இசையமைப்பாளர்களான ப்ருத்விராஜ் - பிரகாஷ்ராஜ் இருவரும் பிரம்மச்சாரிகள். நகரத்தில் பிரம்மச்சாரிகளுக்கு வீடு கிடைப்பதில் உள்ள கஷ்டங்களை எல்லாம் மீறி இருவரும் ஒரு அபார்ட்மெண்டில் வீட்டை பிடிக்கிறார்கள். அபார்ட்மெண்ட் செக்ரட்டரியான பிரமானந்தத்துடன் பிரகாஷ்ராஜ் - ப்ருதிவிராஜுக்கு அடிக்கடி கருத்து மோதல் ஏற்படுகிறது. "கல்யாணம் செய்து கொண்டால் பிரம்மச்சாரி பிரச்சனை இல்லாமல் நல்ல வீடு கிடைக்கும் - அதனால் திருமணம் செய்து கொள்" என்று பிரகாஷ்ராஜ் ப்ருதிவிராஜிடம் கூற "பார்த்தவுடனேயே மனசுக்குள் மணியடிப்பது போல மண்டையில் பல்பு எரிவது மாதிரியான பெண்கள் அகப்பட்டால் கல்யாணத்திற்கு ரெடி " என்று தனது ஆசையைச் சொல்கிறார் ப்ருதிவி.
ஒருநாள் தங்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கும் ஜோதிகாவைப் பார்க்கிறார் ப்ருதிவி. அவருடன் பழக ஆரம்பிக்கும்போதுதான் தெரிகிறது ஜோ வாய் பேச முடியாத - காது கேட்காத பெண் என்று. ஆனாலும் மணந்தால் இவளைத்தான் மணப்பேன் என்ற உறுதியுடன் ஜோவிடம் நட்பை பலப்படுத்துகிறார் ப்ருதிவி. காது கேளாதோர் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கும் ஜோவின் தோழியான சொர்ணமால்யா பேச முடிந்தவர். பிரகாஷ்ராஜின் வற்புறுத்தலுக்கு இணங்கி ஒரு நாள் ஜோவிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறார் ப்ருதிவி. அதை மறுக்கு ஜோ கொஞ்சம் கொஞ்சமாக ப்ருதிவியுடனான தொடர்பையே துண்டிக்க முயற்சி செய்கிறார்.
இதற்கிடையே பிரகாஷ்ராஜ் - சொர்ணமால்யா இருவரும் காதலித்து கல்யாணம் செய்து கொள்கிறார்கள். ப்ருதிவியின் காதலை ஏன் ஜோ மறுக்கிறார் - இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தார்களா என்பதே கிளைமாக்ஸ்.
காது கேட்காத - வாய் பேசமுடியாத பெண் பாத்திரத்தில் இவரது நடிப்பைப் புகழ வார்த்தைகளே இல்லை என்னும் அளவிற்கு அசத்தியுள்ளார் ஜோதிகா. அவர் இசையை உணரும் காட்சிகளிலும், தன் உலகத்தில் வேறு யாரும் வர முடியாது என்று கதறி அழும்போதும் தன் அற்புதமான நடிப்பை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
தமிழ் திரையுலகில் ப்ருதிவிராஜுக்கு நிச்சயம் ஒரு தனி இடம் கிடைக்கப்போவது உறுதி. அலட்டல் - ஆர்பாட்டம் இல்லாத மென்மையான நடிப்பால் கவர்கிறார். குறிப்பாக ஜோவின் நாயால் கடிபடும் இடத்திலும் நாய் கடித்ததற்காக மன்னிப்பு கேட்க வரும் ஜோவிடம் வழியும் இடத்திலும் காதில் பஞ்சை அடைத்துக்கொண்டு தெருவில் நடந்து தண்ணீர் லாரிக்காரனிடம் திட்டு வாங்கும்போதும் நடிப்பில் மிளிர்கிறார்.
ஒரு வில்லனாக - குணச்சித்திர நடிகராக நாம் பார்த்து வியந்த பிரகாஷ்ராஜ் தனக்கு நகைச்சுவையிலும் கலக்க வரும் என்பதை நிரூபிக்கிறார். கரப்பான்பூச்சி கடித்ததால் அப்பார்ட்மெண்ட் செக்ரட்டரி பிரேமானந்தம் மாடியிலிருந்து கீழே விழ, பிரகாஷ்ராஜ் ப்ருதிவிராஜ் இருவரும் பொக்கேயுடன் போய் அவரை விசாரிக்கும் காட்சி ஒன்று போதும் பிரகாஷ்ராஜின் நகைச்சுவை உணர்வை விளக்க...
ஜோவின் தோழியாக வரும் சொர்ணமால்யா, குடியிருப்போர் சங்க தலைவராக வரும் பிரம்மானந்தம், மகனின் மரணத்தில் பழைய கால நினைவுகளிலேயே இருக்கும் பாஸ்கர் மனதில் நிற்கிறார்கள்.
வைரமுத்துவின் பாடல் வரிகளில் வித்யாசாகரின் இசை அருமை. விஜியின் வசனமும் குகனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளன.
எளிமையான கதையை அருமையாகச் சொன்ன இயக்குனர் ராதாமோகனுக்கு பாராட்டுகள். அனல் பறக்கும் சண்டைக்காட்சிகளும் டப்பாங்குத்து பாடல்களும், மசாலாத்தனம் நிறைந்த கதையும் இருந்தால்தான் ஒரு படம் விலைபோகும் என்பதில் நம்பிக்கை வைக்காமல் கதையையும் திரைக்கதையையும் சரியாக இருந்தாலே போதும் - ஒரு நல்ல ஜனரஞ்சகமான திரைப்படத்தை உருவாக்க முடியும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் இயக்குனர். படத்தில் யாருமே கெட்டவர்களாக இல்லாமல் எல்லோரையும் நல்லவர்களாகக் காட்டியிருப்பது பிரமாதம். இயக்குனருக்கு பக்கபலமாக இருந்து இந்த நல்ல திரைப்படத்தை தயாரித்த பிரகாஷ்ராஜுக்கு பாராட்டுகள்.
|