Tamiloviam
மார்ச் 01 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
பேட்டி : மேதா பட்கர் பேட்டி - வேண்டாம் அணு உலை வேண்டாம்
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
| | Printable version | URL |

வேண்டாம், வேண்டாம் அணு உலை வேண்டாம்,

சிக்கன் குனியாவை தாங்க முடியாத நாங்கள், அணு கதிர் வீச்சை எப்படி தாங்குவோம்.

கொசுக்களை ஒழிக்க முடியாத நீங்கள், எப்படி அணுக் கதிர் வீச்சை தடுப்பீர்கள்.

Fastingஇது மாதிரி பல கோஷங்களுடன் அணு உலை எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளத்தில் நடைபெற்றது. மதுரையில் இருந்து 260 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு கடற்கரையோரக் குக்கிராமமாக இருக்கும் கூடன்குளத்தில் மக்கள்  இயக்கங்களின் தேசிய கூட்டமைப்புத் தலைவரான, சுற்றுச்சூழல் போராளி மேதா பட்கர் இதில் கலந்து கொண்டு, மக்களோடு மக்களாக வெறும் தரையில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை தொடக்கி வைத்தார். பொது மக்கள் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேதா பட்கர் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்கிறார் என்றவுடன் மொத்த மீடியாக்களும் கூடன்குளத்தில் குவிந்தன. காவல் துறையும் தனது பங்கிற்கு காவலர்களை குவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிரதமராக இருந்த பொழுது  திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளத்தில் ர~;யாவின் உதவியோடு, தலா 1000 மெகா வாட்ச் கொண்ட இரண்டு அணு உலை அமைக்க 14,000 கோடி செலவில் உடன்பாடு ஏற்பட்டு பணிகளை துவக்கினர். அப்பொழுதே எதிர்ப்பு கிளம்பியது. இருந்தாலும் மத்திய அரசின் கொள்கையாலும், இது ஒரு இருநாடுகளின் கூட்டுத் திட்டம் என்று சொல்லி பணிகளை தொடங்கினார்கள்.  தற்பொழுது 2007ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி ர‰ய அதிபர் விளாதின் புடின், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் மேலும் 4 அணு உலைகள் கூடன்குளத்தில் அமைக்க கையெழுத்திடப்பட்டது. இதனை எதிர்த்துத் தான் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அணு உலைகள் அமைவதற்கு எதிரான கருத்துக்களை ஆவேசமாக பேசினார் மேதா பட்கர். காலில் ஒரு செருப்பு கூட அணியாமல், எளிமையாய், மக்களோடு மக்களாக அமர்ந்து உண்ணாவிரதம் இருந்த மேதாபட்கரிடம் மொழி பெயர்ப்பாளர் ஒருவர் உதவியோடு எடுக்கப்பட்ட நேர்காணல்.

 
தமிழோவியம் :-  நாட்டின் எதிர்காலம் கருதி. இந்தியாவில் புதிதாக அணுமின் நிலையங்கள், உலைகளை அமைக்கப்படுகிறது என பிரதமர் அறிவிக்கிறார். நீங்கள் அதற்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கிறீர்கள். இதற்கான உங்களின் உணர்வை பகிர்ந்து கொள்ள முடியுமா?

Medha Bhatnakarபதில் :- நாட்டுக்காக என்று சொல்லி விட்டு அடிப்படை சுதந்திரத்தை, உங்களின் தனிமனித உரிமையை பிரதமர் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் நீங்கள் அதற்கு ஆதரவாக இருப்பீர்களா? அதனை ஏற்றுக் கொள்வீர்களா?  நாட்டின் மின்சார தேவைக்கு என்று சொல்லி அணு மின் நிலையங்கள் உருவாக்குகிறார்கள். இதனால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வைத்து நம் நாடு இல்லை. இந்தியாவில் உற்பத்தி ஆகும் மின்சார உற்பத்தியில் அணுமின் நிலையங்களின் பங்கு வெறும் மூன்று சதவீதம் தான். இதனை தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதற்காக அவர்கள் செய்யும் செலவோ பல மடங்கு அதிகம். அதனால் தான் நாங்கள் மின் உற்பத்தியை காற்றாலை, சோலார் மின் நிலையங்கள் மூலம் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்கிறோம். என்னுடைய உணர்வுகள் என்கிற பொழுது எங்களின் உணர்வை இது போன்ற அறவழி போராட்டங்களின் மூலம் வெளிப்படுத்துகிறோம். அரசின் இந்த அணுஉலைத் திடடத்தை எதிர்க்கிறோம்.

தமிழோவியம் :- இப்படி நீங்கள் சொன்னாலும் அதனை ஆதரிக்கின்ற ஒரு கூட்டமும் இருக்கிறது இல்லையா?

பதில் :- அதற்கு நான் என்ன செய்ய முடியும்.? அவர்களுக்கு நாங்கள் சொல்கின்ற பதில் எல்லாம் ஒன்று தான். அணுமின் உலைகள் மக்களின் வாழ்வு ஆதாரங்களை பதிக்கக் கூடியது. இதனால் அப்பாவி மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் தான் நாங்கள் அணு ஆயுதங்கள், அணு உலைகளை எதிர்க்கிறோம். அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும் பொழுது சுற்றுச் சூழல் பற்றி கவலைப்பட மறுக்கிறார்கள். ஜார்க்கண்ட் மாநிலம் ஜருகுடாவில் யுரேனியத்தை பூமியில் இருந்து தோண்டி எடுக்கிறார்கள். அப்படி தோண்டி எடுக்கும் பொழுது அப்பகுதி அதிவாசி மக்களுக்கு மனநிலை பாதிப்பு, கேன்சர் உள்ளிட்ட நோய்கள் வருகின்றன. அதே போல் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா, குஜராத் மாநிலம் சக்ராடார், மும்பை அருகே தாராப்பூர், தமிழ்நாட்டில் கல்பாக்கம் போன்ற  இடங்களில் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் கசியும் அணுக்கதிர்களால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். குறைமாதக் குழந்தை பிறப்பு, மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள் என பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனை எல்லாம் நாங்கள் வெளியே கொண்டு வருகிறோம்.

தமிழோவியம் :- மத்திய அரசு சத்தியாகிரக நூற்றாண்டு விழாவை ஆர்ப்பாட்டமாக கொண்டாடுகிறது. ஆனால் சத்தியாகிரக அடிப்படையில் உங்களைப் போன்றவர்கள் நடத்துகின்ற அமைதி வழி போராட்டங்கள், உண்ணாவிரதத்திற்கு போதிய முக்கியத்துவத்தை ஆட்சியாளர்கள் அளிக்க மறுப்பது, உங்களுக்கு ஏதாவது வருத்தத்தை அளிக்கிறதா?

பதில் :- அதனைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இங்கு அரசியல் பேசவும் நான் விரும்பவில்லை. எங்களின் கடமைகளை செய்கிறோம். அதற்கு வெற்றிகளும், தோல்விகளும் கிடைக்கத் தான் செய்கிறது. அதனை எல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. செய்வதை தெளிவாக செய்வோம் என்று தான் எங்களின் மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பினர், பிற மக்கள் இயக்கங்களுடன் சேர்ந்து செய்து வருகிறோம்.

தமிழோவியம் :- நீங்கள் முகத்தை துடைக்கும் பொழுது கூட, இங்கு கிராமத்து பெண்கள் செய்வது போல் சேலையின் முந்தனையால் தான் துடைத்துக் கொள்கிறீர்கள். அதே போல் முகத்தை தண்ணீரால் கழுவும் பொழுது, கையால் தரையில் இருக்கும் மண்ணை தொட்டு அதனை கொண்டு முகத்தில் தேய்த்து முகத்தை கழுவுகிறீர்கள். இவ்வளவு எளிமையை எப்படி கடைபிடிக்க முடிகிறது?

பதில் :- சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி பேசி விட்டு, அதற்காக போராடிக் கொண்டு அதற்கு எதிராக செயல்பட நான் விரும்பவில்லை. இயற்கையோடு வாழ நாம் முதலில் பழகிக் கொள்ள வேண்டும். இயற்கைக்கு, சுற்றுச் சூழலுக்கு நாம் எந்த தீங்கும் செய்யாமல் இருந்தால், அதுவும் நமக்கு எந்த தீங்கும் செய்யாது. இந்த பூமி நாம் மட்டும் வாழ்வதற்கு மட்டுமல்ல. நமது முந்தைய தலைமுறையினர் வாழ்ந்திருக்கிறார்கள். நாம் வாழ்கிறோம். நமக்கு பின்னால் பல தலைமுறைகள் வாழ இருக்கிறார்கள். அவர்களும் இங்கு எந்த சிக்கலும் இல்லாத, ரம்மியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதே போல் பலவித உயிரினங்கள் எந்த சிக்கலும் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும். அவைகளுக்கு எந்த தீங்கும் விளைவிக்க மனிதனுக்கும் உரிமையில்லை. முகத்தை சேலை முந்தானையால் துடைப்பது என்ன பெரிய வி~யமா.

தமிழோவியம் :- உங்களின் நர்மதா பச்சாலோ அந்தோலன் இயக்கம், தமிழில் நர்மதையை காப்போம் என்ற போராட்டம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. உங்களின் அந்த போராட்டம் பற்றி?

பதில் :- குஜராத்தில் பல அப்பாவி மக்களின் வாழ்க்கையோடு விளையாடிய திட்டம் அது. அதற்கான எங்களின் போராட்டங்களால் அப்பகுதி மக்களுக்கு, இடத்தை காலி செய்து விட்டுப் போன மக்களுக்கு நிவாரணம் கிடைக்கச் செய்து இருக்கிறோம். அவர்களுக்கு மாற்று இடம் கிடைக்கச் செய்திருக்கிறோம். அது போன்ற போராட்டங்களால் மக்களிடையே, அரசுகளிடையே விழிப்பணர்வு எற்பட்டு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இயற்கைக்கு எதிராக, அப்பாவி மலைவாழ் மக்களுக்கு எதிராக எதையும் செய்து விடலாம் என்ற எண்ணத்தை நாங்கள் தகர்த்திருக்கிறோம். இதுவும் ஒரு வகை வெற்றி தானே.

தமிழோவியம் :- உங்களின் அடுத்த கட்ட போராட்டம் எதனை நோக்கி செல்ல இருக்கிறது?

பதில் :- 2007ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் தேதி ஆக்„ன் 2007 என்ற பெயரில் போராட்டத்தை தொடங்குகிறோம். இது தேவையான ஒரு போராட்டம் என நான் நினைக்கிறேன். ஆதிவாசிகளுக்காக, விவசாயிகளுக்காக, கூடன்குளம் அணு மின் உலையால் பாதிக்கப்படுகின்ற மீனவர்களுக்காக உள்ளிட்ட பாதிக்கபட்டோருக்கான போராட்டமாக அது இருக்கும்.

| |
oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   பேட்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |