Tamiloviam
மார்ச் 22 07
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறுகதை : சத்தியவாக்கு
- இஷாரா [riyasath@hotmail.com]
| | Printable version | URL |

அவள் வரவை எதிர்ப்பார்த்து ஆத்திரத்துடன் காத்திருந்தான் அருண். 'ஜாலக்காரி என்னாமாய் அப்பாவி வேடம் போடுகிறாள். வரட்டும் ஒரு கைப்பார்கிறேன்.' என்று கல்யாணமாகி ஒரு வாரமேயான புத்தம் புது மனைவி திவ்யாவை எண்ணி மருகினான்.

கோயிலில் இருந்து திரும்பியவள் நேராக அவனிடம் வந்தாள். "அலுவலகத்தில் இன்று முக்கியமான ப்ராஜக்ட் தொடங்கப் போவதாக சொன்னீர்கள் அல்லவா. அதை நல்லபடியாக தொடங்கி நடத்த வேண்டிக்கொண்டேன்." என்று கூறி விபூதி வைத்துவிட்டாள் திவ்யா கணவனின் மனநிலை அறியாமல்.

'ஆஹா, இவளல்லவா காதல் மனைவி! என்னமாய் பின்னியடுக்கிறாள் நடிப்பில்' என்று மனதிற்குள் சினந்தான். அவள் வேடத்தை இப்போதே துகிலுரிக்க ஆசைதான் நேரமின்மையால் அவள் சிரித்து சிரித்து இனிக்க பேசி வீடிலுள்ள அத்தனை பேரையும் மயக்குவதை பார்த்து சகிக்க
வேண்டியதாயிற்று.

"திவ்யா ரொம்ப நல்ல பெண் இல்லப்பா. பார் அவ்வளவு வேலையையும் அவளே இழுத்து போட்டுக்கொண்டு செய்கிறாள். எல்லோரிடமும் எவ்வளவு இனிமையாய் பழகுகிறாள். நீ இவ்வளவு நாள் திருமணம் வேண்டாமென்று தள்ளிப் போட்டது கூட இப்படி ஒரு மருமகள் கிடைக்க தான் போல. எல்லாம் கடவுளின் கணக்கு." என்று பெருமகிழ்வுடன் கூறிய தாயிடம் உண்மையை சொல்லமாட்டாமல் அலுவலகம் கிளம்பினான்.

அன்று வேலையில் மனம் செலுத்தமுடியாமல் தடுமாறினான். சிறிய காலத்தில் பெரிய தொழிலை உருவாக்கி கட்டிக்காக்கும் கெட்டிக்காரன் என்று பெயரெத்தவன், ஒரு சின்ன பெண்ணின் சூழ்ச்சியறியாமல் ஏமாந்துவிட்டோமே என்று தன்னைதானே அருவறுத்தான். இன்றே இதற்கொரு முடிவுகட்ட எண்ணி சீக்கிரமாக வீடு திரும்பியவன் மனைவியை அழைத்துக் கொண்டு வெளியே கிளம்பினான்.

நேற்றிலிருந்து முகத்தை கடினமாக வைத்துக்கொண்டு தன்னிடம் ஒரு வார்த்தையும் பேசாமல் இருக்கும் கணவனின் போக்கு ஏதோ நடந்திருப்பதை உணர்த்தியது. எரிமலை வெடிக்க அச்சத்துடன் காத்திருந்தாள். ஆளில்லாத இடத்தில் வண்டியை நிறுத்தியவன் அவள் புறம் திரும்பாமலே பேசினான்.

"நேற்று மாலை விநோதன் என்னை வந்து சந்தித்தான்." என்றான் சுருக்கமாக. குரல் இருகியிருந்தது.

முதலில் ஏற்பட்ட அதிர்ச்சியில் சிறிது நேரம் ஒன்றும் சொல்லமாட்டாமல் திகைத்தாள். பிறகு மெல்ல மெல்ல
நடப்பு புரிந்தது. ஆத்திரம் தலைக்கேறியது.

"ஹ¤ம் இவ்வளவு தானா உங்களின் சத்தியவாக்கு." என குரலில் ஏளனம் தெறிக்க வினவினாள்.

"என்ன உன் வண்டவாளமெல்லாம் தண்டவாளம் ஏறிய அதிர்ச்சியில் உளறுகிறாய்" என்று அதட்டினான்.

"இல்லை நான் உளறவில்லை சரியாகத்தான் சொன்னேன். கடவுளின் சந்நிதியில் அக்னி சாட்சியாய் என்னை கரம் பிடிக்கும் போது என்னுடைய சுகத்திலும் துக்கத்திலும் உறுதுணையாக இருப்பதாக நீங்கள் செய்த சத்தியத்தைச் சொன்னேன். அந்த விநோதன் யார் அவன் உங்களிடம் என்ன சொல்லியிருப்பான் என்று எனக்கு தெரியும். ஆனால் யாரோ ஒரு முகம் தெரியாதவனின் பேச்சை நம்பத்தோன்றிய உங்களுக்கு கட்டிய மனைவியிடம் விசாரிக்க தோன்றவில்லையே." என்று பொரியத் துவங்கியவள் குறுக்கிட்டு பேச முயன்றவனை கை உயர்த்தி, "இருங்கள் நான் சொல்ல வந்ததை முதலில் சொல்லி முடித்து விடுகிறேன்.

விநோதனின் கவர்ச்சிகரமான பேச்சில் மயங்கி அவனுடன் பேசிப் பழகியது உண்மைதான். ஆனால் மலருக்கு மலர் தாண்டும் வண்டு அவன் என்று தெரிந்த பின் அவனை விட்டு விலகி விட்டேன். அவன் விடாமல் எனக்கு தொந்திரவு கொடுக்கவும், அப்பாவிடம் சொல்ல முடியாமல் என் சித்தப்பாவிடம் சென்றேன். அவர்தான் இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். திருமணமாகி விட்டால் இவனைப் போன்ற சில்லரை ஆசாமிக்கு தொந்திரவு கொடுக்க தைரியமிருக்காது என்று சொல்லி என்னை சம்மதிக்க வைத்தார். உங்கள் வீட்டிலுள்ளவர்கள் காட்டிய அன்பு எனக்குள் இருந்த இறுக்கத்தை தளர்த்தியது. என்னுடைய கசப்பான அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ள விரும்பவில்லையே தவிர உங்களை ஏமாற்றும் எண்ணம் எனக்கில்லை." என்று மெல்லிய குரலில் முடித்தாள்.

தலை குனிந்து இருந்தவளின் கரம் பற்றி, "சே ஒரு ஜாலக்காரனின் சேச்சை நம்பி உன்னை தவறாக எண்ணிவிட்டேன். என்னை மன்னித்துவிடு திவ்யா." என்று சிறுத்துவிட்ட குரலில் தன்னை வெறுத்து கேட்டான் அருண். அவள் பதிலேதும் சொல்லவில்லை.

"உன் கோபம் புரிகிறது. ஆனால் என் பக்க விளக்கத்தையும் கேட்டுவிட்டு அப்புறம் மன்னிக்க முடியுமா என்று பார். முதலில் எனக்கும் இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லை. காரணம் நான் தொழில் நடத்துபவன். அதை செம்மையாக நடத்த நேரம் காலம் பார்க்காமல் உழைப்பவன். மனைவியாக வரப்போகிறவள் இதையெல்லாம் புரிந்து கொள்வாள் என்று என்ன நிச்சயம் அதனால் திருமணத்தையே தவிர்த்தேன். உன் மதிமுகத்தை படத்தில் பார்த்ததும் என்னால் மறுக்க முடியவில்லை திவ்யா. அதனால் சம்மதித்தேன். உன் அமைதியும் அனுசரணையும் என்னை கட்டிப் போட்டு விட்டது திவ்யா. என் வாழ்க்கையின் எந்த சமயத்திலும் நான் அதிருஷ்டத்தை நம்பியதில்லை.ஆனால் இப்போது நம்ப தோன்றுகிறது. ஒரு தரம் என் வாக்கை மீறிவிட்டேன் இனி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உன்னை தவறாக நினைக்க மாட்டேன் இது சித்தியம்" என்றவனை முகம் பிராகாசிக்க
ஏறிட்டுப் பார்த்து அழகாக முறுவலித்தாள் திவ்யா. முகம் மலர மனைவியை இறுக அணைத்துக் கொண்டான் அருண்.

| |
oooOooo
                         
 
இஷாரா அவர்களின் இதர படைப்புகள்.   சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |