Tamiloviam
மார்ச் 20 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : தமிழக - மத்திய பட்ஜெட்
- மீனா [feedback@tamiloviam.com]
  Printable version | URL |

 

மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பாக தாக்கல் செய்த பட்ஜெட்டிலும், நேற்று மாநில அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டிலும்  மக்களுக்கு ஆக்கப்பூர்வமாக உதவிகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விட அதிரடியாக கடன்கள் சிலவற்றை ரத்து செய்து அவர்களின் ஆதரவைப் பெறவேண்டும் - அதன் மூலமாக வரப்போகும் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி இருப்பது தெளிவாகிறது.

மத்திய அரசு தன் பங்கிற்கு கிட்டத்தட்ட 60,000 கோடி விவசாயக் கடன்களை ரத்து செய்தது என்றால் மாநில அரசு தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்கள் பெற்ற விவசாயக் கடன் ரூபாய் 5 கோடியையும் ஹட்கோ நிறுவனத்தில் நெசவாளர்கள் பெற்ற 15 கோடி ரூபாய் கடனையும் ரத்து செய்துள்ளது. இதைத்தவிர ஏகப்பட்ட வரிச்சலுகைகளையும் வாரி இறைத்துள்ளது மாநில அரசு. வழக்கம்போல அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, ஏழைப் பெண்கள் திருமண உதவி, மகப்பேறு நிதியுதவி என்பன போன்ற சலுகைகளை வாரி இறைத்துள்ள மாநில அரசு கூடுதலாக கேபிள் ஆபரேட்டர்களுக்கு அவர்கள் செலுத்தும் கேளிக்கை வரியை ரத்து செய்ய உத்திரவிட்டுள்ளது. மேலும் அவர்கள் செலுத்த வேண்டிய 18 கோடி ரூபாயையும் தள்ளுபடி செய்துள்ளது.

ஏற்கனவே ஏகப்பட்ட இலவசங்களை வாரி இறைத்துதான் இப்போதுள்ள அரசு ஆட்சிக்கே வந்தது. இலவசங்கள் தொடர்வதோடு மட்டுமல்லாமல் இப்படிப்பட்ட வரிச்சலுகைகளையும் வழங்கினால் மக்கள் மீண்டும் நாடாளுமன்ற - சட்டமன்ற தேர்தல்களில் தங்கள் கட்சிக்கே ஓட்டுப்போடுவார்கள் என்று மத்திய மாநில அரசுகள் திண்ணமாக நம்புவதையே இந்த பட்ஜெட்டுகள் நிரூபிக்கின்றன. கடன்களை ரத்து செய்வதில் இவர்கள் காட்டிய ஆர்வத்தில் ஒரு சிறு பங்கையாவது விஷமாக உயர்ந்துவரும் விலைவாசியைக் கட்டுக்குள் வைக்க இவர்கள் காட்டியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? அதைவிட்டு மக்களை எவ்வளவு சோம்பேறிகளாக்க முடியுமோ அவ்வளவு சோம்பேறிகளாக்கத்தான் மத்திய - மாநில அரசுகள் முயன்று வருகின்றன.. கணக்கில்லாமல் வழங்கப்படும் இலவசங்களும் - வாங்கிய கடன்களை ரத்து செய்வதும் இதற்கான சிறு உதாரணங்கள்...

தங்களது சாதனைகளைச் சொல்லி ஓட்டுக் கேட்பது முதல் ரகம் - குஜராத்தில் மோடி செய்தது இந்த ரகத்தைச் சேர்ந்தது. சொல்லிக்கொள்ளும்படி நாங்கள் சாதனைகள் ஒன்றுமே செய்யவில்லை - எங்கள் ஆட்சியின் சோதனைகளை மக்கள் மறக்க வாரி வழங்குகிறோம் இலவசங்களையும் வரிச்சலுகைகளையும் என்பது இரண்டாவது ரகம் - நம் தமிழக அரசும் மத்திய அரசும் இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள்.

இப்படி இவர்கள் வாரி இறைக்கும் சலுகைகள் எல்லாம் மக்களின் பணத்திலிருந்துதான் எடுக்கப்படுகிறது என்பதையும் - இந்தப்பணத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் கோடானுகோடி மக்களின் வாழ்க்கை உண்மையிலேயே எல்லா வளங்களையும் பெற்று சுபிட்சமாகும் என்பதையும் மக்கள் என்று உணர்கிறார்களோ அன்று இவர்களின் இந்த ஆட்டம் ஒரு முடிவிற்கு வரும்.

பசித்தவனுக்கு ஒரு மீனைக் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுத் தந்தால் அவன் வாழ்நாள் முழுவதும் அதைக்கலையைக் கொண்டு பிழைத்துக்கொள்வான் என்பது பழமொழி.. மக்களுக்கு உண்மையாகவே நல்லது செய்யவேண்டும் என்று நினைத்தால் இப்படிப்பட்ட இலவசங்களையும் வரிச்சலுகைகளையும் கொடுப்பதை விட அவர்களது ஜீவாதார பிரச்சனைகள் தீர ஆக்கப்பூர்வமாக ஏதாவது நல்ல திட்டங்களை அரசு நிறைவேற்றவேண்டும். அதை விடுத்து தேர்தலை குறிக்கோளாகக் கொண்டு செய்யப்படும் இத்தகைய நடவடிக்கைகள் அரசியல்வாதிகள் எதிர்பார்க்கும் பலனை நிச்சயம் கொடுக்காது. குஜராத்தில் நடைபெற்ற தேர்தலையும் அதன் முடிவுகளையும் இத்தகைய அரசியல்வாதிகள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். பார்ப்பார்களா???

oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |