|
வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா உள்பட 24 பெண்கள் போட்டியிடுகிறார்கள். 182 வேட்பாளர்களுடன் களம் இறங்கும் அதிமுகவில் இத்தேர்தலில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருப்பது வெறும் 14 சதவீதமே ஆகும். இதில் வேடிக்கை என்னவென்றால் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத்தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யும் மசோதாவை ஆதரிக்கும் கட்சிகளில் அதிமுகவும் ஒன்று. ஒரு பெண் தலைமையிலான கட்சியிலேயே பெண்களுக்கு வெறும் 14 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டால் மற்ற கட்சிகளில் பெண்களில் நிலை என்னவாக இருக்குமோ தெரியவில்லை.
ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் ஏகப்பட்ட மசோதாக்களை எதிர்கட்சிகளின் ஆதரவுடனோ அல்லது எதிர்கட்சிகளின் பலத்த எதிர்பிலும் நிறைவேற்றத் தெரிந்த ஆளும் கட்சிக்கு இந்த 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மட்டும் என்ன கஷ்டமோ தெரியாது.. இந்நிலை எந்தக் கட்சி ஆளும் கட்சியாக வந்தாலும் தொடர்கிறது. ஒவ்வொருத் தேர்தலிலும் ஜெயிக்க எல்லா கட்சிகளும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் ஆதரவைப் பெறவும் பெண்களின் ஆதரவைப் பெறவும் போட்டியிடுகின்றன. ஆனால் பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட இடம் கொடுக்க மட்டும் எந்தக்கட்சியும் முன்வருவதே இல்லை.
ஆனால் எல்லா தேர்தல்களிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற நாங்கள் பாடுபடுவோம் என்றெல்லாம் வாக்குறுதி கொடுக்க இவர்கள் மறப்பதில்லை. மொத்தத்தில் எந்தக் கட்சிக்கும் உண்மையிலேயே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மனமில்லை என்பதே நிஜம். ஆணுக்குப் பெண் நிகர் என்பதெல்லாம் வெறும் பேச்சளவில்தான் இன்னமும் நிற்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
ஒருகாலத்தில் படித்தவர்கள் அதிகம் அரசியலில் ஈடுபட மறுத்துவந்தார்கள். தற்போது அந்நிலை மாறி அதிக அளவிலான பட்டதாரிகள் அரசியலில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்கள். மேலும் ஒவ்வொரு கட்சியும் "தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் இத்தனை பட்டதாரிகள் போட்டியிடுகிறார்கள்.." என்று விளம்பரப்படுத்துகிறார்கள். அதைப் போலவே பெண்களும் அதிக அளவில் அரசியலில் ஈடுபட முன்வரவேண்டும். அதைவிட முக்கியமாக பெண்களுக்கு தங்கள் கட்சி சார்பில் உரிய அங்கீகாரம் மற்றும் கணிசமான அளவில் தேர்தலில் நிற்க இடஒதுக்கீடு அளிக்க அரசியல் கட்சிகள் முன்வரவேண்டும். செய்வார்களா நம் அரசியல்வாதிகள் ?
|