வெற்றியும் தோல்வியும் வீரர்கழகு. இது நம் ஆன்றோர் மொழி. விளையாட்டு என்பது நாடுகளுக்கிடையே நல்லுணர்வை வளர்க்க ஒரு கருவியாகத்தான் சில காலம் முன்பு வரை பயன்படுதப்பட்டு வந்தது. விளையாட்டைப் பொறுத்தவரை நாடுகளுக்கிடையே போட்டி இருந்ததே ஒழிய பொறாமை இல்லை. ஆனால் சமீபகாலமாக விளையாட்டுகளில் குறிப்பாக கிரிக்கெட்டில் பொறாமை தழைத்தோங்குவதையும் அதன் காரணமாக வீரர்கள் ஒருவர் மேல் ஒருவர் வசைமாறி பொழிவதையும் பார்கும் போது அதிர்ச்சி ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை.
கிரிக்கெட் வீரர்களிடையே - அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அணி வீரர்களிடையே ஏற்பட்டுள்ள இந்தப் பொறாமையின் விளைவாக அவர்கள் மற்ற நாட்டு வீரர்களை ஏளனப்படுத்தி பேசிவருவது நிச்சயம் மிகக்கடுமையாக கண்டிக்க வேண்டிய ஒரு விஷயமாகும். மிகச்சமீபத்தில் சிட்னி கிரிக்கெட் போட்டியின்போது ஹர்பஜன் சிங்குடன் மாத்யூ ஹெய்டனும், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ¤ம் அவதூறு வார்த்தைகளால் மோதினர். அந்த மோதலில் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் இஷாந்த் சர்மாவும் வேறு சிக்கினர். இந்த மோதல் இரு அணியிணரிடம் பெருத்த மனக்கசப்பை கிளப்பியது. அந்த ரணமே ஆறாத நிலையில் நேற்று ஹர்பஜன் சிங்கை விஷக் காளான் செடி என மாத்யூ ஹெய்டன் வர்ணித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய வீரர்களின் மீது இத்தகைய புகார்கள் கிளம்புவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே முத்தையா முரளிதரன் மீது தாறுமாறாக வார்த்தைப் பிரயோகங்களை நடத்தியவர்கள் ஆஸ்திரேலிய வீரர்கள். உலகின் வெல்ல முடியாத அணியாக விளங்க வேண்டும் என்ற அவர்களது எதிர்பார்பில் தவறு இல்லை, ஆனால் தங்கள் கனவை தவிடு பொடியாக்குபவர்களை எல்லாம் கண்டபடி பேசும் அவர்களது குணம் நிச்சயம் கடுமையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
ஆஸ்திரேலிய வீரர்களைக் கண்டிக்கும் அதே நேரத்தில் இந்திய வீரர்களான ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் போன்றவர்களும் தங்களது நாவையும் செயல்களையும் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்பதையும் அணியின் மூத்த வீரர்களும் பயிற்சியாளர்களும் அவசியம் அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். எதிரணியினரை வெறுப்பேற்றும் முறையில் இவர்கள் செய்யும் செயல்களும் பேசும் பேச்சுகளும் கண்டிக்கப்படவேண்டியவையே.
ஒருகாலத்தில் இந்தியா - பாக்கிஸ்தான் இடையே நடைபெற்ற பந்தயங்களில் இருநாட்டு வீரர்களிடையே மட்டுமல்லாது பார்க்கும் ரசிகர்களிடமும் ஆவேசம் மிகுந்து பல வன்முறை சம்பவங்கள் நடைபெற ஏதுவானது. ஆனால் இப்போது இந்த இருநாட்டு வீரர்களிடையே மட்டுமல்லாது பார்க்கும் ரசிகர்களிடமும் பக்குவம் அதிகரித்துள்ளது. அதே பக்குவம் ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் நிச்சயம் ஒருநாள் ஏற்படும் என்று நம்புவோம். ஆனால் அதுவரை அவர்களது வாய்களை நிச்சயம் அந்நாட்டு கிரிகெட் வாரியம் கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும்.
|