Tamiloviam
ஏப்ரல் 23 2009
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : யாரை ஏமாற்ற இந்த அறிக்கையும் பந்தும்?
- மீனா [feedback@tamiloviam.com]
  Printable version | URL |

இதுவரை இல்லாத உக்கிரத்தோடு இலங்கையில் போர் நடந்து வருகிறது. ராணுவமும் புலிகளும் ஒருவரை ஒருவர் அழிப்பதாகக் கூறிக்கொண்டு பொதுமக்களை கொன்று குவித்துவருகிறார்கள். உலக நாடுகள் அனைத்தும் இப்பிரச்சனைக்கு முடிவு காண உண்மையாக அக்கறை காட்டிவரும் வேளையில் அல்லல் படும் இலங்கை மக்களை வைத்து நம் அரசியல்வாதிகள் செய்யும் அழிசாட்டியங்களைப் பார்த்தால் மனம் வெதும்புகிறது.

ஒரு மாதம் முன்புவரை இலங்கைப் பிரசனையில் ஜெயலலிதாவின் நிலை என்ன? - தற்போதைய நிலை என்ன?  தனி ஈழம் மலரவேண்டும் என்று குரல் கொடுக்கத்துவங்கியுள்ள இவருக்கு அரசியல் சாசன விதிமுறைகளும் நாட்டைத்துண்டாடுவதால் ஏற்படப் போகும் விளைவுகளும் "செலக்டிம் அம்னீஷியா" வந்ததைப் போல மறந்தவிட்டதோ?? போர் என்று ஒன்று நடந்தால் அதில் சில அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவது தவிர்க்க இயலாதது என்று சொன்னவரே இன்று இலங்கையில் மாட்டிக்கொண்ட அப்பாவிகளைப் பற்றி பேசுகிறார் - எல்லாம் தேர்தல் செய்யும் மாயம். ஓட்டுக்காக அழிந்துகொண்டிருக்கும் ஒரு இனத்தின் மீது திடீர் பறிவு காட்டும் இவரை என்னவென்று சொல்ல ?

தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் அடிக்கும் கூத்துகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். முதல்நாள் பிரபாகரனை புகழ்ந்து தள்ளியவர் அடுத்த நாளே அவரைத் தீவிரவாதி என்று அறிக்கை விடுகிறார். சரி அவர்கள் தீவிரவாதிகள் என்பதிலாவது உறுதியாக இருந்தாரா எனறால் அதுவும் இல்லை.. விடுதலை போராட்ட இயக்கமாக ஆரம்பித்து அதில் ஒரு சிலர் தீவிரவாதிகளாக மாறிவிட்டார்கள் - அதற்காக அந்த இயக்கதையே தீவிரவாதிகள் என்று குறிப்பிடுவது சரியல்ல என்றார். பரவலாக இந்தக் கருத்திற்கு எதிர்ப்பு வந்தவுடன் நிகழ்சியை நடத்திய தொலைக்காட்சி தி.மு.கவிற்கு எதிரானது - அதனால்தான் தனது கருத்தை திரித்து கூறிவிட்டார்கள் என்று கூறினார். தன்னுடைய இந்த ஜோக்கர் வேலையால் தானே வெறுத்துப்போய் இலங்கை மக்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சி பந்த் நடக்கும் என்றார். ஆனாலும் தி.மு.க அறிவித்த பந்த் என்பதாலேயே மற்ற கட்சிகள் இதைப் புறக்கணித்துள்ளனர்.

இந்த பந்தால் பொதுமக்கள் வாழ்க்கை பாதிக்கப்படாது என்று அரசு பொதுச்செயலர் கூறியிருந்தபோதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது. அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளே டிப்போக்களை மூடி விட்டதால் பஸ்களை இயக்க வந்த டிரைவர்களுக்கும் அனுமதி தரப்படவில்லை.  பத்தாவது மற்றும் பிளஸ்டூ தேர்வுகள் முடிந்து விட்டாலும் பிற படிப்புக்கான தேர்வுகள் இன்னும் பல பள்ளிகளில் முடியவில்லை. தற்போதுதான் அவை நடந்து வருகின்றன. இன்று தேர்வு எழுத வேண்டிய மாணவ, மாணவிகள் பஸ்கள் இல்லாததால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர். போலீஸாரே பல பகுதிகளில் கடைகளை மூடச் சொல்லியதாக கடைக்காரர்கள் புகார் கூறுகின்றனர். ஹோட்டல்களும் மூடப்பட்டதால் வேலை விஷயமாக ஊர் விட்டு ஊர் வந்தவர்கள் உணவு கிடைக்காமல் திண்டாடினர். இயல்பு வாழ்க்கைக்கு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்திய இந்த பந்தால் மக்கள் பெருமளவில் தி.மு.க கூட்டணியின் மீது கோபம் கொண்டுள்ளனர். மொத்தத்தில் இலங்கையில் வாடும் தமிழர்களுக்காக பந்த் என்று கூறிக்கொண்டு உள்ளூர் தமிழர்களை வாடவைத்துவிட்டார் கருணாநிதி.

இலங்கை விஷயத்தில் இந்தியாவின் / மத்திய அரசின் நிலைப்பாடு தெள்ளத்தெளிவாகிவிட்டது. பிறகு யாரை ஏமாற்ற இந்த அறிக்கைகளும் பந்த்களும்?? அங்கே வாடும் மக்களுக்கான அனுதாபம் நம் அரசியல்வாதிகளிடம் துளியும் இல்லை என்பதுதான் உண்மை. அது ஜெயலலிதாவாகட்டும், கருணாநிதியாகட்டும், ராமதாஸாகட்டும்.. அங்குள்ள மக்களைக் காப்பாற்ற இவர்கள் ஒருவரும் முழுமனதோடு முயற்சிக்கப்போவதில்லை. குறைந்த பட்சம் உள்ளூர் மக்களுக்காவது கொஞ்சம் நல்லது செய்ய முயற்சிக்கட்டும். இலங்கை விஷயத்தில் இவர்கள் ஆடும் நாடகங்களை எல்லாம் கவனிக்கும் தமிழக மக்கள் வரப்போகும் தேர்தலில் சரியான அடி கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |