் குமுறுகிறார்கள். போதாத குறைக்கு இன்னும் 1 மாதத்தில் கோடை ஆரம்பிக்கும் - கோடை வெய்யிலோடு சேர்ந்து தண்ணீர் பஞ்சமும் மக்களை ஆட்டுவிக்கும். தண்ணீர் பஞ்சத்தால் விவசாயிகள் நிலை மீண்டும் கேள்விக்குறியாகும்...

இப்படி தமிழகத்திலேயே பல பிரச்சனைகள் தலைவிரித்து ஆடும் வேளையில் அனைத்து அரசியல்வாதிகளும் இலங்கைப் பிரச்சனையைப் பற்றி பேசியே பொழுதைக் கழிப்பது வேதனையாக உள்ளது. சொந்த மாநில மக்களின் பிரச்சனைகளையேத் தீர்க்க வக்கில்லாதவர்கள் அடுத்த நாட்டுப் பிரச்சனையைப் பற்றியே பேசி காலத்தை ஓட்டினால் அவர்களை என்ன செய்வது?? இப்போது இலங்கைத் தமிழருக்காக வாய் கிழிய கத்தும் ஒரு அரசியல்வாதியாவது திருமங்கலம் இடைத்தேர்தலில் அவர்களுக்காக பேசினாரா?? அங்கே இதைப் பற்றி பேசினால் ஒரு ஓட்டு கூட கிடைக்காது என்பதால் உள்ளூர் அரசியல் பேசி ஓட்டை வாங்கினார்கள். இப்போது அவர்களுக்கு உள்ளூர் பிரச்சனைகள் எல்லாம் மறைந்துவிட்டதா அல்லது மறந்துவிட்டதா?

"இலங்கைத் தமிழர்கள் எங்கள் ரத்தம். அவர்களும் எங்கள் உடன் பிறப்புகளே.. அவர்களுக்காக நாங்கள் பேசுவது எப்படி தவறாகும்?" என்று கேட்கும் அரசியல்வாதிகளே - உங்கள் சொந்த மாநில மக்கள் பசியால் செத்து மடிவதை கொஞ்சம் பாருங்கள்.. அடிப்படை சாலை வசதிகள் சுகாதார வசதிகள் இல்லாமல் தினம் தினம் செத்து மடியும் - செத்து பிழைக்கும் கோடானு கோடி தமிழக மக்களின் அவல நிலையைப் பாருங்கள் - போரினால் மட்டுமல்ல அதிகாரிகளின் - அரசியல்வாதிகளின் அலட்சியத்தாலும் தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் தமிழகத்திலேயே மடிகிறார்களே - இது உங்களது கண்களுக்கு தெரியவே இல்லையா???

இலங்கைத் தமிழர்களுக்காக போராடுங்கள் - தடுக்கவில்லை. அதே நேரத்தில் பற்றி எரியும் உள்ளூர் பிரச்சனைகளையும் கவனியுங்கள்.

oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |