சில நாட்களுக்கு முன்பாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த வக்கீல்-போலீஸ் மோதலுக்கு இருதரப்பும் பொறுப்பாளிகள் என்று சம்பவத்தை விசாரித்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையில் தெளிவாக கூறிய பிறகும் கூட வக்கீல்கள் இன்னமும் கோர்ட் புறக்கணிப்பு செய்து வருவது சட்டத்தின் மீதும் நீதிபதியின் தீர்ப்பு மீதும் வக்கீல்களுக்கு இருக்கும் மரியாதையை தெளிவாக விளக்குகிறது.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட ஒரு தரப்பு வக்கீல்கள் சுப்ரமண்யம் சுவாமி மீது முட்டையை வீசியதிலிருந்து ஆரம்பித்த பிரச்சனை சில வக்கீல்களின் அடாவடித்தனமான செயல்பாட்டால் இவ்வளவு பெரிய கலவரமாக முடிந்திருக்கிறது. காவல்துறை நடந்துகொண்ட முறை சரியல்ல என்று கூறியுள்ள நீதிபதி கலவரத்தை ஆரம்பித்தது வக்கீல்கள்தான் என்று தெள்ளத்தெளிவாக கூறியிருப்பது, வக்கீல்கள் மீதான நம்பிக்கையை குலைப்பதாக அமைந்துள்ளது. தங்கள் மீது தவறு உள்ளது என்பது தெரிந்தும் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்திவருவது வெட்கக்கேடான விஷயம் - இவர்கள் மீது உயர்நீதிமன்றம் இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்காதது மிகவும் துரதிஷ்டமான ஒன்றாகும்.
ஏற்கனவே நம் நாட்டில் கோடிக்கணக்கான வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்காகவும் தீர்ப்புக்காகவும் தேங்கியுள்ள நிலையில் வக்கீல்கள் தங்களது அடாவடி நடவடிக்கைகளின் விளைவாக கிட்டத்தட்ட 3 வாரத்திற்கும் மேலாக நீதிமன்றமே இயங்கவில்லை என்பதையும் - உச்சநீதிமன்றம் தலையிட்டு இந்தப்பிரச்சனையில் தீர்வுகாண முர்படவில்லை என்ற அவலத்தையும் எங்கே போய் சொல்வது ?
நடந்த தாக்குதல் சம்பவத்தில் காவல்துறை மீதும் தவறு இருக்கிறது. அவர்களில் பலரும் தாக்கப்பட்டுள்ளார்கள் - அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள்.. ஆனாலும் காவல்துறையில் ஒருவரும் இதன் காரணமாக காவல்துறை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவில்லை. வழக்கம்போல அவர்கள் வேலையைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஏற்கனவே சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டதும் மாணவர்களாகிய அவர்கள் மத்தியில் இருக்கும் போட்டியும் பொறாமையும் உலகிற்கே தெரிந்துவிட்ட நிலையில் தற்போது வக்கீல்களே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மக்கள் மத்தியில் அவர்களுக்கு என்ன மரியாதை இருக்கும் ?
பிரச்சனையை முற்றவிடாமல் உச்சநீதிமன்றம் தலையிட்டு வக்கீல்களை மீண்டும் பணிக்கு செல்லுமாறு கட்டளையிட்டால்தான் இதற்கு ஒரு முடிவு வரும். மேலும் வக்கீல்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது - அவர்களும் சட்டதிட்டத்திற்கு கட்டுப்பட்டே நடக்கவேண்டும் என்று கடுமையான சட்டம் ஒன்றை இயற்ற உச்சநீதிமன்ற அனுமதியோடு அரசியல்வாதிகள் முன்வரவேண்டும். அப்படி எல்லாம் செய்தால்தான் சட்டத்தின் மீதும் நீதிமன்றங்கள் மீதும் மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை பிறக்கும்.
|