இலங்கையில் போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது - விடுதலைப் புலிகளும் பிரபாகரனும் சரணடைய இலங்கை அரசு கொடுத்த கெடுவும் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் முல்லைத்தீவிற்கு அருகேயுள்ள கடற்கரைப்பகுதியில் கிட்டத்தட்ட 2 லட்சம் தமிழர்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளார்கள். புலிகளின் மீது நடக்கும் எல்லாத்தாக்குதல்களிலும் புலிகளை விட அதிகமாக பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்கள்தான். உலக நாடுகள் ஒருசேர வற்புறுத்தியதால் 2 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்த அரசு மீண்டும் போரைத் துவங்கியுள்ளது. பிரபாகரனைப் பிடிக்க வேண்டும் அல்லது அவர் செத்து மடியவேண்டும் - அதற்காகத்தான் நாங்கள் இத்தகைய தாக்குதல்களை நடத்துகிறோம் என்று ராணுவம் கூறுவதை ஏற்கவே இயலாது.
ஒவ்வொரு நாளும் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மக்களை வெளியேற்றி வரும் ராணுவம் வெளியேறும் மக்களிடம் நடந்துகொள்ளும் விதம் மிகவும் கொடூரமாக உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. இலங்கை அரசு விதித்த காலக்கெடு புலிகளுக்குத்தான் - அப்பகுதியில் வாழும் மக்களுக்கு அல்ல. அப்பாவி மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு புலிகள் மற்றும் அரசு இருவருக்குமே உள்ளது. ஆனால் அதை இருதரப்பினருமே கருத்தில் கொள்ளவில்லை என்பது வருத்தமான விஷயம். 25 வருட போரை முடிவுக்குக் கொண்டுவருவதாகச் சொல்லிக்கொண்டு அரசு நடந்துகொள்ளும் விதமும் - பதிலடி தருவதாக கூறிக்கொண்டு புலிகள் நடந்துகொள்ளும் விதமும் அப்பாவி மக்களின் பேரழிவிற்குத்தான் வழி செய்துவருகிறது. வரலாறு காணாத மோசமான மனித உரிமை மீறல் இலங்கையில் நிலவுகிறது. போரை நிறுத்த வேண்டும், அப்பாவிகள் வெளியேற வழி வகை செய்ய வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தியும் இலங்கை அரசு கேட்பதாக இல்லை. மக்களுக்கான அடிப்படை உரிமைகள் ராணுவ முகாம்களில் முற்றிலுமாக மறுக்கப்படுவதை உலக நாடுகளே ஒப்புக்கொண்டுள்ளன.
இலங்கைப் பிரசனையில் இந்திய அரசின் நிலைப்பாடு தெளிவாக தெரிந்துவிட்ட நிலையில் உலகில் வல்லரசுகளாக உள்ள அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒப்புக்காக இல்லாமல் உண்மையான கரிசனத்தோடு தலையிட்டு இப்பிரசனைக்கு முடிவுகட்ட சீக்கிரம் முன்வரவேண்டும். அப்பாவி பொதுமக்களை புலிகள் மற்றும் ராணுவத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும். 25 ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களுக்கு ஒரு முடிவு காணவேண்டிய நேரம் இது. தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆயிரக்கணக்காண உயிர்கள் அங்கே பலியாகிறார்கள். உலக வல்லரசுகள் இலங்கையில் அழிந்துவரும் மனித குலத்தைக் காக்க முன்வருவார்களா ?
|