மேலோட்டமாக எடுக்கின்ற எந்த ஒரு நடவடிக்கையும், முழு பலனை தராது என்ற கருத்து உண்டு. அக்கருத்துக்கு உதாரணமாக இருப்பது மதுரையில் பிச்சைக்காரர்கள் கைது சம்பவத்தை சொல்லலாம். மதுரையில் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டனர், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டது. அதன் விளைவாக பிச்சைக்காரர்களை கைது செய்து சென்னை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப் பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை சென்னைக்கு அனுப்பி விட்டோம், இனி பொது மக்கள் நிம்மதியாக இருக்கலாம் என மதுரை காவல் துறையினர் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் பழைய படி பிச்சைக்காரர்கள் உலாவத் தொடங்கி விட்டனர்.
தற்போதைய நிலையில் எந்த முதலீடும் இல்லாத தொழிலாக பிச்சை எடுப்பது ஆகிவிட்டது. கையில் திருவோட்டோடு மதுரையில் பிச்சைக்காரர்கள் தொல்லை பல மடங்கு அதிகரித்து விட்டது. பிச்சைக்காரர்களிலேயே காவி உடை உடுத்திக் கொண்டு பிச்சை எடுப்பது, சுத்தம் இல்லாமல் பிச்சை எடுப்பவர்கள், குழந்தைகளை விட்டு பிச்சை எடுக்க விடுபவர்கள், குடும்பத்தோடு பிச்சை எடுப்பவர்கள் என்று இன்று பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை பெருகி விட்டது. முன்பு எல்லாம் வயதான, தங்களால் எந்த எளிதான வேலையையும் செய்ய முடியாத முதியவர்கள் தான் பிச்சைக் எடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இன்று அந்த நிலை மாறி அதனை தொழிலாக நினைத்துக் கொண்டு, தங்களுக்கு என்று சங்கம் வேறு வைத்துக் கொண்டு பிச்சை எடுக்கிறார்கள். முன்பு எல்லாம் பிச்சைக்காரர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் அமைதியாக வாங்கிக் கொண்டு போய் விடுவார்கள். ஆனால் தற்பொழுது எந்தப் பிச்சைக்காரனும் ஒரு ரூபாய்க்கு குறைந்து வாங்குவது இல்லை. கால் ரூபாய், ஐம்பது பைசாவை போட்டால் பிச்சை போடுபவர்களை திட்டிக் கொண்டே போகிறார்கள். அதிலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி பிச்சைக்காரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், குறிப்பாக வெளிநாட்டினரிடம் அடாவடியாக பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதை அடிக்கடி காணலாம். இதற்கு ஒரு முடிவு கட்ட காவல்துறையினர் கடந்த ஏப்ரல் 9ம் தேதி 65 பிச்சைக்காரர்களை கைது செய்தனர். இவர்களை அப்படியே சென்னை கொண்டு போய் விட்டனர். முன்பு போல் தற்பொழுது பிச்சைக்காரர்கள் தொல்லை இல்லை என்றாலும் ஆனால் பிச்சைக்காரர்ள் பழைய படி பிச்சை எடுக்கத் தொடங்கி விட்டனர் என்பது உண்மை தான் என்கிறார் மதுரை மேலமாசி வீதியைச் சேர்ந்த செந்தில் நாதன்.
மதுரை உயர்நீதி மன்ற கிளையின் உத்தரவுப் படி மதுரையில் உள்ள பிச்சைக்காரர்களை கைது செய்வது என்று உறுதியான பின்பு அச்செய்தி செய்தித்தாள்களில் வெளிவந்தது. இதனை அறிந்த படிப்பறிவுள்ள பெரும்பாலான, விவரமான பிச்சைக்காரர்கள் தங்களது இடத்தை மாற்றிக் கொண்டு கிராமப் புறங்களை நோக்கி சென்று விட்டனர். விவரம் தெரியாத பிச்சைக்காரர்களை தான் எங்களால் கைது செய்ய முடிந்தது என்று சொல்லும் காவல் துறையை சேர்ந்த ஒருவர் மதுரையில் பிச்சைக்காரர்களை ஒழிப்பது என்பது சத்தியமில்லாதது என்கிறார். இப்படி கிராமப் புறங்களுக்கு சென்ற பிச்சைக்காரர்கள் பழையபடி மதுரைக்குள் நுழைந்துள்ளனர். முன்பு எல்லாம் பிச்சைக்காரர்கள் மக்கள் கூட்டம் அதிகமிருக்கும் இடங்களில் அமர்ந்து கொண்டு பிச்சை எடுப்பார்கள். ஆனால் கைது செய்யும் நிலை தொடங்கிய உடன் பிச்சைக்காரர்கள் வீடு, வீடாக செல்வது, கடை கடையாக சென்று பிச்சை எடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். காவல் துறை கைது செய்யப்பட்ட பிச்சைக்காரர்கள் பலர் திறமையான ஆட்களாக, பிற வேலைகள் கொடுத்தால் செய்து பிழைத்துக் கொள்வோம் என்றார்கள். அதன் படி அவர்களுக்கு பயிற்சி கொடுத்து சான்றிதழ் கொடுக்க மதுரை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். பிச்சைக்காரர்களை நாங்கள் கைது செய்த பொழுது புதிதாக ஒரு தகவலை அறிய முடிந்தது.
பெரும்பாலும் எந்த வேலையும் கிடைக்காததால் பிச்சை எடுக்க 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் வருகிறார்கள் என்பது தான் அத்தகவல். இப்படி முக்கிய நகரப் பகுதிகளில் பிச்சை எடுப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு 100 ரூபாய்கும் அதிகமாகவே காசு கிடைக்கிறது. அதனை வைத்துக் கொண்டு தங்களது செலவு போக மீதியை சிலர் சேமித்து வைக்கிறார்கள். சிலர் தங்களது சொந்தங்களுக்கு அனுப்பி விடுகின்றனர். மதுரையில் பிச்சைக்காரர்களின் தொல்லையை அறவே ஒழிக்க கண்ணில் படுபவர்களை கைது செய்ய வேண்டும். அதனை விட்டு விட்டு எப்பொழுதாவது ஒரு முறை மட்டும் கைது செய்து விட்டு பின் அவர்களை விட்டு விட்டால் பிற இடங்களில் இருக்கும் பிச்சைக்காரர்கள் நகரப்பகுதிக்கு வந்து கொண்டு தான் இருப்பார்கள் என்கிறார் அவர்.
மதுரையில் வீடு வீடாக சென்று பிச்சை எடுத்துக் கொண்டிருந்த கிருஷ்ணசாமியிடம் பேசிய பொழுது.........
உலகில் தானத்தில் சிறந்த தானம், அன்னதானம் மற்றொன்று பொருள் தானம். தானம் செய்து வாழ வேண்டும் என்பது நமது பண்டைய கலாச்சாரம். நாலு பேருக்கு தானம் செய்து விட்டு தான் வேலைக்கு செல்வபவர்கள் இங்கு இருக்கத் தான் செய்கிறார்கள். அது தவிர தங்களுக்கு இருக்கும் தோஷங்கள் கழிவதற்காக பிச்சைக்காரர்களுக்கு தானங்கள் செய்வர்களும் இங்கு உண்டு. இப்படி இருக்கும் நிலையில் பிச்சைக்காரர்களை எல்லாம் கைது செய்து விட்டால் யார் தானங்களை ஏற்றுக் கொள்வார்கள். எல்லாம் கீழே குப்பைத் தொட்டிக்குத் தான் போகும். ஒரு சிலர் தானம் அளிப்பவர்களிடம் தவறாக நடந்து கொண்டிருக்கலாம். அதற்காக எல்லாரையும் குறை சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். பெரும்பாலான தானம் பெறுபவர்கள் தாங்கள் பெரும் தானத்தின் சிறு பங்கை கோவில்கள் உண்டியலில் போட்டு விட்டு மீதியை தாங்கள் வைத்துக் கொள்கிறார்கள்.
தானங்களை பெறுபவர்களை பிச்சைக்காரர்கள் என்று சொல்வது தவறு. அவர்களை தானம் பெறுபவர்கள் என்று சொல்வது தான் சிறந்தது. தற்பொழுது மதுரையில் சில நாட்களுக்கு முன்பு தானம் பெறுபவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த முறையை இந்தியா முழுவதும் செயல்படுத்த வேண்டியது தானே. இவர்கள் ஏன் செய்யவில்லை. எல்லாம் ஏமாற்று வேலை. சிறுக, சிறுக தானம் பெற்று அதனை சேர்த்து வைத்திருக்கும் பொழுது ரவுடிகள், சமூக விரோதிகள் சேர்ந்து அதனை பிடுங்கிக் கொண்டு போய் விடுகின்றனர். அவ்வப் பொழுது காவல் துறையினரும் அந்த வேலையை செய்கிறார்கள். தானம் பெறுவது என்ன அவ்வளவு சாதாரண வேலையா. எத்தனை பேர் திட்டுவார்கள் தெரியுமா ? எத்தனை பேர் ஏளனமாக பார்ப்பார்கள் தெரியுமா? எத்தனை தெரு நாய்கள் துரத்தும் தெரியுமா? நாங்கள் என்ன வேண்டும் என்ற இந்த தானம் பெறும் தொழிலை செய்கிறோம். வயதான எங்களை வீட்டை விட்டு விரட்டுவதாலும், சாப்பாட்டுக்கு வேலை கிடைக்காததாலும் தான் இதனை செய்கிறோம். எங்கள் கஷ்டத்தை கேட்க இங்கு நாதியில்லை என்று புலம்பிய படி செல்கிறார்.
|