Tamiloviam
ஏப்ரல் 10 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : அடங்காத ஆசை
- மீனா [feedback@tamiloviam.com]
  Printable version | URL |

கர்நாடகத்தில் உள்ளதைப் போல தமிழகத்திலும் எம்.எல்.ஏக்களுக்கு தனித் தனியாக 2 கிரவுண்ட் நிலம் தந்து காலனியை உருவாக்க வேண்டும் என்று சட்டசபையில் கோரிக்கையை வைத்துள்ளார்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான பழனிசாமியும், ஞானசேகரனும். இக்கருத்திற்கு எதிர்பு தெரிவித்த மா.கம்யூனிஸ் உறுப்பினர் பாலபாரதி வீடு இல்லாத மக்களுக்கு வீடுகளை அளித்து அவர்களது தேவையைப் பூர்த்தி செய்வதுதான் எம்.எல்.ஏக்களின் கடமை என்று கூற - தமிழக அரசு ஏற்கனவே 3 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியுள்ளது என்று எதிர்வாதம் செய்துள்ளார் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரன். போதாத குறைக்கு மா.கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் மற்ற எம்.எல்.ஏக்களைப் போலத்தான் சம்பளம் வாங்குகிறார்கள் - சம்பளமே வேண்டாம் என்று சொல்வதில்லை என்று வேறு கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் உள்ளதைப் போல தனக்கும் அரசு 2 கிரவுண்ட் நிலம் வழங்க வேண்டும் - வீடு கட்டித் தரவேண்டும் என்று கேட்கும் இவர்கள் கர்நாடக அரசியல்வாதிகள் போல் தங்கள் சுயநலனுக்கு மத்தியில் கொஞ்சமாவது தங்கள் மாநில நலனையும் பாதுகாப்பதைப் போல தமிழக நலனைப் பாதுகாக்க என்றாவது முயன்றுள்ளார்களா? கிடையாது... ஆனால் தங்களது சொந்த விஷயம் என்றால்.... இவர்கள் தான் அரசியல்வாதிகள்.. இவர்களை நம்பித்தான் நாம் நம் நாட்டை ஒப்படைத்திருக்கிறோம்.

சட்டசபையில் விவாதிக்க ஓராயிரம் பிரச்சனைகள் இருக்க நாம் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளோ யார் புரட்சித்தலைவி என்று விவாதம் செய்துவருகிறார்கள்.. மாயாவதி என்று விடுதலைச் சிறுத்தைகள் கூற - புரட்சித்தலைவி என்றாலே அது அம்மா தான் என்று அ.தி.மு.க உறுப்பினர்கள் விவாதம் செய்ய - இந்த விவாதத்தை சபாநாயகர் கண்டிக்க - அதை எதிர்த்து அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ய - இப்படி நீள்கிறது சட்டசபை காட்சிகள். என்றைக்கோ போட்ட ஒப்பந்த்தை 10 வருடங்களுக்கு மேலாகியும் இன்னமும் நிறைவேற்றாமல் ஏதேதோ சாக்கு சொல்லி காலம் தாழ்த்துகிறார் முதல்வர். உருப்படியாக மக்களுக்கு ஒன்றுமே செய்துவிடக்கூடாது என்று சபதம் செய்துவிட்டுதான் சட்டசபைக்குள்ளேயே நுழைகிறார்களோ என்று நினைக்க வைக்கும் அளவிற்கு அமைகிறது இவர்களது செயல்பாடுகள்.

ஆனால் வாங்கும் சம்பளம் - அனுபவிக்கும் சொகுசு வசதிகள் - இதற்கெல்லாம் மேலாக கட்சியில் சேரும்போது சைக்கிளில் செல்லும் இத்தகைய அரசியல்வாதிகள் பதவிக்கு வந்தவுடனேயே 10 தலைமுறைக்கு தங்கள் சந்ததியினர் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சொத்து சேர்த்து வைத்தாலும் போதும் என்ற மனம் மட்டும் வருவதே கிடையாது. ஆசையே துன்பங்கள்  அனைத்திற்கும் காரணம் என்ற தத்துவத்தை யார் நம்புகிறார்களோ இல்லையோ, பொதுமக்களாகிய நாம் நம்பியே ஆகவேண்டும். அப்போதுதான் பதவிக்கு வரும் அரசியல்வாதிகள் கொடுத்த வாக்கை கொஞ்சமாவது காப்பாற்றுவார்கள் - நம் கஷ்டங்களை ஓரளவிற்காவது போக்குவார்கள் என்று ஆசைபட்டு - பிறகு நினைத்தது ஒன்றுமே நடக்கவில்லையே என்று வருத்தப்படமாட்டோம்.

oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |