பளார் !!
ஓடும் ரயிலில் இருந்து குதிக்க நினைத்தவளை உள்ளே இழுத்து, அவள் கன்னத்தில் என் கை விரல்களை பதித்த சத்தம் தான் அது.
அறை பலமாக விழுந்திருக்க வேண்டும். கன்னத்தைத் தடவிக்கொண்டே குழப்பமாக என்னை ஏற இறங்க ஒருமுறைப் பார்க்கிறாள் அவள்.
சரிதான் அறை வாங்கியதில் அவளுக்கு 'சட்'டென்று எதுவும் புரியவில்லை போலும் என நினைத்துக்கொண்டேன்.
கழிவறையில் இருந்து வெளியே வந்த நான் எதேச்சையாகத்தான் பார்த்தேன். கதவருகே நின்று கொண்டிருந்த அவள் பச்சை நிற.. அய்யோ வர்ணிக்க இது நேரமில்லை நொடியில் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த நான் அவளை உள்ளே இழுத்து அவள் கவனத்தை திசைத்திருப்பும் பொருட்டு ஒரு அறை விட்டேன்.
சுதாரித்துக்கொண்ட அவள் இப்போது எரிச்சலுடன் கேள்விக்கணைகளை வீசினாள்.
"யோவ் யாருயா நீ, எதுக்கு என்னை அடிச்சே? எப்படி வலிக்குது தெரியுமா?"
"இதப்பாரும்மா, நான் யாருங்கிறது இப்போ முக்கியமில்லை, ஆனா நீ பண்ண நினைச்ச காரியம் ரொம்ப தப்பு 'தற்கொலை' எண்ணம்கிறதே ஒரு நிமிட மடத்தனம்தான். ஓடற ரயில்ல இருந்து குதிக்க நினைச்ச நீ எப்ப என் அறை வலிக்குதுன்னு சொன்னியோ அப்பவே நீ அந்த ஒரு நிமிடத்தைத் தாண்டிட்ட, இனியாவது புரிஞ்சு நடந்துக்க"
அவளுடைய பதிலுக்குக்கூட காத்திருக்காமல் ஒரு உயிரைக் காப்பாற்றிய திருப்தியில் என் இருக்கையை நோக்கி நடந்த என்னை, காதுகளில் வந்து அறைந்தன அவள் வார்த்தைகள்!
"தோ பாருடா காப்பத்த வந்துட்டாரு, அங்க ஒரு சோமாறி குறட்டை விட்டே தூக்கத்தை கலைக்கிறானேன்னு காத்தாட இங்க வந்து நின்னா ஒரு நாதாரி கன்னத்தில அறைஞ்சிட்டு கதை சொல்லிட்டுப்போவுது"
என்னையுமறியாமல் என் கை கைக்குட்டையைத் தேடியது.
|