Tamiloviam
மார்ச் 12 2009
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறுகதை : அர்ச்சகம்
- அகிலா கார்த்திகேயன்
  Printable version | URL |

 

சரவணனுக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்படியாவது இந்த கோவிலின் அர்ச்சகர் உத்யோகத்தை, இன்றோடு கைகழுவிவிட்டு ஓடிவிட வேண்டுமென்று, அவன் மனம் துடியாய் துடித்துக் கொண்டிருந்தது. அதற்காகத் தான் பிச்சுமணி ஐயருக்காக, சரவணன் காக்க வேண்டியதாகி விட்டது. அந்த கிழவர் இன்று எப்படியும் வந்தே தீருவாரென்று நம்பினான் சரவணன்."ஐயர் வந்தவுடன் அவர் மனம் உருகுமாறு பொய் சொல்லி நடித்தாக வேண்டும். அப்போது தான் பயப்படாமல் இந்த கோவிலின் சாவியை வாங்கிக் கொள்வார். இரண் டொரு நாட்களில் திரும்பி விடுவதாக சொல்லிவிட்டு ஓட வேண்டியது தான்!' என சரவணனின் மனதில் நிலை கொள்ளாமல் தவிப்பு மேலிட்டது.

கும்பகோணத்திற்கு பத்து கி.மீ., தூரத்தில் அமைந் திருந்தது அந்த ஈஸ்வரன் கோவில். "நீ ரொம்ப கொடுத்து வச்சவண்டா சரவணா! திருஞான சம்பந்தர், அப்பர் எல்லாம் இந்த ஈஸ்வரன் மேலே உருகி பாடியிருக்காங்க... அம்பாளும் சக்தி வாய்ந்தவள்ன்னு கேள்விபட்டிருக்கேன்... நீ போய் சேர்ந்து, ஊரில் எல்லாத்தையும் பழ கிட்டு சொல்லு. நாங்க வந்து பத்து நாள் இருந்துட்டு போறோம்...' என்று, போஸ் டிங் ஆர்டர் வந்தவுடன், இந்த கோவிலைப் பற்றி சிலாகித்து அனுப்பி வைத்தார் சரவணனின் அப்பா.முதன் முதலாக அர்ச்சகர் உத்யோகம் பார்ப்பதில், ஒரு உரிமையை பெற்றுவிட்ட நிறைவில் சரவணனும், ஊரைப் பற் றியோ, கோவிலைப் பற்றியோ அத்தனை சிந்தனை செலுத்தாதவனாய், பெட்டி படுக்கையோடு கும்பகோணத்திற்கு வந்து, அங்கிருந்து டவுன்பஸ் பிடித்து, ஒரு மாலை பொழுதில் ஊரை வந்தடைந்தான். ஊரில் கோவில் மட்டுமே இருந்தது. பேருக்கு இரண்டு, மூன்று தெருக்கள் தான். அதிலும், எண்ணி ஒன்றிரண்டு இந்த கால கட்டடங்கள்; மற்றவை ஓடு வேய்ந்த பழங் கால வீடுகள். சரவணனுக்கு பரிச்சயமில்லாத வகையை சார்ந்தவை. முதலில் இந்த சூழலே சரவணனுக்கு அச்சமும், ஏமாற்றமும் கொடுத்தன. ஆள் அரவ மில்லாத, விசாலமான கோவி லின் பிரகாரத்தை அடைந்து, கோவில் பொறுப்பாளரை விசாரித்தான்."தம்பி! ரொம்ப சந்தோஷம்... உள்ளே பிச்சுமணி ஐயர் இருக்கார்... பெட்டி படுக்கையை ஆபிஸ் ரூமிலேயே வைச்சுட்டு, கை, கால் கழுவிட்டு போய் சாமி தரிசனம் பண்ணுங்க... ஐயர் கிட்டேயிருந்து நாளைக்கு பொறுப்பை வாங்கிட்டு, "ஜாய்ன்' பண்ணிடலாம்... குடியிருக்க ஜாகை கிடைக்கற வரைக்கும், இந்த ஆபீஸ் ரூமிலேயே தங்கிக்கலாம்; ஆட்சேபனையில்லே.

ஆனா, பத்து, பதினைஞ்சு நாளுக்கு மேலே தங்க முடியாது."சமைக்கற சாமான் செட் டெல்லாம், தம்பி கொண்டு வரலைன்னு தெரியுது... இந்த கிராமத்திலே ஒரே ஒரு டீக்கடை தான். மத்யானம் மட்டும் நீ சொன்னா சாப்பாடு செஞ்சு தருவாங்க. மத்தபடி டிபன் ஐட்டங்கள் கிடைக்காது...' மடமடவென்று ஊரின் அவலத்தை பொறுப்பாளர் விவரித்தபோது, மிரண்டு போனான் சரவணன் .

மிகவும் வெறுப்போடு தான் ஈஸ்வர் சன்னதிக்குள் நுழைந் தான். பிச்சுமணி ஐயர் மட்டும், ஈஸ்வரருக்கு துணையாக அத்தனை பெரிய சன்னதியில் உட்கார்ந்திருந்தார்.கருவறையின் இருட்டில் அசடு வழிந்த குத்து விளக் கோடு, 40 வாட்ஸ் வெளிச்சத்தில் பிரமாண்டமான சிவலிங்கமாக காட்சி தந்தார் ஈஸ்வரர். ஈஸ்வரருக்கு சுற்ற பதினைந்து முழவேட்டியும் பத்தாதோ என தோன்றியது. சரவணன் வந்ததைப் பார்த்ததும், சுறுசுறுப்பாக எழுந்து வந்தார் பிச்சுமணி ஐயர். "அர்ச்சனை இருக்கா?' என்றார் ஆவலோடு."இல்லே, எனக்கு இந்த கோவில்லே அபாய்ன்ட்மென்ட் ஆயிருக்கு... உங்க கிட்டேயிருந்து பொறுப்பை வாங்கிக் கணும்!' என்றான்."ரொம்ப சந்தோஷம்... ஆரத்தி காட்டறேன்... சாமியை கும்பிடுங்கோ... அப்புறம் பேசலாம்...' என்று ஓடோடி சென்று, கற்பூரம் காட்டி கொண்டு வந்தார் பிச்சுமணி ஐயர்; அம் பாள் சன்னதிக்கும் அழைத்துச் சென்றார்.பின்னர், "நாளைக்கு நிறைஞ்ச நாள் தான். பொறுப்பேத்துண்டு நல்லா பண்ணுங்கோ...' என் றார்.சுவாரஸ்யமில்லாமல் சரவணன் கேட்டுக் கொண்டிருந் தாலும், தான் அர்ச்சகராய் செய்ய வேண்டியவைகளை, ஐயர் லிஸ்ட் போட்டதில் வயிறு கலங்கியது.

ஒன்றும் தோன்றாமல், ஐயரின் பின்னால் அவர் வீட்டுக்குச் சென்றான்."லட்சுமி! கோவில்லே அர்ச்சகராய் சேர ஒரு அம்பி வர் றார்ன்னு சொல்லலே... இவர் தான் சரவணன். உப்புமா ஆயிடுத்துன்னா சொல்லு. ரெண்டு பேரும் உட்கார்றோம். டிகாஷன் இருந்தா, முதல்லே ஒரு வாய் காபி கலந்து கொடு...' என்றார் .அடுத்த நாள் பொறுப் பேற்றுக் கொண்டதிலிருந்து சரவணன், "என்னடா இப்படி மாட்டிக் கொண்டோம்...' என்ற ரீதியில், மிகவும் சங்கடப்படலானான். காலையில் எழுந்து, பால் வாங்கி, குளித்து, நைவேத்யம் தயார் செய்ய, பிச்சுமணி ஐயரே ஒப்புக் கொண்டு செய்த போதிலும், அர்ச்சகராய் ஆறரை மணிக்காவது சரவணன் குளிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஒவ்வொரு சன்னதியாய், ஏழு சன்னதிகளுக்கும், எல்லாம் செய்வது, ஒரு பெரும் உழைப்பாக தோன்றியது. ஐயர் சொன்னது போல, அந்த காலை நேரத்தில் வழக்கமாக வரும் ஓரிரு பெரும் புள்ளிகளுக்காக, பயந்து, பயந்து, நடையை திறந்து காத்திருப்பதை, அவன் தன்மானம் கேலி செய்தது."ஓய் ஐயிரே! இத்தனை நிதானமாவா தீபாராதனை காட் டுவே... வயசு பையன் சுறுசுறுப்பா இருக்க வேணாமா?' ஒரு ஊர் பெரும்புள்ளி பழக்க தோஷத்தில் இவனையும், "ஐயிரே' என்று கூப்பிட்டு, ஒரு நாள் சப்தம் போட்ட போது, இவனுக்கு மானமே போனது மாதிரி ஆகிவிட்டது.— "அம்பி. ஒரு மந்திரமும் காதிலேயே விழலயே... என்ன அர்ச்சனை பண்ணினே?'— "ஏம்ப்பா... நான் தான் ஏழரைக்கு வர்றேன்னு சொல் லிட்டு தானே போனேன். அதுக்குள்ளே யார் அபிஷேகம் பண்ண சொன்னது? பால் கொண்டு வந்து, திருப்பி எடுத்துட்டா போக முடியும்? அலங்காரத்தை கலைச்சுட்டு மறுபடியும் அபிஷேகம் பண்ணு... அதுக்கு தானே இருக்கே?'— "அட! மட, மடன்னு அலங்காரத்தை பண்ணிட்டு திரையை விலக்குய்யா... நேரமாவுது, ஜனங்க கடைசி பஸ் பிடிச்சாகணும்... இப்படி மசமசன்னா இருப்பே?'— "அர்ச்சனை டிக்கெட் தான் வாங்கிட்டோமில்லே... தட்டிலே ஒரு ரூபா போட்டா போதும்!'

பல்வேறு பக்தர்களின், ஏச்சுப் பேச்சுகளிடையே, அர்ச்சகர் தொழில் இப்படி கேவலப் படுமென்று, நினைக்கவில்லை சரவணன் .சரவணன் பார்த்த பெரிய, பெரிய கோவில்களிலெல்லாம், அர்ச்சகரின் தட்டில், இவனே பத்து ரூபாய் நோட்டைபோட்டிருக்கிறான். தட்டு நிறைய சேரும் ரூபாய் நோட்டு, சில்ல ரையை அள்ளி ஒரு பாத்திரத்தில் போட்டுவிட்டு, மறுபடியும் வெறும் தட்டோடு தீபாராதனை காண்பித்து வந்து நீட்டுவர் அர்ச்சகர்கள். அப்படிப்பட்ட உசத்தியான கோவில்களையெல்லாம் விட்டுவிட்டு, இந்த மூலையில், இப்படிப்பட்ட கோவிலில், போஸ்டிங் போட்டுவிட்டதை நொந்தபடி யோசிக்கலானான்.ஆளாளுக்கு அதிகாரம் செய் கின்றனரேயன்றி, தட்டில் ஒரு ரூபாய்க்கு மேல் போடும் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருவதில்லை. இது ஒரு பரிகார ஸ்தலமாக இல்லாததால், டூரிஸ்ட் பஸ் பக்தர்கள் வருவதில்லை.தினமும் காலையில் வழக்கமாக வரும் பத்து பேர், இரவில் அம்பாள் சன்னதி முன் சவுந்தர்யலகரி சொல்லித்தரும் ஒரு மாமியும், நாலு மாணவிகளும் தான். ஏதாவது செவ்வாய் ராகு காலம், வெள்ளிக்கிழமை என்றால், உள்ளூர் கூட்டம் வரும்.

ஆக, உடம்பை வருத்தி, வரும்படியே இல்லாமல், இந்த வசதியில்லாத கிராமத்தில் குப்பைக் கொட்டுவது, சரவணனுக்கு பெரும் சவாலாக இருந்தது.இவனுடைய நண்பன், சேலத்தில் ஒரு செழிப்பான கோவிலில் போஸ்டிங் வாங்கி, அத்தனை வசதியுடன், தினமும் தட்டில் குறைந்தது இருநூறு, முன்னூறு தேறுவதாக தொலைபேசியில் சொன்னான். அதுவே சரவணனை சிந்திக்க வைத்தது.இப்படி இங்கே கிடந்து அவஸ்தைப் படுவதை விட, சொல்லாமல் கொள்ளாமல் மெடிக்கல் லீவில் சென்றால், பிரச்னை தீர்ந்துவிடும். இந்த கோவிலுக்கு வேறு ஒரு இளிச்சவாயனை போஸ்டிங் போட்டு விட்டால், தான், நிதானமாக ஏதாவது ஒரு பணக்கார கோவிலுக்கு, பணத்தை கொடுத்தாவது டிரான்ஸ்பர் வாங்கிக் கொள்ளலாம். இப்படி சரவணனின் எண்ண ஓட்டம் தீர்மானித்து விட்டது. ஒரு மாத காலமாக அர்ச்சகர் வேலை பார்த்ததில் அலுப்பு மேலிட, இன்றைக்கே சாவியை ஒப்படைத்துவிட்டு, பஸ் ஏறிவிட வேண்டுமென்று காத் திருந்தான் சரவணன்.இந்த ஒரு மாத காலமாக, இவனுடனேயே ஒத்தாசையாக, தினமும் கூடமாட எல்லா வேலைகளையும் செய்தார் பிச்சு மணி ஐயர். இன்று, தான் எதிர்ப்பார்த்த போது, பிச்சுமணி ஐயர் ஏன் வரவில்லை என்று சரவணனுக்கு ஆவலும், ஆத்திரமும் மிகுந்தது. ஐயர் வீட்டிற்கே போய் சாவியை கொடுத்து விட்டு சென்று விட வேண்டியது தான் என்ற முடிவோடு கிளம்பினான்.ஐயர் குடியிருந்த தெருவில் நுழைந்தவுடனேயே, ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளதாக சூழ்நிலை அச்சுறுத்தியது. ஐயர் வீட்டின் முன் ஜனங்கள்... மாமியின் அழுகுரல்.""இப்படி சொன்னதை கேட் காம என்னை நிற்கதியா விட்டுட்டு போயிட்டேளே!'' மாமியின் அலறல், சரவணன் காதில் ஈட்டியாய் பாய்ந்தது.

"நானே சொல்லியணுப் பணும்ன்னு பாத்தேன்... நீயே வந்துட்டே. நேத்தி ராத்திரி ஐயர் காலமாயிட்டாராம். மூணு நாளாவே நல்ல ஜுரமாம். மாமி வேணாம்ன்னு சொல்லியும் கேட்காம, "தினமும் அம்பாளையும், ஈஸ்வரரை தரிசிக்காம இந்த உடம்பு எதுக்கு?'ன்னு குளிச்சுட்டு, கோவிலுக்கு வந்து, நம்ப கிட்டே எதுவும் காட்டிக்காமே சன்னதியிலேயே கழிச்சிருக்கார்.""நேத்து வந்து படுத்ததும் ஜுரம் ஜாஸ்தியா போச்சாம். பாவம், குழந்தை, குட்டி, சொந்தம்ன்னு யாருமே இல்லே... எல்லாம், "அம்பாள்' தான்னே காலத்தை கழிச்சுட்டார்.""நாங்க, "அர்ச்சகர் வேலைக் கப்புறம், ஏதாவது மெஸ் மாதிரி வைச்சு தொழில் பண்ணுங்களே...'ன்னு சொன்னோம்...""ஆனால் அவரோ, "அர்ச்சகர்ங்கறதை ஒரு வேலைன்னு நான் நினைக்கலே. சாட்சாத் பகவானுக்கும், அம்பாளுக்கும் கைங்கர்யம் செய்ற பாக்யமாத்தான் நினைக்கறேன். அதனாலே, வேற தொழில்ன்னு பண்ண ஆரம்பிச்சா, தினமும் ஈஸ்வர கைங்கரியம் விட்டு போயிடுமோன்னு பயமாயிருக்கு!'ன்னு சொன்னார்... அத்தனை மனப்பக்குவம் இவருக்கு,'' என்று, ஐயரைப் பற்றி பொறுப்பாளர் கூறியபோது, பீறிட்ட அழுகையை சரவணனால் கட்டுப்படுத்த இயலவில்லை.""இன்னிக்கு கோவில் நடையை திறக்க வேண்டாம். ஐயர் காரியம் முடியட்டும்,'' என்று, மற்ற ஏற்பாடுகளை கவனிக்க போய்விட்டார் பொறுப் பாளர்.தெளிந்த மனதோடு, ஐயரின் பூத உடலை நெருங்கி கும்பிடு போட்டான் சரவணன்."என் அம்பாளை விட்டு போயிட மாட்டயே?' என்று பிச்சுமணியின் மவுனம் கேட்பதாக தோன்றியது!சரவணனின் கண்களிலிருந்து பெருக்கெடுத்த நீர்துளிகள், ஐயருக்கு ஆறுதலான பதிலை தந்திருக்கும்!

(தினமலர் நாளிதழில் பரிசு பெற்ற சிறுகதை. வெளிவந்த தேதி அக்டோபர் 5 2008)

oooOooo
                         
 
அகிலா கார்த்திகேயன் அவர்களின் இதர படைப்புகள்.   சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |