Tamiloviam
ஏப்ரல் 23 2009
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறுகதை : ஜெய் ஹோ
- அகிலா கார்த்திகேயன்
  Printable version | URL |

Jai Ho - Slum Dog Millinaireஆத்துக்கார் வந்ததுகூட தெரியாமல் சமையலறையில் என் மனைவி அந்த ஆஸ்கர் பாடலை அலறவிட்டுக் கொண்டிருந்தாள். ஒரு பக்கம் குக்கர் 'ஹோ' என்று சப்தம்போட அதற்கு ஒத்த பக்கபலமாக
'ஜெய் ஹோ' அதையும் மீறி கத்திக் கொண்டிருந்தது. சுப்ரபாதம், கந்த சஷ்டி கவசம் இத்யாதிகளை பிரத்யேகமாக கேட்க சமையல்கட்டில் என் மனைவியின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த அந்த மியூஸிக் சிஸ்டம் அன்றைய தினம் பக்திமார்கத்திலிருந்து விடுப்பட்டு விடாமல் 'ஜெய் ஹோ'வை கத்திக் கொண்டிருந்தது.

எனக்கென்னவோ இந்த ஆஸ்கர் ரோஜா ரஷ்மானின் இந்த 'ஜெய்ஹோ' அப்படி ஒன்றும் ஜோராக ரசிக்கும் ரகமாக தோன்றவில்லை. சின்ன சின்ன ஆசையை கேட்டபோது எற்பட்ட ஆசையோ, 'ஒரு தெய்வம் தந்த பூவே'வில் கிடைத்த சுகந்தமோ இந்த ஆஸ்கர் பாட்டில் அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஏன் என் மனைவியே கூட நேற்றுவரை 'உங்களுக்கு பிடித்த ரஷ்மான் பாடல் எது?' என்ற கேள்விக்கு 'ஊஊ லல்லா' என்றுதான் ஊளைவிட்டிருப்பாள். ஆனால் இன்றோ ஆஸ்கர்காரன் அங்கீகரித்து விட்டானென்ற ஒரே காரணத்திற்காக தன் ரசனையில் இப்படி பால்மாறியிருக்கிறாள்.

''கொஞ்சம் வால்யூமை கம்மி பண்ணேன்'' என்று பவ்யமாகத்தான் விண்ணப்பித்தேன்.

உடனே எகிறினாள் ''சே! உங்களுக்கு நம்ப தமிழ்நாட்டு பையன் இப்படி உசந்த ஆவார்டை வாங்கிண்டு வந்திருக்காரேன்னு ஒரு இது இருக்கா? அப்ரிஷியேட் பண்ண வக்கில்லாட்டாலும் வாயை மூடிட்டு கேட்கவாவது தெரியணும்... அடடா என்னமோ மியூஸிக் போட்டிருக்காரு இதையெல்லாம் ரசிக்க ஒரு இது வேணும்'' என்று வால்யூமை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கி தனக்கு 'இது'க்கள் அதிகமாக இருப்பதை என் செவியில் அரைவதுபோல் தெரிவித்தாள்.

ஹாலில் உட்கார்ந்திருந்த எனக்கு இந்த சப்தம் தாங்கமுடியவில்லை. ஆஸ்கர் அருமையை இப்படி 'சப்தம்' என்று சிலாகிப்பதற்காக என்னை நாட்டுணர்வு, தமிழுணர்வு இன உணர்வு இன்னபிற உணர்வுகளே இல்லாத ஜந்து என்று நீங்கள் சப்தம் போடலாம். இருந்தாலும் இந்த 'ஜெய் ஹோ' என் ரசிப்பின் டாப் டென்னில் என்ன டாப் நூறிலும் வராத ரகமாகத்தான் இருக்கிறது. ஹாலில் உட்கார முடியாமல் என் பெண் உட்கார்ந்து கம்ப்யூட்டரோடு கைகலந்து கொண்டிருந்த அறைக்கு போக எழுந்தேன். எப்போதும் என் பெண் கனிணியோடு ஓசைப்படாமல் எதையாவது பணி செய்துக் கொண்டிருப்பாள். அவள் அறையில் மெளஸ் தேய்க்கும் சப்தம் மட்டும் நிசப்தத்தில் ஓங்கி கேட்கும். அங்கே போனால் கொஞ்சம் 'காதாட' உட்காரலாமென்று நினைத்தபடி கதவை திறந்துபோது, எப்போதடா திறப்பான் என்பதுபோல உள்ளேயிருந்து 'ஜெய்ஹோ' காதில் வந்து பாய்ந்தது. எப்போதும் 'கம்' மென்று உட்கார்ந்து கம்யூட்டர் இயக்குபவள் இன்று 'ஐட்யூனில்' ஆஸ்கர் பாடலை அலறவிட்டுத் தேடி கொண்டு ஆட்டத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாள்.

மறுபடியும் ஹாலே கதி என்று உட்கார வந்தபோது எங்கேயோ வெளியே போயிருந்த என் மகன் படபடப்போடு உள்ளே வந்து டி.வி ரிமோட் பட்டனை படபடவென்று அழுத்த ஆரம்பித்தான்.

''ஏம்ப்பா! ரஷ்மான் ஆஸ்கர் அவார்ட் வாங்கறதை மறுபடியும் காட்டறான்... அதை பாக்காம என்ன பண்றீங்க எல்லாரும்'' என்று, சேனல்கள் ஒவ்வொன்றாய் தாவ எல்லா சேனல்களிலும் 'ஜெய் ஹோ' நிறைந்து வழிந்துக் கொண்டிருந்தது. இவனிடம் எக்குதப்பாக எதையாவது பேசி ரசனை இல்லாத ஜன்மம் என்றெல்லாம் அவார்ட் வாங்க பயந்து எங்கே ஒதுங்கலாமென்று இடத்தை தேடினேன்.

திக்கெட்டிலும் ஜெய்ஹோ தாக்கியதில், திக்கற்றவனாய் என் பாட்டி ஏகாந்தமாய் ஒண்டிக் கொண்டிருந்த வீட்டின் அந்த கோடி அறைக்கு போக உத்தேசித்தேன்.

என் பாட்டி தொண்ணூறு வயதை எட்டி பார்த்துக் கொண்டிருப்பவள். சதா நாம ஜபம்தான்! வாய் திறந்து பேசுவது அபூர்வம். நல்ல சேதியோ, கெட்ட சேதியோ எதை சொன்னாலும் ஜபம் செய்தபடியே, தலையை ஆட்டியோ தன் நாள்பட்ட கரங்களால் நாட்டிய முத்திரை காட்டியோதான் அதற்கு ரியாக்ட் செய்வாள். அதற்கெல்லாம் வாய்திறந்து பேசி தன் நாம ஜப தொடர் நிகழ்ச்சிக்கு இடைவெளி இடமாட்டாள். பரம வேதாந்தி! சரி கொஞ்ச நேரம் பாட்டி ரூமிற்கு அகதியாய்போய் உட்காரலாமென்று, கையில் அகப்பட்ட தினசரி, வாராந்தரிகளை அள்ளிக் கொண்டு கிளம்பினேன். உள்ளே நுழைந்ததும் பாட்டி தன் ஜபத்துக்கு குந்தகம் விளைவிக்காமல் 'என்ன சமாசாரம்' என்று அபிநயமாய் கேட்டாள்.

''சும்மாதான் உன் கூட கொஞ்சநேரம் இருந்துட்டு போகலாம்னு'' என்றுபடி போட்டிருந்த ஈஸி சேரில் உட்கார்ந்து ஒரு வார இதழை புரட்ட தொடங்கினேன்.

அப்பாடாவென்று இருந்தது! நல்ல நிசப்தம்தான் ஆனால் ஸ்ரூதிபோல அறை பூராவிலும் பாட்டியின் நாம ஜபம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

முதலில் அதை எப்போதும் பாட்டி சொல்லும் ஜபம்தான் என்று நினைத்து காதில் போட்டுக் கொண்டதில் வித்யாசம் தெரியவில்லை. ஆனால் ஜபம் கேட்க கேட்க அதில் ஏதோ ஆறு வித்யாசமிருப்பதுபோல தோன்ற கொஞ்சம் கூர்ந்து காதில் வாங்கினேன்! திடுக்கிட்டு எழுந்துக்கொண்டேன்!

'என்ன ஆச்சு?' என்று எப்போதும்போல பாட்டி கையால் சைகை காட்டினாலும், அவளுடைய 'ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்' என்ற வழக்கமான ஜபம் இப்போது 'ஸ்ரீராம் ஜெயராம் 'ஜெய் ஹோ' ராம், ஸ்ரீராம் ஜெய்ராம்' ஜெய்ஹோ' ராம் என்று தடம் மாறியிருந்தது!

'ஐய்யஹோ' என்று கத்தவேண்டும் போலிருந்தது !

oooOooo
                         
 
அகிலா கார்த்திகேயன் அவர்களின் இதர படைப்புகள்.   சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |