தமிழ் சினிமாவில் இப்படி ஒரு இயக்குனரா என்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருப்பவர் இயக்குனர் அமீர். மௌனம் பேசியதே, ராம் போன்ற படங்களின் மூலம் ஒரு நாகரீக சினிமாவை எடுத்த இயக்குனர் என்ற பெயர் இவருக்குண்டு. இவரது பருத்தி வீரன் திரைப்படம் இது வரை கிராமத்தை, மையமாகக் கொண்டு வந்த திரைப்படங்கள், எல்லாவற்றையும் தாண்டி வெற்றி நடை போட்டு வருகிறது. இப்படத்தின் மகா வெற்றி, இவரை எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்த வில்லை என்பதை இவரிடம் பேசிய பொழுது அறிய முடிந்தது. தன்னை ஒரு சாதாரண மனிதனாகவே பார்த்து, பாவித்து வருவதாக அடிக்கடி சொல்கிறார். தனது சொந்த ஊரான மதுரைக்கு வந்திருந்தவரிடம் பேச வாய்;ப்பு கிடைத்தது.
இவரிடம் பேசிய பேச்சு அப்படியே மனதில் பதிந்து போனது. இனி........
தமிழோவியம் :- பொதுவாக பருத்தி வீரன் திரைப்படத்தின் வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள் ?
பதில் :- பருத்தி வீரனுக்கு கிடைத்த வெற்றி மற்ற திரைப்படங்களின் வெற்றியை விட வேறுபட்டது. மற்ற படத்திற்கு கிடைத்த வெற்றியை விட பல மடங்கு அதிகம். அதற்கு என்ன காரணம் இருக்க முடியும் படத்தில் காட்டிய யதார்த்தம்.. அது தான் படத்தின் வெற்றியை தீர்மானித்து இருக்கிறது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அந்த இயல்புத் தன்மையை நீங்கள் பார்க்கலாம். இந்த படம் முழுக்க, முழுக்க இயற்கை வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட படம் என்ற சிறப்பும் இதற்கு உண்டு. இதனை படம் பிடிக்க எவ்வளவு சிரமம், கஷ்டப்பட்டிருப்போம் என்பதை எங்களுக்கு தான் தெரியும். அதன் பலன் இப்பொழுது தெரிகிறது. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இப்படம் பல வாய்ப்புகளின் கதவுகளை திறந்து விட்டு இருக்கிறது. இந்த வகையில் எனக்கு மகிழ்ச்சி தான்.
தமிழோவியம் :- இந்த கதையை தயார் படுத்த உங்களுக்கு சிரமங்கள், சிக்கல்கள் ஏதாவது இருந்ததா?
பதில் :- இல்லை. நான் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக சேது, நந்தாவில் வேலை பார்த்து இருக்கிறேன். இவர் எனது நெருங்கிய நண்பரும் கூட. அப்பொழுது சேது படத்தின் முடிவு, படம் பார்த்தவர்களை அதிகமாக பாதித்ததை உணர்ந்தேன். இதே போல் படம் பார்த்து விட்டுச் செல்பவர்கள் எதையோ பறிகொடுத்தது போல் செல்லும் வகையில் ஒரு கிராம படம் எடுக்க வேண்டும் என நினைத்தேன். அதற்கான ஏற்பாடுகளில் இறங்கி தயார் செய்த பொழுது அது அப்பொழுது முடியாமல் போய் விட்டது. அந்தக் கதையை அப்படியே வைத்து விட்டு மௌனம் பேசியதே, ராம் போன்ற படங்களை செய்தேன். அதன் பின் கிராமத்தை மையமாகக் கொண்டு படம் செய்யலாம் என நினைத்து பருத்தி வீரனில் இறங்கினேன். இதற்கு நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறோம். இது வரை பாரதிராஜா இயல்பான கிராமத்தை காட்டியிருக்கிறார். அவர் விட்டு வைத்ததை காட்ட முடியுமா என முயற்சி செய்து பார்த்தோம். ஒளிப்பதிவாளர் ராம்ஜியிடம் ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன். இயற்கையாக கிடைக்கும் ஒளியில் மட்டுமே நாம் சூட் செய்ய வேண்டும் என்று. எனக்கும், அவருக்கும் ஒரே உணர்வால் அதனை வெற்றிகரமாக செயல்படுத்த முடிந்தது.
தமிழோவியம் :- பருத்தி வீரனை எடுக்கும் பொழுது காட்சிகள் சரியாக வராத சமயங்களில் நீங்கள் அதிகமாக கோபப்பட்டீர்களாமே?
பதில் :- உண்மை தான். நாம் நினைத்ததை கொண்டு வர கொஞ்சம் கஷ்டப்படும் பொழுது கோபங்கள் வருவது இயல்பு தானே.
தமிழோவியம் :- இந்த திரைப்படத்தில் பெண்களை காட்டிய விதம். அற்புதமானது. உதாரணமாக பொன் வண்ணண் தனது மனைவியை அடிக்கும் பொழுது, மனைவி கணவனை எதிர்ப்பார். என்னை ஏன்யா அடிக்குற, பொண்ணு ஊர் சுத்துறானு தெரிஞ்சு, இப்ப உனக்கு வலிக்குதாக்கும் என்று பேசுகிற வசனங்கள். ப்ரியாமணி குடித்து விட்டு படுத்திருக்கும் கார்த்தியை காலால் உதைக்கும் காட்சி. எங்க அப்பனை போட்டுத் தள்ளு என்று முத்தழகு பேசுவது, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்?
பதில் :- இந்த படத்தில் ஒரு சமூகத்தின் வாழ்க்கையை பதிவு செய்ய முயற்சித்தேன். அதற்காக அந்த சமூகத்தை பற்றி நிறைய ஆய்வுகள் செய்தேன். அப்படி செய்யும் பொழுது தனது மீது தவறு இல்லை என்று அச்சமூக பெண்கள் நினைக்கும் ஒரு விஷயத்தில் தன்னை தண்டிக்கும் பொழுது அவர்களின் கோபத்தை நான் பார்த்தேன். எதிர்க்கிறார்கள். அதனை பதிவு செய்திருக்கிறேன். பொதுவாக கிராமங்களில் ஆண்களிடம் ஏற்படும் கோபம், பெண்களிடமும் இருக்கிறது. இது உண்மை.
தமிழோவியம் :- ஒரு ரவுடியோடு, ஒரு நல்ல பெண் தனது பெற்றோரை விட்டு, விட்டு சென்றால் அவளுக்கு என்ன கதி என்பதை படத்தின் முடிவு சொல்வதாக எடுத்துக் கொள்ளலாமா?
பதில் :- இந்த படத்தின் முடிவை பலர் விமர்சனம் செய்கிறார்கள். முத்தழகுவும், பருத்தி வீரனும் ஒரு கட்டத்தில் என்ன ஆனார்கள் என்பதை சொல்ல நினைத்தேன். இந்த படத்தை மதுரையில் சில ரவுடிகள் பார்த்ததாகவும், நாம் செய்த தவறுக்கு நம்மை சுற்றி இருப்பவர்கள் என்ன பலன் அனுபவிக்கப் போகிறார்களோ என அவர்கள் பேசியதாக நண்பர்கள் மூலம் அறிந்தேன். தப்பு செய்தால் தன்னையும் தாண்டி நம்மிடம் அன்பு காட்டுபவர்களையும் அது பாதிக்கும் என்பதை பருத்தி வீரன் உணர்த்தி இருக்கிறான்.
தமிழோவியம் :- சிகப்பு கலரில் பொடி கட்டம் போட்ட சேலை, அதுக்கு மேட்சா சட்டை, வெறும் மஞ்சள்கயிறு போதும் நான் அர்சஸ் பண்ணிக் கொள்கிறேன். இரண்டு பிள்ளைக்கு மேல் பெற்றுக் கொள்ள மாட்டேன். சக்களாத்தி வந்தால் வீட்டு வாசலிலேயே வெட்டிப் போடுவேன் என்று சொல்லி எதிர்கால வாழ்க்கை குறித்து ஒரு மாபெரும் கனவுகளோடு, ரோட்டில் கணவனாக வருபவனிடம் பேசிக் கொண்டு போகிறாள் முத்தழகு. அந்த கனவு நிறைவேற வேண்டும் என படம் பார்க்கும் பார்வையாளனும் நினைக்கிறான். ஆனால் அந்த முடிவு தாங்கிக் கொள்ளாத அதிர்ச்சியை தருகிறது. அதனை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா?
பதில் :- அந்த முத்தழகு பாத்திரம் எனது மனதில் இருந்து மறைவதற்கு நீண்ட காலம் ஆகும். நான் செதுக்கிய பாத்திரம் அது. அந்தப் பாத்திரம் தமிழ் சினிமாவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ப்ரியாமணியிடம் இது தான் முத்தழகு, இப்படித் தான் நடிக்க வேண்டும் என்று சொல்லி காட்சிகள் தத்ருபமாக வர நிறைய சிரமப் பட்டோம். அவரும் சொன்னதை செய்தார். இன்று பேசப்படுகிறார். ஒரு படைப்பாளனாக எனது அந்த முடிவை மாற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்காது. சேது படம் அப்படி மாற்றி வந்திருந்தால் வெற்றி பெற்று இருக்காது. அது போல தான் இதுவும். உள்ளே இருந்து கேள்வி வருகிறது. படம் எத்தனை முறை பார்த்தீர்கள்?
திருமலை :- கணக்கு இல்லை. இந்த படம் என்னை மிகவும் பாதித்தது. இதனால் எனது வேலைகளை கூட என்னால் சரியாக செய்ய முடியவில்லை. இரண்டு வாரங்களாக இணையதளத்திற்கு கட்டுரைகள் தயாரித்து அனுப்ப மனம் ஒத்துவரவில்லை. பெரும்பாலான காட்சிகள் எனது தெருவில் நடைபெறுகிற கதை போல் இருக்கிறது. வேலைகளில் ஈடுபடும் பொழுது இப்படத்தின் காட்சிகள் கண் முன்னே வருகிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
அமீர் :- இப்படி பலர் கணக்கில்லாமல் படம் பார்த்ததாக, பார்ப்பதாக, இப்படத்தை திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருப்பதாக சொல்கிறார்கள். படம் பார்த்து விட்டு இரண்டு நாள், மூன்று நாள் என்னால் தூங்க முடியவில்லை என்று சொல்கிறார்கள். இதனை எல்லாம் பார்த்து, கேள்விப்பட்ட எனக்கு பல சிந்தனைகள். எதற்காக இப்படி சொல்கிறார்கள். இன்றைய ஒரு நகரத்து இளைஞன் கிராமத்தை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. அவனை இந்தப்படம் பெரிதும் பாதித்திருக்கிறது. நமது மக்கள் இன்னும் பண்பாடு, கலாச்சாரத்தோடு தான் வாழ்ந்து வருகிறார்கள். அதனை திரையில் கொண்டு வந்த பொழுது அதனை கொண்டாடுகிறார்கள். இப்படி பாராட்டுக்கள் அதிகமாக வருவதைப் பார்க்கும் பொழுது பல விருதுகள் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்.
தமிழோவியம் :- தங்களது அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது இல்லையா?
பதில் :- உண்மை தான். எனது படங்களை குடும்பத்தோடு வந்து பார்க்கும் படி எடுத்து வருகிறேன். எனது மற்ற படங்களான மௌனம் பேசியதே, ராம் போன்ற படங்களில் ஆபாசங்கள் எதுவும் இல்லாமல் எடுத்து இருப்பேன். பருத்தி வீரனிலும் அது தொடர்கிறது. இந்த படங்களின் வெற்றி மூலம் எனது பொறுப்பு அதிகரித்து இருக்கிறது.
தமிழோவியம் :- பெரும்பாலான சினிமா துறையினர் சினிமாவில் சம்பாதிப்பதை வேறு தொழில்களில் முதலீடு செய்கிறார்கள். ஆனால் நீங்கள் அத்துறைக்கே செலவு செய்கிறீர்கள். நல்ல சினிமாவுக்காக செலவு செய்பவர் என்று உங்களை பற்றி சொல்கிறார்களளே?
பதில் :- சினிமாவில் பணம் சம்பாதித்து முக்கியமான இடங்களில் எல்லாம் பங்களா வாங்கிப் போட்டுக் கொண்டு அதற்கு காவலுக்கு ஒரு கூர்க்காவை போட எனக்கு விருப்பமில்லை. சினிமாவில் சம்பாதிப்பதை அதற்காகவே செலவு செய்கிறேன். எனது திரைப்படங்களை உலக அளவில் கொண்டு செல்ல முயற்சி செய்து வந்தேன். வருகிறேன். நல்ல சினிமாக்களை தருவதே எனது நோக்கமாக நான் வாழ்ந்து வருகிறேன்.
|