Tamiloviam
மார்ச் 22 07
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : பருத்தி வீரன்
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

Karthi, PriyaManiகிராமத்தில் உருப்படியாக ஒன்றுமே செய்யாமல் சதா அடிதடி, வெட்டுக்குத்து என்று சண்டியராக தன் சித்தப்பா சரவணனுடன் வலம் வருபவர் கார்த்தி. இவர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கும் கூத்து அந்த கிராமத்தையும், அங்குள்ள காவல் நிலையத்தையும் கதிகலங்க வைக்கிறது. உள்ளூர் சிறை போரடித்துப் போனதால் "பெருசா ஏதாவது பண்ணி மெட்ராஸ் ஜெயிலை பாத்துடனும்.." என்ற மகத்தான லட்சியத்துடன் திரிபவர்கள் இருவரும்.

இளம்வயதில் தன்னை சாவிலிருந்து காப்பாற்றியவன் என்ற ஒரே காரணத்திற்காக முரடனாக இருந்தாலும் கார்த்தியை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருப்பவர் கார்த்தியின் அத்தை மகளான ப்ரியாமணி. மாமன் மகனாக இருந்தாலும் கார்த்தியின் முரட்டுதனம் மற்றும் அவரது பெற்றோர் கலப்புத்திருமணம் செய்தவர்கள் போன்ற காரணங்களுக்காக மகளை கார்த்திக்கு கட்டிவைக்க ப்ரியாமணியின் அப்பா பொன்வண்ணன் மறுக்கிறார்.

ஒரு கட்டத்தில் ப்ரியாமணி கார்த்தியிடம் தன் காதலையும் அதற்கு இருக்கும் எதிர்ப்புகளையும் சொல்லிக் கதற மனம் மாறுகிறார் கார்த்தி. தன் சண்டியர் தனத்தை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு பொன்வண்ணனிடம் போய் பெண்கேட்க - அதை பொன்வண்ணன் மறுக்க கலவரம் ஆரம்பமாகிறது. ஏற்கனவே கார்த்தி மற்றும் சரவணனின் போக்கிரித்தனத்தால் பாதிக்கப்பட்ட அனைவரும் அவர்களுக்கு எதிராக பொன்வண்ணனுடன் கைகோர்க்க ஆரம்பிக்கிறார்கள். எல்லா எதிர்ப்புகளையும் மீறி கார்த்தி - ப்ரியா ஒன்று சேர்ந்தார்களா? சரவணனின் நிலை என்ன ஆனது என்பதே கிளைமாக்ஸ்.

நாயகன் கார்த்தியை அறிமுக நாயகன் என்றே சொல்ல முடியாத அளவிற்கு ஆரம்பம் முதல் கடைசி வரை அசத்துகிறார். சண்டைக் காட்சியிலும் சரி... காமெடி காட்சியிலும் சரி கலகலப்பூட்டி இருக்கிறார்.

PriyaMani, Karthiபூப்போட்ட பாவாடை தாவணி, எண்ணெய் மினுங்கும் முகம் என ப்ரியாமணி. தமிழ் படங்களில் நாயகியின் வேலை இரண்டு வார்த்தை பேசி நாலு பாட்டிற்கு டூயட் ஆடுவது மட்டும் தான் என்ற நினைப்பை உடைக்கும் விதமாக படம் முழுவதும் இவரது நடிப்பு அபாரம். மேக்கப் போடாத முகம் - சொந்தக் குரலில் பேசுவது என்று வழக்கமான கதாநாயகிகள் செய்யும் வேலைகளிலிருந்து மாறுபட்டு நிற்கிறார். ப்ரியா மணியின் யதார்த்தமான நடிப்பு படத்திற்கு பக்கபலம் என்றால் மிகையில்லை.

ஒருகால ஹீரோ சரவணன் சித்தப்பாவாக வந்து அசத்துகிறார். மகனோடு சேர்ந்து ஆட்டமான ஆட்டம் ஆடுகிற போதும்.. ப்ரியாவின் உண்மைக் காதலை உணர்ந்து கார்த்திக்கு கண்கலங்க புத்திமதி சொல்லும் போதும் மனதில் நிறைந்து நிற்கிறார்.

எந்த தொழில் செய்தாலும் கார்த்தி மற்றும் சரவணன் செய்யும் அலும்பல்களால் அதை விட்டுவிட்டு பரிதாபமாக நிற்கிறார் கஞ்சா கருப்பு. பெரிதாக சிரிப்பு வரவில்லை கருப்புவின் காமெடியில்.

மாமா பொன்வண்ணன், அவர் மனைவி, பொணந்தின்னி, கூலிங் கிளாஸ் போட்ட பாட்டி  என அத்தனை பேரும் கதாபாத்திரங்களாகவே உலாவருகிறார்கள். படத்தோடு படு இயல்பாகப் பொருந்துகிறார்கள்.

ராம்ஜியின் ஒளிப்பதிவும் யுவனின் இசையும் படத்திற்கு பெரும் பலம். படத்தில் பல நிறைகள் இருந்தும் அந்த நீள - கொடூரமான கிளைமாக்ஸ் முகம் சுளிக்க வைக்கிறது. யதார்த்தம் என்ற பெயரில் அத்தனை வக்கிரம் தேவையா அமீர்? எது எப்படியோ கிராமத்து மண்வாசனையுடன் படம் எடுக்க முன்பு பாரதிராஜா - தற்போது அமீர்.

| | | |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |