Tamiloviam
பிப்ரவரி 28 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : நாண்காவது தூண் - நூல் விமர்சனம்
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
  Printable version | URL |


எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் "யாதுமாகி நின்றாய்" நூலைப் படிக்கும் பொழுது மனதிற்குள் எழுகின்ற ஆச்சர்யங்களும், வியப்புக்களும் கவிஞர் மதுமிதாவின் "நான்காவது தூண்" நூலைப் படிக்கும் பொழுதும் ஏற்படுகிறது. தமிழில் முன்னிலையில் இருக்கின்ற பத்திரிக்கையாசிரியர்களை பேட்டி கண்டு, அதனை ஒரு புத்தகமாக கொண்டு வருவதே ஒரு பெரிய சாதனை. அந்த சாதனையை ஒருவர் செய்யும் பொழுது அதனை பாராட்டாமல், கண்டு கொள்ளாமலிருப்பது தமிழ் சமூகத்தின் தனிச் சிறப்பு. இந்த தனிச்சிறப்பை மாற்ற வேண்டும் என்கிற ஒரு முயற்சியாக முதலில் திருமதி, கவிஞர் மதுமிதா அவர்களுக்கு தமிழோவியத்தின் சார்பில் ஒரு நேர்மையான, ஆழமான வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறோம்.

நாண்காவது தூணிண் அடிப்படையே கிராமப்புறத்திலிருந்து அடிப்படை வாழ்க்கையை தொடங்கி, திறமையின் காரணமாக பத்திரிக்கையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்று பணிபுரியும் மனிதர்களின் எண்ணங்களை, உணர்வுகளை, உழைப்புகளை தெளிவாக பதிவு செய்திருக்கிறது. மனிதர்கள் ஒரு சமூகமாக வாழ்ந்து வருவதாக சொன்னாலும் ஒவ்வொரு மனிதனின் விருப்பு, வெறுப்புகள், தேவைகள், ஆசைகள் என அனைத்துமே வேறு வேறு உலகமாகவே இருக்கிறது. கொள்கை ரீதியில், கருத்து ரீதியில், ஆதரவு ரீதியில் எதிர் எதிர் திசையில் பயணித்துக் கொண்டிருக்கும் பத்திரிக்கை ஆசிரியர்களின் பேட்டிகள் இந்நூலை மேலும் அலங்கரிக்கின்றன. தமிழ் சிபி மின்னிதழ் ஆசிரியர் அண்ணா கண்ணண், திசைகள் மின்னிதழ் ஆசிரியர் அருணா ஸ்ரீனிவாசன், மங்கையர் மலர் ஆசிரியர் அனுராதா சேகர், காலச்சுவடு ஆசிரியர் கண்ணண், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர், கல்கி ஆசிரியர் சீதாரவி, துக்ளக் ஆசிரியர் சோ, சுகதேவ், நக்கீரன் கோபால், நிலாச்சாரல் ஆசிரியர் நிர்மலா ராஜீ, தென்றல் ஆசிரியர் மதுரபாரதி, நமது நம்பிக்கை, ரசனை ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையா, உயிர்மை ஆசிரியர் மனுஷ்யபுத்திரன், கல்கண்டு ஆசிரியர் லேனா தமிழ்வாணண், இலக்கிய பீடம் ஆசிரியர் விக்கிரமன், வளர் தொழில் ஆசிரியர் ஜெயகிருஷ்ணண், த தமிழ் டைம் ஆசிரியர் ஜெயபாஸ்கரன், மஞ்சரி ஆசிரியர் ஸ்ரீ.ஸ்ரீராம் போன்றோரின் நேர்காணல்கள் நாண்காவது தூண் நூலில் இடம் பெற்றுள்ளது.   

"இணையத்தின் பயனால் உலகளாவிய தமிழ் சமூகம், நெருக்கமான தொடர்பு எல்லைக்குள் இருக்கிறது. அவர்களுக்குள் கருத்து பரிமாற்றத்திற்கும், விவாதத்திற்கும், நட்பு பரவலுக்கும் பெரிய வாசல் திறந்துள்ளது. அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டியது நம் அனைவரது கடமை" என்று சொல்லும் தமிழ் சிபி இணையதளத்தின் ஆசிரியர் அண்ணா கண்ணணின் நேர்காணலோடு இந்நூல் தொடங்குகிறது.  தமிழ் சிபியின் ஆசிரியராக பொறுப்பேற்பதற்கு முன் பணிபுரிந்த சூழல், தமிழ் சிபி இணையதளத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய தேவைகளை பற்றி விரிவாக அண்ணா கண்ணண்  சொல்லி இருக்கிறார்.      
 
லாப நோக்கத்தை தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு படிக்கும் பொழுது ஆதரவை அள்ளிக் கொண்டிருக்கும் திசைகள் இணையதளத்தின் ஆசிரியர் அருணா ஸ்ரீனிவாசன் இப்படிச் சொல்கிறார் பெரிய மாற்றங்கள், போராட்டங்கள் என்று எதுவும் இல்லாமல் ஒரு சாதாரண, நடுத்தர தமிழ் குடும்பத்தின் பெண்ணாகத்தான் வளர்ந்தேன். இது தான் என்னுடைய வாழ்க்கை என்று ஒரு வரியில் சொல்லி விடலாம் என எளிதாக சொல்லும் இவர் டெல்லி வாழ்க்கை, 16 வருடமாக எழுதி வருவதாகவும் சொல்கிறார். சிங்கப்பூர் தமிழ் முரசு, எக்னாமிக் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகளில் சுயேட்சை பத்திரிக்கையாளராக எழுதி இருக்கிறார்.  எழுத தொடங்கிய பொழுது எல்லாம் நானாகவே, புதிதாக தெரிந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் வேண்டியிருந்தது. உலக வர்த்தக அமைப்பின் முதல் மாநாட்டிற்குப் போய் அதனை பற்றி எக்னாமிக்ஸ் டைம்ஸில் எழுதியது ஒரு சவாலாக மட்டுமல்ல, நல்ல அனுபவமாகவும் இருந்தது என விவரிக்கும் இவரின் மனதில், எந்த தனி மனிதரும் என்னுள் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்ததில்லை என்கிறார் ஆளுமையோடு.

 
என்னைப் பொறுத்தவரை பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் கிடையாது. கேவலமானவர்களும் கிடையாது. ஆண்களிலிருந்து வேறனவங்க.அவங்க வேற, நம வேற. ஆனால் அவங்களை விட பல விஷயங்களில் நம்மளால

தான் சிறப்பாக செய்ய முடியும் என சொல்கிறார் மங்கையர் மலர் ஆசிரியர் அனுராதா சேகர். கிராமப் புறத்திலிருந்து வந்து, பெண்கள் அதிகமாக படிக்கும் ஒரு மாத இதழுக்கு ஆசிரியராக உயர்ந்த விதத்தை சொல்வதை படிப்பது ஒரு சுவராஸ்யம். மங்கையர் மலரில் அதிகமாக ஆக்கிரமிக்கும் விளம்பரங்களை கொஞ்சம் குறைத்தால் இவருக்கு ஏதாவது புண்ணியம் கிடைக்கும்.

எஸ்.ஆர். சுந்தரம் என்றால் யாருக்கும் அவ்வளவாக பரிச்சயம் கிடையாது. அதே காலச்சுவடு கண்ணண் என்று சொல்லிப் பாருங்கள் இலக்கிய உலகத்தினருக்கு அத்துபடி. இலக்கிய உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த அமரர் சுந்தரராமசாமியின் மகன். அரசியலில் வாரிசுகள் நுழைவது போல், கண்ணணும் இலக்கிய வாரிசாக நுழைந்த பொழுது பல சர்ச்சைகள் தொடங்கியது. அன்று முதல் இன்று வரை சர்ச்சைகளின் நாயகனாகத் தான் தன்னை வளர்த்துக் கொண்டு வருகிறார். இலக்கிய உலகில், ஆண் எழுதுகிறானே அதனால் நாங்களும் எழுதுகிறோம் என்று கிளம்பிய "ஒரு மார்க்கமான சில பெண்;"கவிகளை ஊட்டச்சத்து கொடுத்து வளர்த்த ஆத்மா இவர். என்னைச் சுற்றி சர்ச்சைகளை உருவாக்க நான் எந்த முயற்சியும் செய்யறதில்லை. அதற்காக சிலர் தங்களின் வாழ்க்கையையே அர்ப்பணிக்கிறாங்க. தங்கள் செயல்பாடுகள் சார்ந்து தங்களுக்கான எந்த அடையாளத்தையும் உருவாக்கிக் கொள்ள திராணி இல்லாதவர்களுக்கு காலச்சுவடு எதிர்ப்பு கை கொடுக்கிறது என காலச்சுவடு இலக்கிய இதழை எதிர்க்கும் எதிர்பாளர்களுக்கு பதில் சொல்கிறார்.

இன்றும் பெரிதாக பத்திரிக்கை துறையில் மதிக்கப்படும் தினமணி முன்னாள் ஆசிரியர் ஏ.என். சிவராமனின் பேரன் கீழம்பூர் சங்கர சுப்பிரமணியன். இலக்கிய இதழில் தனி சாம்ராஜியம் நடத்திக் கொண்டிருக்கும் கலைமகளின் ஆசிரியர் இவர். என்னைப் பொறுத்தவரை தமிழை மறக்காத தேசியமும், தேசியத்தை மறக்காத தமிழும் வேணும் என்று சொல்கிறார். கிராமப் பகுதியில் இருந்து இன்று ஒரு மாத பத்திரிக்கைக்கு ஆசிரியரான இவரது வாழ்க்கை கண்டிப்பாக முன் உதாரணம்.

கேள்வி :- சன் டி.விக்கு போட்டி ஜெயா டி.வி. முரசொலிக்கு போட்டி நமது எம.;ஜி.ஆர் என இருக்கும் பொழுது குங்குமத்துக்கு?

பதில் : "இலவசம்"

இந்த நகைச்சுவையான கேள்வி பதில் கல்கி வார இதழின் தராசு பகுதியில் வந்தது. இந்த பல்சுவை இதழின் ஆசிரியர் திருமதி சீதாரவி.  இன்று பரதம் பற்றிய கதைகள் வருவதில்லை. தனது கதைகள் முலம் அதனை சாத்தியமாக்கி வருகிறார் சீதாரவி என்று அழுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணணால் பாராட்டப்பட்ட சீதாரவி, குடும்பத்தோடு படிக்க என்ற வாசகத்தை கொண்டு வரும் கல்கி இதழின் ஆசிரியர். காவிய எழுத்தாளர் அமரர் கல்கியின் பேத்தி. 2007ம் ஆண்டு முதன் முறையாக திருவையாறு சென்றேன். சின்ன சின்ன கிராமங்களில் இருந்து பெண்கள் வந்து பஞ்சரத்ன கீர்த்தனைகளை அவ்வளவு சிரத்தையாகவும், அழகாகவும் சுருதி சுத்தமாக பாடினார்கள். வயது, ஜாதி, சமூகம் என்று எந்தப் பேதமும் கிடையாது அங்க.

எது நம்மை அதிகமாக பாதிக்கிறதோ அது தான் நம்முடைய இயல்பாகிறது. கதைகள் வழியே இந்தக் கலை பற்றி சொல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கு. திட்டமிட்டு அதனை செய்வது கஷ்டம். அமைய வேண்டிய நேரத்தில் அமையும் என்கிறார். இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி மறைந்த பொழுது எழுதிய தலையங்கம் சிரமப்பட்ட தலையங்கம.; கல்கி போன்ற ஒரு நடுநிலை பத்திரிக்கையை நாட்டு நலன் கருதும் இதழை, தொடர்ந்து நடத்துவதே சவால் தான் என்கிறார். உண்மை தான் எந்த அரசியல், பலம் வாய்ந்த ஜாதி போன்ற பின்னணி இல்லாமல் ஒரு பத்திரிக்கையை நடத்துவது இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் அவ்வளவு சாதாரணமான ஒன்றா என்ன?

தமிழகத்தில் அரசியல் நடப்புகளை துள்ளியமாக சொல்கின்ற நபர்களை கணக்கெடுத்தால் துக்ளக் சோ அவர்களுக்கு முதலிடம். எதையுமே வெளிப்படையாக, தைரியமாக சொல்லக் கூடியவர். பத்திரிக்கை தொழிலை மக்களுக்கு, நாட்டுக்காக நடத்துகிறோம் என்று எல்லா பத்திரிக்கை அதிபர்களும் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, மற்ற தொழில் போல இதுவும் ஒரு தொழில் என்று உண்மையை போட்டு உடைக்கிறார் துக்ளக் சோ. மேல்சபைக்கு உறுப்பினராக பதவி வகித்ததை பற்றி இப்படி சொல்கிறார். நாடாளுமன்றத்தில் நடப்பதை

வெளியில் இருந்து பார்க்குறப்ப ஜோக் மாதிரி ரசிக்க முடிந்தது. உள்ளே இருந்து பார்க்குறச்சே வேதனையாக இருந்தது. என்ன இப்படி பண்றாங்கன்னு. துக்ளக் சோ. இராமசாமி போன்ற நபர்கள் தமிழகத்தை தாண்டி வேறு மாநிலங்களில் பிறந்திருந்தால் தனி மரியாதையோடு இருந்திருப்பார்.

நாண்காவது தூண் என்ற இந்த நூலை படிக்கும் பொழுது சலிப்பையும், சோர்வையும், சிந்தனையை மழுக்கடிக்கும்; நேர்காணலாக இருப்பது நக்கீரன் கோபால் பேட்டி. பந்தா, தற்பெருமை, சுயபுராணம் என மொத்தமாக சேர்ந்த நேர்காணலாக இவரது பேட்டி இருக்கிறது.

மாறுபட்ட கருத்துக்களோடும் வாழலாம் என்கிறார், நிலாச்சாரல் நிர்மலா ராஜீ. கிராமப்புற பகுதியில் ஆசிரிய தம்பதிகளுக்கு பிறந்து பொறியியலில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்று லண்டனில் வசிக்கும் இவர் புதிதாக இணையத்தில் எழுத வருபவர்களுக்கு சிகப்பு கம்பளம் கொடுத்து வரவேற்பவர். ஒருவனிடம் இருக்கும் திறமையை அறிந்து, அந்த திறமையை  எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை இவரிடம் கற்றுக் கொள்ளலாம். இணையதளத்தில் எதையும் நேர்த்தியாக எழுதலாம் என்பதை சொல்லி உற்சாகம் கொடுத்து இவர் வளர்த்த பிள்ளைகளில் திருமலைக் கொழுந்துவான அடியேனும் ஒருவன். இலவசமாக எழுதுவதற்கு ஒருவர் போனால் இன்னொருவர் வருவார் என்கிறார். அறரை கோடி தமிழ் மக்கள் இருப்பது தமிழக அரசியல்வாதிகளுக்குத் தான் லாபம் என நினைத்திருந்தேன். ஆனால் நிர்மலாராஜீவுக்கும் லாபம் தான் போல.

பத்திரிக்கைகளின் சர்வாதிகாரத்தை ஒரளவு அடக்கியது இணையம் தான். இது ஒரு சமத்துவ பிரதேசம். யாரும் அதில் நுழையலாம் என்கிறார் தென்றல் மதுரபாரதி. வட அமெரிக்க தமிழர்களுக்கு பரிச்சயமான தென்றல் பத்திரிக்கையின் ஆசிரியர்.

தென்றல் இதழ்களை பார்த்தேன். தமிழகத்தில் வெளிவரும் இதழ்களை விட வித்தியாசமானதாக இருக்கிறது. தரம் குறையாமல் எப்படி தென்றலை நடத்துகிறீர்கள் என்ற கேள்விக்கு

நல்ல வேளை வித்தியாசம் என்பதோடு நிறுத்தி விடாமல் தரத்தையும் சொன்னீர்கள். எல்லோருமே வித்தியாசமாகத் தான் நடத்த முயற்சிக்கிறார்கள். அதே நேரத்தில் வாசகர்களுக்கு இது தான் பிடிக்கிறது, என்று தானே ஒரு நிர்ணயமும் செய்து கொள்கிறார்கள். நீங்கள் வாசகனை குறைத்து மதிப்பிட்டு இருக்கலாம். அல்லது உங்களால் தரத்தை அதைவிட உயர்த்த முடியவில்லை என்பதே காரணமாக இருக்கலாம் என்கிறார்.

தீவிரமான உணர்வுகள் தான் இலக்கியம். தீவிரமான நுண்ணறிவும் இலக்கியம். இவை சமூக பிரச்சினைகளை பேசினாலும் சரி, பேசாவிட்டாலும சரி, நுண்ணறிவு, நுண்ணுணர்வு இவையே இலக்கியத்தின் தளங்கள் என்கிறார் மரபின் மைந்தன் முத்தையா.

விமர்சனங்கள் என்பது பல்வேறு காரண, காரியங்களுக்காக சொல்லப்படுகிற ஒரு தொந்தரவு என்று வித்தியாசமான ஒரு கருத்தை சொல்கிறார் மனுஷ்ய புத்திரன். உயிர்மை இதழின் ஆசிரியர், கவிஞர், கட்டுரையாளர், விமர்சகர் என பல பரிணாமங்களை கொண்ட இவரின் நேர்காணல் எதிலும் பிடிப்பில்லாமல் இருப்பதை போல் இருக்கிறது. இணையத்தில் எழுதும் கணிசமான பகுதியினர் எவ்வித பொறுப்புணர்ச்சியும் அற்ற புல்லுருவிகள் என்று இணைய எழுத்தாளர்களை சாடுகிறார். இணையத்தின் மீது இவருக்கு அப்படி என்ன கோபமோ உயிர்மை இணைய தளத்தையும் நிறுத்தி விட்டார்.

எழுத்தாளர் சுஜாதாவோடான நட்பை பற்றி மனுஷ்யபுத்திரன் இப்படி சொல்கிறார். ஒரு எழுத்தாளனாகவும், பதிப்பாளனாகவும் என்னுடைய காரியங்களை அவர் பெரிய அளவுக்கு வளமைப்படுத்தியிருக்கார்.  அது ஒரு அபூர்வமான பிரியம், நட்பு. இன்றைக்கு நான் செஞ்சுக்கிட்டு இருக்கிற பெரும்பாலான காரியங்களில் அவரோட அந்தப் பிரியம் சம்மந்தப்பட்டிருக்கு என்கிறார்.

வாசகருடைய நலன், உடல் நலம், உள்ள நலம் பற்றி அக்கறை கொள்வது. உலக நடப்பை பற்றி சொல்ல நினைப்பது இது தான் கல்கண்டின் மைய நோக்கம் என்று சொல்லும் கல்கண்டு வார இதழ் ஆசிரியர் லேனா தமிழ்வாணண் கல்கண்டு வாசகர்களுக்கு கடிதம் எழுதுவதற்கு மட்டும் மாதம் 2000 ருபாய்க்கும் மேல் செலவு செய்வதாக சொல்கிறார். நீங்கள் பிரபலமான நபர் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா? என்ற கேள்விக்கு இப்படி பதில் சொல்கிறார்: பத்திரிக்கை, புத்தகங்கள் படிக்கிறவங்க இருந்தா பெரும்பாலும் அவங்களுக்கு லேனா தமிழ்வாணணை தெரியும். அந்த வகையில் பிரபலம் தான் என்கிறார். பதிப்பாசிரியர், இலக்கிய சி;ந்தனைமணி, சிறந்த இளம்பத்திரிக்கையாளர் போன்ற பட்டங்களை பெற்றுள்ளார்.இவரது நூலான ஒரு பத்திரிக்கையாளனின் மேலைநாட்டு பயண அனுபவங்கள் என்ற நூல் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் பரிசை பெற்றுள்ளது.

சிறுகதை என்பது ஒரு சங்கீதம் போல, பல ராகங்கள் இருப்பது போல. இலக்கியம் வளர வளரஅதற்கு இலக்கணம் வளருது. இலக்கணத்தை மட்டும் வைத்துக் கொண்டு இப்படித் தான் எழுத வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என்கிறார் கலைமாமணி விக்கிரமன். இலக்கிய பீடத்தின் ஆசிரியரான இவர் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் அழுதசுரபி மாத இதழின் முன்னாள் ஆசிரியர். இலக்கிய பீடத்தில் வருகின்ற நேர்காணலில் எழுத்தாளர்களை நறுக், சுறுக் கென்று கேள்வி கேட்டு அதற்கான பதிலையும் வெளியிடுவது தான் இலக்கிய பீடத்தின் தனிச்சிறப்பு.

வளர்தொழில் இதழின் ஆசிரியர் ஜெயகிருஷ்ணணின் Nபுட்டி தொழில் ஆர்வலர்களுக்கு உதவுவதாக இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் சிறுதொண்டநல்லூர் என்ற குக்கிராமத்தில் இருந்து தன்னை பெரிய மனிதாராக வளர்ந்த விதத்தை படிப்பதே ஒரு சுவராஸ்யம் தான்.

அடிப்படையில் திரைப்படங்களுக்கு பாடல்களே தேவையில்லை என்கிற கோட்பாட்டைச் சேர்ந்தவன் நான் என்கிறார் ஜெயபாஸ்கரன். த தமிழ் டைம்ஸ் ஆசிரியராக இருக்கும் இவரது கட்டுரை தினமணி, அதன் இணைப்பு இதழான கதிரில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வாழ்நாள் முழுவதும் வயிற்றை தூக்கிக் கொண்டு அலைபவர்களுக்கு அந்த வயிற்றுக்கான உணவை தயாரித்துக் கொள்ள தெரியவில்லையென்றால் அது வெட்கத்திற்குரியது. ஓட்டுனர் உரிமம் வழங்குவது போல் சமையலுக்கென்று ஒரு உரிமம் தரப்பட வேண்டும் என்பது எனது என் கருத்து என்கிறார்.

பெரும்பாலானோர் கிராமத்திலிருந்து வேலை நிமித்தமாக சென்னைக்கு வந்தவர்கள். பலருடைய குடும்பங்கள் வறுமையானவை. நன்கு படித்திருந்தாலும் பத்திரிக்கை பணியில் கிடைக்கும் ஊதியம் மிக சொற்பமே என்று பத்திரிக்கையாளர்களை பற்றி தெளிவாக சொல்கிறார் மஞ்சரி மாத இதழின் ஆசிரியர் ஸ்ரீ.ஸ்ரீராம். இவர் மஞ்சரியில் எழுதுகின்ற உங்களோடு ஒரு வார்த்தை என்ற பகுதி விரும்பி படிக்கப்படுகின்ற பகுதி. நம் சமய, சமூக நிகழ்வுகளை மையமாக வைத்து நம் நாட்டின் கலாச்சாரம் மற்றும் பண்டைய பாரம்பரியம் சிதைத்து விடாத வகையில் தகவல்களை வாரந்தோறும் கட்டுரைகளாக கொடுக்க வேண்டும் என்கிறார்.

நாண்காவது தூண் என்ற இந்த நூலில் பிரபலங்களை பேட்டி கண்டு அதனை எழுத்து வடிவில் கொண்டு வர நூலின் ஆசிரியர் மதுமிதா எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பதை சொன்னால் புரியாது. பொறுமை இதற்கு அதிகமாக தேவை. பேட்டியை வாய்ஸ் ரிக்கார்டிங்கில் பதிவு செய்து அதனை மீண்டும் எழுத்து வடிவில் கொண்டு வருவது என்பது மிகப் பெரிய சவால். அதனை எளிதில் வென்றிருக்கிறார். தமிNழுhவியத்திற்கு அளித்த பேட்டியில் இப்படி சொல்கிறார் மதுமிதா:- ஒரு விஷயத்தை செய்யும் பொழுது பெயர் வரும், கிடைக்கும் என்று பண்ணுவது கிடையாது. மனது திருப்திக்காக, முழு ஈடுபாடோடு செய்வதில் திருப்தியடைகிறேன். இந்த மன திருப்தியும், ஈடுபாடும் தான் காலம் அவரை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறது.

oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |