Tamiloviam
ஏப்ரல் 23 2009
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : அயன்
- காயத்ரி [gayathrivenkat2004@yahoo.com]
  Printable version | URL |

 

Surya - Damannaஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம் அயன். என்ன பெரிதாக சொல்லப் போகிறார்கள் என்று அலட்சியமாக அமர்ந்தால் படத்தின் முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை தொற்றிக் கொள்ளும் விறுவிறுப்பும் ஒளிப்பதிவும்  சீட்டின் அருகில் இருப்பவரைப் பார்க்கக் கூட மனமில்லாமல் படத்துடன் நம்மை ஒன்றச் செய்கிறது. சூர்யா படத்திற்குப் படம் சூப்பர்யா என்று அசர வைக்கிறார். திருட்டு விசிடி,வைரம் போன்ற கடத்தல் தொழில் செய்யும் பிரபுவிற்கு சூர்யா தான் வலது கை,இடது கை,இரண்டு கண்கள் எல்லாமே.  எம்.எஸ்.ஸி படித்திருக்கும் சூர்யா வேலைக்குச் செல்லாமல் பிரபுவின் சர்வதேச கடத்தல் வேலைகளுக்கு உதவுகிறார். கடத்தல் என்றாலும் அதிலும் நேர்மையைக் கடைபிடிக்கும் பிரபு-சூர்யாவிற்குத் தொழில் எதிரியாக ஆகாஷ்தீப் சைகல் முளைக்கிறார். கடத்தல் உலகில் தான் மட்டும் தான் ராஜாவாகத் திகழ வேண்டும் என்பது ஆகாஷின் கனவு. கடத்தலில் எள் என்றால் எண்ணெயாக நிற்கும் சூர்யாவிற்கு ஜெகன் நண்பனாக வந்து சேர்கிறார். ஜெகனின் தங்கை தமன்னாவின் மேல் காதல், ஊடல் என்று காதல் பகுதிகள் தனியே அரங்கேற,தனக்கும் பிரபுவிற்கும் துரோகம் செய்ய வந்த தொழில் எதிரியின் ஒற்றன் தான் ஜெகன் என்ற உண்மை சூர்யாவிற்குத் தெரிய வர நண்பனையும் காதலியையும் தூக்கி எறிகிறார்.  சூர்யா எதிரியை வீழ்த்தினாரா,  தமன்னாவுடன் இணைந்தாரா ? போன்ற கேள்விக்குறிகளுக்கான விடை இறுதியில்.

சூர்யா ஒவ்வொரு படத்திற்கும் ஏற்பத் தன்னை உருமாற்றிக் கதைக்குள் ஒன்றி விடுகிறார். சூர்யாவின் கதைத் தேர்வும் அதற்கான மெனக்கெடலும் அவரது தொழில் பக்தியைக் காட்டுகிறது. ஆக்ஷன் காட்சிகளில் இவர் டூப் கூடப் போடாமல் காட்டியிருக்கும் துணிச்சலைப் பாராட்டலாம். சூர்யா-தமன்னாவின் காதல் பகுதி உச்சி வெயிலில் ஐஸ்கிரீம் ருசிப்பது போன்ற ஜிலீர். 'கேடி' திரைப்படத்தில் பார்த்த தமன்னாவிற்கும் 'அயன்' படத்தில் நடித்திருக்கும் தமன்னாவிற்கும் எத்தனையோ மாற்றங்கள், முன்னேற்றங்கள். இன்னும் நடிப்புப் பயிற்சியை மேற்கொண்டால் கோலிவுட் நாயகிகளில் தனி முத்திரை பதிக்க வாய்ப்புண்டு. வில்லன் ஆகாஷ் தீப் சைகலிற்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தும் சரியாகப் பயன்படுத்தவில்லை, அடுத்த படத்தில் திறமையை வெளிப்படுத்துகிறாரா பார்ப்போம். தங்கையின் காதலை ஆதரிக்கும் வித்தியாசமான அண்ணன் ஜெகன், சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் கம்பீரமான பிரபு, கஸ்டம்ஸ் அதிகாரி பொன்வண்ணன், சூர்யாவின் எதிர்காலத்தை எண்ணிக் கவலைப்படும் அம்மா ரேணுகா போன்றவர்கள் கச்சிதமான பாத்திரங்களாய்ப் பளிச்சிடுகிறார்கள். குறைகள் ஆங்காக்ங்கே இல்லாமல் இல்லை. ரேணுகா பிரபுவிடம் சண்டை போடும் காட்சியும் படத்துடன் ஒன்றவில்லை.

'கேட்ச் மீ இப் யூ கேன்' என்ற ஆங்கிலப் படத்தின் தூவல்கள் ஆங்காங்கே தெரிந்தாலும் தமிழுக்கேற்ற முறையில் அயனைப் படைத்து கைதட்டல்களை அள்ளிக் கொள்கிறார் கே.வி.ஆனந்த். இயக்கத்தில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் இவர் தன் ஒளிப்பதிவு பணியை எம்.எஸ்.பிரபுவிடம் ஒப்படைத்து விட்டார் போலும். எம்.எஸ்.பிரபுவும் ஹாலிவுட் தரத்தில் ஒளிப்பதிவு செய்து நம் நெஞ்சைக் கொள்ளை கொள்கிறார். வசனங்களில் கூர்மை. 'பார்க்க சினேகா மாதிரி இருந்துட்டு பண்றதெல்லாம் நமீதா வேல' என்று ஜெகன் தங்கையைப் பற்றி சொல்லும் போது திரையரங்கில் விசில் பறக்கிறது. ஆங்கிலப் படத்தின் பழைய டிவிடிகளைப் பார்த்து தழுவல் செய்யும் பர்மா பஜார் காட்சிகள், கான்கோ மக்களின் அன்றாட வாழ்க்கை, அவல நிலை போன்றவற்றை ஒரே காட்சியில் இய்ல்பாகக் காட்டுவது, கஸ்டம்ஸ் அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவுவது, வில்லனின் திட்டத்தைச் சூர்யாவைக் கொண்டு கண்டுபிடிக்க வைப்பது போன்ற காட்சிகள் இயக்குனரின் திறமையைக் காட்டுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அனைத்துப் பாடல்களும் தாளம் போட வைக்கின்றன. 'விழி மூடி யோசித்தால்', 'நெஞ்சே', 'தூவும் பூமழை' பாடல்கள் வானொலிகளையும் செல்போன்களின் ரிங்டோன்களையும் அலங்கரிக்கும். சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன், கலை இயக்குனர், படத்தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் அனைவரும் இயக்குனருக்குத் தோள் கொடுத்துள்ளனர்.

oooOooo
                         
 
காயத்ரி அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |