Tamiloviam
ஏப்ரல் 10 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறுகதை : இட ஒதுக்கீடு
- "வினையூக்கி" செல்வா
  Printable version | URL |


SC upholds OBC quota, TWENTY-SEVEN PER CENT QUOTA FOR OBCs என தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த செய்தியைப் பார்த்ததும் மகிழ்ச்சி வெள்ளத்தில் முதல் வேளையாக என்னுடைய  தூரத்து மாமா பையன் சேகரை தொலைபேசியில் கூப்பிட்டேன்.

"சேகரா, ஒழுங்கா GATE எக்ஸாம் எழுது !!!

இந்த வருஷம் கோட்டா கொண்டு வந்துட்டாங்க, உனக்கு நல்ல சான்ஸ் இருக்கு" என உற்சாகப்படுத்திவிட்டு வேறு யாரு சொந்தத்தில இருக்காங்கன்னு யோசித்துக் கொண்டிருக்கும்பொழுதே என் மனைவி ரம்யாவின் தம்பி கிருஷ்ணமூர்த்தி உள்ளே வந்தான்.

"என்ன குமரன், தீர்ப்பு உங்க மக்களுக்கு சாதகமா வந்துடுச்சு போல"

"கிச்சா, அத்திம்பேருன்னு சொல்லு, பேர் சொல்லிக் கூப்பிடாதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்"

வழக்கம்போலவே கிருஷ்ணமூர்த்தியை ரம்யா கடிந்து கொண்டாள். சபைகளில்  காயத்ரியோட கணவர் வாசுதேவனை மட்டும் அத்திம்பேர் எனக்கூப்பிட்டு என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது ரம்யாவுக்கு சுத்தமாகவே பிடிக்காது. கிருஷ்ணமூர்த்தி மட்டுமல்ல, ரம்யாவோட அம்மா, அப்பா எல்லோரும் என்னை வாசுதேவனை விட ஒரு படி கீழே வைத்திருப்பதாகவே ரம்யாவுக்கு தோன்றும்.

"என்னதான் இருந்தாலும் வாசு, இந்த வீட்டுக்கு மூத்த மருமகன், அதனால ஒரு ஸ்பெஷல் டிரீட்மெண்ட் இருக்கிறது இயல்புதானே!!.. உன் தம்பி சின்ன வயசிலேந்து என்னை பார்க்கிறான்..பேரு சொல்லியே கூப்பிட்டு பழகின பின்ன சடார்னு உறவுமுறைலக் கூப்பிடுறது வராது ரம்யா " என சொன்னாலும் ரம்யா ஒத்துக்க மாட்டாள்.

இந்த மண்டல் கமிஷன், இடஒதுக்கீடு பற்றி தபால் துறையில் சம அளவில் உயரதிகரிகளாக இருக்கும் ரம்யாவின் அப்பாவுக்கும் என் அப்பாவுக்கும் நான் சின்ன வயசில இருக்கிறப்ப கடும் வாக்குவாதம் நடக்கும். நானும் கிருஷ்ணமூர்த்தியும் அவங்க கூட உட்கார்ந்து அதைக் கவனிப்போம்.

எங்க குடியிருப்பில்  வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்தப்ப அதிகமாக கவலைப்பட்டது என் அப்பாதான். "என்னய்யா, நிஜக்காரணம் சொல்லிக் கவிழ்த்து இருந்தா பரவாயில்லை. ராமர் எதுக்கெல்லாம் பயன்படுறாரு பாருய்யா?" 

அதற்கப்புறம் அந்த மாதிரி விவாதங்களில் அவர்களுடன் உட்கார எங்களுக்கு நேரம் இருந்ததில்லை. அதன்பின்பு  இட ஒதுக்கீடு என்ற ஒரு விசயம் எங்க குடும்பங்களுக்கிடையில் வந்தது எனக்கும் ரம்யாவுக்கும் ஒரே கல்லூரியில் ஒரே பொறியியற் பிரிவில் இடம் கிடைத்தபோது தான்.

"என்னதான் ஒரே காலேஜ், ஒரே டிபார்ட்மெண்ட் ல சீட்டுனாலும் என் அக்கா , குமரனை விட 7 மார்க் எண்ட்ரன்ஸ்ல அதிகம்.. இருந்தாலும் அவனுக்கு கோட்டால சீட் கிடைச்சிடுச்சு " அப்படின்னு என் சகநண்பர்கள் மத்தியில தன் அக்காவின் அறிவுத்திறமையைப் பெருமையாக சொல்லிக் கொள்வான்.

கல்லூரியில் ஆரம்பம் முதல் இறுதி தேர்வு வரை முதல் மாணவனாகவே வலம் வந்த  எனக்கும் ரம்யாவுக்கும் அதுவரை இருந்த பால்ய கால நட்பு காதலாகி கல்யாணம் வரைக்கும் ரம்யாவின் பெற்றோரிடம் எடுத்துச்செல்லப்பட, பெரிய எதிர்ப்பு ஏதும் இல்லாமல் சுமுகமாகவே எங்களுக்கு திருமணமும் நடந்து  அதன் சாட்சியாக அஞ்சலிபாப்பா வந்த பிறகு அஞ்சலிப்பாப்பாவின் தாத்தாக்கள் விவாதிக்க ஆரம்பித்திருந்த விசயம்கிருஷ்ணமூர்த்திக்கும் எனக்கும் இடையில் இன்றும் தொடர்கிறது.
"சாதகமான தீர்ப்பு என்றெல்லாம் கிடையாது... க்ரீமிலேயர்ல இன்னும் குழப்பம் இருக்கும்.. பாதி நீதி கிடைச்சாலும் அநீதி தான். எனிவே ஒன்றுமே இல்லாததற்கு இது பெரிய விசயம்"

"க்ரீமிலேயரும் வேணுங்கிறீங்களா, இப்படியே பேசி பேசி நாட்டை சீரழிச்சுடுங்க"

"முதல் தலைமுறையில கிளர்க் ஆகி ரிடையர்ட் ஆகிற சிலவருஷத்துக்கு முன்ன தத்தி தத்தி ஆபிஸர் ஆகுற ஆளோட பையனுக்கு க்ரீமிலேயரில வருவான்னு அவனோட உரிமையைப் பறிக்கிறது கொடுமை. விவசாயம் பண்ற ஒருத்தன் விளைச்சல் நல்லா இருந்தா அந்த வருஷம் லட்சாதிபதி... வானம் பார்த்த பூமி ஆச்சுன்னா எலிக்கறி சாப்பிடவேண்டியதுதான்"

"அப்போ தலைமுறை தலைமுறையா இந்த நாட்டைக் குட்டிச்சுவராக்கிடுங்க"

"லெவல் பிளேயிங் ஃபீல்ட் அமைச்சுக்கொடுக்கிற எந்த அமைப்பும் குட்டிச்சுவராயிடாது."

பேச்சு கடுமையாவதைக் கண்ட

ரம்யா எங்களின் பேச்சை மாற்றும் விதமாக

"கிச்சா, சேவக்கோட பழைய டிரிபில் செஞ்சுரி டிவிடி அத்திம்பேர் கேட்டிருந்தாரே, எடுத்துட்டு வந்தியா?"

கையோடு கொண்டு வந்திருந்த அந்த குறுந்தகட்டை கிருஷ்ணமூர்த்தி என்னிடம் கொடுத்த பின் எங்களுடைய பேச்சு அகமதாபாத் டெஸ்ட், ஐபிஎல்,ஐசிஎல் ஒகேனேக்கல் என ரம்யாவை சங்கடப்படுத்தாத அளவில் , அவள் செய்து கொடுத்த பகோடா, காபியுடன் திசை மாறியது.

கிருஷ்ணமூர்த்தி போகிறப்ப தனது மேசையில் அமர்ந்து வீட்டுப்பாடங்கள் செய்து கொண்டிருந்த அஞ்சலிப்பாப்பாவை பார்த்து,
 
"ரம்யா, நம்ம பேமிலியிலேயே சிரமமில்லாம உன் குழந்தைக்குத்தான் காலேஜ்ல எல்லாம் சீட் கிடைக்கப்போகுது, கொடுத்த வச்ச குழந்தை" சொல்லிவிட்டுப் போனபின் ரம்யாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

"விடு ரம்யா, சாதி மதம் கடந்து நம்ம குழந்தை  அஞ்சலியை வளர்க்கனும்னு  ரிசர்வேஷன் பெனிபிட்ஸ் வேண்டாம்,வேற ஒரு தேவையான குழந்தைக்கு எதிர்காலத்தில் போய்சேரட்டும்னு தானே சாதி,மதம் ஏதும் சொல்லாமல் ஸ்கூல்ல சேர்த்திருக்கிற விசயம் அவனுக்கு தெரியாதுல்ல..."

எனச்சொல்லிவிட்டு தீர்ப்பின் சாராம்சங்களை இணையத்தில் தேட ஆரம்பித்த சில நிமிடங்களுக்குப்பின்னர் தனது வேலைகளை முடித்த ரம்யா "நாளைக்கு நானும் காலேஜ்ல போய் இந்த தீர்ப்போட பெனிபிட்ஸை பத்தி என்னோட ஸ்டூடண்ட்ஸ்க்கு  சொல்லனும்," என சிலக்குறிப்புகளை எடுக்க என்னருகே வந்தமர்ந்தாள்.

oooOooo
                         
 
"வினையூக்கி" செல்வா அவர்களின் இதர படைப்புகள்.   சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |