|
தமிழக முதல்வரின் வரிப்பணத்தை வாரி வாரி வழங்கும் குணம் பல நேரத்தில் பாராட்டப்பட்டாலும் சில நேரத்தில் தேவையற்ற சர்சைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக பேராசிரியர் லோகநாதனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அவரது பெற்றோர் உள்பட 9 பேர் இன்று இரவு அமெரிக்கா செல்கின்றனர். அவர்களில் நான்கு பேரிடம் பாஸ்போர்டே இல்லை. தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் அவர்கள் அனைவருக்கும் ஒரு மணி நேரத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் பேசி மாதக்கணக்கானாலும் கிடைக்காத விசாவிற்கும் மணிக்கணக்கில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் தமிழக அதிகாரிகள். மனிதாபிமான அடிப்படையில் செய்யப்பட்ட பரிந்துரை - முதல்வருக்குப் பாராட்டுகள்.
ஆனால் அதே நேரத்தில் அவர்கள் 9 பேருக்கான பயணச் செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார். இது எதற்காக?? பேராசிரியர் லோகநாதன் கொலை அமெரிக்காவில் - அமெரிக்கர் ஒருவரால் செய்யப்பட்டது. மறைந்த பேராசிரியரின் விருப்பப்படி அவரது உடல் அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்திலேயே அடக்கம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அங்கே தொடங்கியுள்ளன. இறந்த பிறகும் கூட அமெரிக்காவிலேயே தன்னை அடக்கம் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் அளவிற்கு மறைந்த லோகநாதன் அமெரிக்க மண்ணை நேசித்துள்ளார்.
இதில் பேராசிரியரின் பேரில் குற்றம் சொல்ல ஒன்றுமே இல்லை. தமிழகத்தில் நடந்த விபத்துகளில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவி வழங்குவது ஏற்றுக்கொள்ளத்தக்கது. அல்லது இந்தியாவிற்காக பாடுபட்டு உயிரிழந்த / பாதிக்கப்பட்ட ராணுவ / காவல் துறையினருக்கு உதவி வழங்குவது ஏற்றுக்கொள்ளத்தக்கது.
ஆனால் எங்கோ எதற்காகவோ இறந்த ஒருவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அவரது குடும்பத்தினர் அனைவரது பயணச் செலவையும் அரசே ஏற்பது என்பது தேவையற்ற ஒன்று. அரசின் உதவி பெறும் அளவிற்கு பேராசிரியரின் குடும்பம் ஒன்றும் பரம ஏழ்மை நிலையில் இல்லை. தேவையற்ற வகையில் மக்கள் வரிப்பணத்தை செலவழிக்க முதல்வர் முனைவது தவறு. கேட்டவர்களுக்கெல்லாம் தாராளமாக உதவும் தயாள குணம் படைத்தவர் முதல்வர் என்று துதிபாடுபவர்களுக்கு ஒரு கேள்வி - உதவிகளை என்ன அவர் தனது சொந்தப்பணத்திலிருந்தா கொடுக்கிறார்? மக்கள் வரிப்பணத்தை எப்படியெல்லாம் வீணாக்க முடியுமோ அப்படியெல்லாம் வீணாக்கிக் கொண்டிருக்கிறார். கஜானாவை காலி செய்யாமல் போவதில்லை என்ற தீர்மானத்தில் இருக்கிறாரோ கருணாநிதி என்று சந்தேகப்படும் படி அமைந்துள்ளன அவரது இலவச நடவடிக்கைகள். முதல்வரின் இத்தகைய தயாள நடவடிக்கை தொடர்ந்தால் நிச்சயம் தமிழக மக்கள் ஒவ்வொருவரும் பக்கத்து மாநில / நாட்டு மக்களிடன் உதவி கேட்டு கையேந்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.
|