மார்ச் 02 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : மத்திய கூட்டணியும் வைக்கோவும்
- மீனா [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

Vaiko with Jayaமுதல் வாரம் "எங்கள் கட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தான் நீடிக்கும்.. கருணாநிதியை அடுத்த முதல்வர் ஆக்குவதே எங்கள் வேலை.." என்றெல்லாம் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி கொடுத்த வைகோ, அடுத்த வாரத்திலேயே அ.தி.மு.க வுடன் தேர்தல் கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டார். இதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தி.மு.க தலைவர் "எப்போது வைகோ மாநிலத்தில் எங்கள் கூட்டணியை விட்டுப் பிரிந்தாரோ அப்போதே மத்திய அரசின் கூட்டணியிலிருந்தும் அவர் விலக்கப்பட்டுவிட்டதாகவே கருத வேண்டும்.." என்று கூறினார்.

விடுதலைப் புலிகள் விஷயத்தில் வைகோ காட்டும் ஆதரவு நிலைப்பாட்டால் காங்கிரஸ¤க்கும் வைகோவிற்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான் நிலவும் என்று அனைவரும் நினைத்திருந்த நிலை மாறி, "வைகோ விவகாரத்தில் கருணாநிதி கூறியது அவரது சொந்த கருத்துதானே தவிர அதை கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துத் தலைவர்களின் ஏகமனதான கருத்தாக நினைக்க முடியாது" என்று இரண்டு நாட்களுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் டெல்லி மேலிடம் பேட்டியளித்திருந்தது.

தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் ஏதாவது ஒரு மத்திய அரசு விழா நடந்தால் கூட அதை தி.மு.க தலைவரின் தலைமையின் கீழ் தான் நடத்துவது - தி.மு.க மாநாடுகளுக்கு சோனியாவே வருகை தருவது, மத்திய அரசின் சாதனைப் பட்டியல்களை வாசிக்கும் போது பிரதமரே தி.மு.க தலைவரைப் பற்றி பேசி அவருக்கு நன்றி தெரிவிப்பது போன்றவற்றை தங்கள் கொள்கையாகவே மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு வைத்திருக்கும் இந்த நேரத்தில் காங்கிரஸ் தரப்பிலிருந்தா இப்படி ஒரு காமெண்ட் வருகிறது என்று திருவாளர் பொதுஜனம் யோசிக்க ஆரம்பிக்கும் முன்னதாகவே காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி "மத்திய அரசின் கூட்டணியில் ம.தி.மு.க தொடர்வதா வேண்டாமா என்பதைக் குறித்து தலைவர்கள் அனைவரும் கலந்து பேசி முடிவு செய்வார்கள்.." என்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் வைகோவை கூட்டணியிலிருந்து நீக்குவது குறித்து கருணாநிதியிடமிருந்து சோனியாவிற்கு எந்தவிதமான நிர்பந்தமும் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

இன்று எந்த அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்துள்ளாரோ அதே அ.தி.மு.கவைத் திட்டித் தான் வைகோ நாடாளுமன்றத் தேர்தலை ஐக்கிய முற்போக்கு கூட்டணி மூலமாகச் சந்தித்தார். தன் கட்சி சார்பில் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றியும் பெற்றார். மாநிலத்தில் தன் கட்சி கூட்டணி மாறியுள்ள இந்நிலையில் தி.மு.க தலைவரிடமிருந்து தங்கள் கட்சியை மத்திய கூட்டணியில் இருந்து நீக்குமாறு நிர்பந்தம் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி, தார்மீக அடிப்படையில் தன் கட்சியை மத்திய கூட்டணியிலிருந்து பிரித்து விடுவதுதான் வைகோவிற்கும் அவரது கட்சிக்கும் நல்லது. இல்லையென்றால் வைகோவின் அரசியல் வாழ்வில் அவருக்கு ஏற்பட்ட பெரிய கரும்புள்ளியாகவே இது கருதப்படும். மேலும் தன் கட்சி ஏன் கூட்டணி மாறியது என்பதற்கான சரியான விளக்கத்தையும் வைகோ சோனியா உள்ளிட்ட தலைவர்களிடமும் மக்களுக்கும் விபரமாக எடுத்துக் கூறினால் தேர்தல் சமயத்தில் அவரது எதிர்முகாம் அவருக்கு எதிராகச் செய்யப்போகும் பிரச்சாரத்திற்கு சரியான பதில் அளிப்பதாக இருக்கும். செய்வாரா வைகோ ?

| | |
oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |