Tamiloviam
பிப்ரவரி 28 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறுகதை : என் இனிய உலகம்
- சுரேஷ் பாபு
  Printable version | URL |


கதை கருவாக்கம் : சிறில் அலெக்ஸ்

கண் திறந்து பார்க்கையில் எல்லாமே புதிதாகத் தெரிந்தது எழுத்தாளருக்கு. கடந்த சில நாட்களாக பழக்கப்பட்டிருந்த அசெப்டிக் மருத்துவமனை வாடை சுத்தமாக விலகிவிட்டிருந்தது. சுலபமாக மூச்சுவிடமுடிந்தது. எல்லாம் சரியாகிவிட்டதா என்ன?

நீல ஆடை மலையாள சேச்சிகளைக் காணோம். கையில் குத்தியிருந்த ஊசிமுனைகளைக் காணோம்.. எங்கே வந்திருக்கிறோம்?

ஆனால் பார்த்த இடங்களாகத் தான் தோற்றமளித்தன எல்லாம். நாடக செட்டைப் போல கலந்து கட்டியான இடம். கொஞ்சம் பம்பாய் வீதிகள், கரோல்பாக் மூலை, பூசாரோட், அல்சூர், மெயின் கார்டுகேட், ஸ்ரீரங்கம், கொஞ்சம் பழையாறை உறையூரும் கலந்த புரவிப்பாதை, வானமென்னும் வீதியும் கலந்து..

தூரத்தில் மனித நடமாட்டம் தெரிந்தது. "ஹாய் வாத்யார்.. வந்துட்டீங்களா!" உற்சாகமான குரல் கேட்டு திரும்பினார்.

"என்னைத் தெரியுமா உங்களுக்கு?"

"தோடா! பாஸ், கவனிச்சீங்களா? என்னாதான் பிரபலம்னாலும் சொந்தப் பிள்ளைகளையா மறந்துடுவாரு?"

"இருடா! அவர் குழப்பத்துல இருப்பாரு. சார்.. நான் தான் கணேஷ், சில வேளைகள்லே கணேசபட்டர். லாயர், லிங்கி செட்டி தெருவில ஆபீஸ் வச்சிருக்கேன். இது வஸந்த் - என் ஜூனியர்"

"பேரு கேள்விப்பட்டா மாதிரி இருக்கே"

"அட அவங்களேதான் சார். என்ன பாஸ் இவர் பி பி ராமையாஜுலு முழிச்சாரே அனிதா கேஸ்லே அந்த மாதிரி! "

"எந்த ஊருப்பா இது?"

"எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்ச ஊருங்கதான்."

நடந்து கொண்டிருந்த போது எதிரில் சினிமா போஸ்டர் பளிச்சிட்டது. அருண்குமார் நடிக்கும் நினைத்தாலே வலிக்கும்.

"இதெல்லாம் நீங்க உங்க கற்பனையில உருவாக்கின ஊருங்கதான். இந்த ஊருங்கள்லே உலாவறது எல்லாம் நீங்க உருவாக்கின கதா பாத்திரங்கள்தான்."

"அதோ அந்த வீட்டுலதான் டாக்டர் ராகவானந்தம் மகள் மாலதியோட இருக்காரு. பக்கத்து வீட்லே இருந்து ஆத்மா சைட் அடிச்சுகிட்டே இருக்கான் பாருங்க"

"இதோ இந்த வீட்டுல ஆனந்தும் காஞ்சனாவும் இருக்காங்க.. ஞாபகம் இல்லே? ஆ-கா-யம்?"

"ஓ" எழுத்தாளருக்கு ஒன்றும் புரியவில்லை.

"அப்ப நான் செத்துப்ப் போயிட்டேனா ?"

"அப்படி ஏன் சொல்லணும்? இந்த ஊருக்கு வந்துட்டீங்க.. அப்படி சிம்பிளா சொல்லிக்கலாமே!"

"இதென்ன சொர்க்கமா நரகமா ?"

"சொர்க்கம் நரகம்னு சுருக்கமா முடிக்கற விஷயமா இது? நீங்க எந்த இடத்துல மன மகிழ்ச்சியோட வாழ விரும்பறீங்களோ அதான் சொர்க்கம்! மத்தவங்க கற்பனையில பாப்பாங்க, நீங்க காகிதத்துலயே எழுதிப்பாத்துட்டீங்க!"

"அப்ப.. லைப் ஆப்டர் டெத்துன்றது"

"நீங்க ஏற்கனவே ஆட்டிப்படைச்ச கதாபாத்திரங்கள் இங்கேதான் இருக்கு.. வழக்கமா நீங்க பண்றது போலவே இங்கேயும் எல்லாரையும் ஆட்டிப் படைக்கலாம்"

"அப்ப இங்கேயும் நான் என்னும் மயக்க உலகை நடத்துவோன் நானே வாக இருக்க முடியுமா?"

"அதிலென்ன சந்தேகம். அதோ ஜீவா தன்னோட வழக்குக்கு என்ன முடிவு ஆகும்னு காத்துகிட்டிருக்காரு பாருங்க"

"வஸந்த் அவர்கிட்ட பேப்பர் பேனா கொடுடா"

எழுத்தாளர் எழுத ஆரம்பித்தார்.

ஜீவா காத்துக்கொண்டிருந்தார். ஜீனோ வாலாட்டிக் கொண்டிருந்தது.

| |
oooOooo
                         
 
சுரேஷ் பாபு அவர்களின் இதர படைப்புகள்.   சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |