சரியான தகவல்களின் அடிப்படையில் அரசியல் விவாதம் நடத்த வேண்டும் - அத்தகைய விவாதங்களுக்குத்தான் மக்களவை, மாநிலங்களவையில் முன்னுரிமை தரப்படவேண்தும் என்று குடியரசு துணைத்தலைவர் அன்சாரி தெரிவித்துள்ளார். சரியான தகவல்களின் அடிப்படையில் விவாதம் நடக்கிறது - நடத்த அனுமதிக்கப்படுகிறது என்றால் மக்களின் பிரச்சனைகள் எவ்வளவோ இத்தனை நாட்களில் தீர்ந்திருக்கவேண்டுமே.. ஆனால் நிஜத்தில் மக்களவை - மாநிலங்களவையில் நடப்பது என்ன?
ஆளும் கட்சிக்கு ஆதரவான விவாதங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. சரியான தகவல்கள் மற்றும் புள்ளி விவரங்களுடன் ஆளும் கட்சியை - அதன் உறுப்பினர்கள் செய்யும் முறைகேடுகளைப் பற்றி யாராவது பேச முற்பட்டாலே அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது அல்லது அவர்கள் சபையிலிருந்து தூக்கியெறியப்படுகிறார்கள். மத்திய அரசானாலும் சரி - மாநில அரசனாலும் சரி இதற்கு விதிவிலக்கு யாருக்கும் இல்லை. இதற்கு பல உதாரணங்களை அடுக்கலாம். எதிர்கட்சி உறுப்பினர்கள் கேட்கும் முக்கிய கேள்விகளுக்கு சரியான பதிலைச் சொல்லாமல் அவர்களையே எதிர்கேள்வி கேட்பதும் - மழுப்பலான பதிலைக் கூறுவதும் நாம் அறியாதவை அல்ல.
நாட்டில் விலைவாசி விஷம் போல ஒவ்வொரு நாளும் ஏறிவரும் நிலையில் அதைப் பற்றி பேச முயன்ற பா.ஜனதா கட்சி உறுப்பினர்களை பேசவிடாமல் - அவர்கள் எழுத்து மூலமாக கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் சரியான பதிலைத் தராத நிலையில் - இந்தியாவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகியுள்ளது என்ற தகவலைக் கூறிய மத்திய நிதி அமைச்சரை என்னவென்று சொல்வது?
வறுமை ஒரு புறம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் - எங்கே மீண்டும் உணவுப் பஞ்சம் வந்துவிடுமோ என்று நடுத்தர மக்கள் அஞ்சிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் - இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது - மக்களிடம் பணப்புழக்கம் அதிகமாக உள்ளது. அதனால்தான் விலைவாசி உயர்வு இவ்வளவு தீவிரமாக உள்ளது என்று கூறும் நிதிஅமைச்சரை என்ன செய்வது?
ஏழை இன்னும் பரம ஏழையாகிறான் - பணக்காரன் மேலும் பணக்காரனாகிறான்.. ஏழை பணக்கார வித்தியாசம் இந்தியாவில் மிக அதிகமாக உறுவாகிக்கொண்டு வருகிறது. அரசு இதை விரைந்து கட்டுக்குள் கொண்டுவராவிட்டால் நாட்டில் பஞ்சம் பட்டினி அதன் காரணமாக தீவிரவாதச் செயல்கள் அனைத்தும் அதிகமாகும் என்பது பொருளாதார மேதைகளான பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் தெரியாமல் போய்விட்டதா ??
இந்தியா இன்று இருக்கும் நிலைமைக்கு நாம் தான் காரணம் என்று ஒவ்வொரு அரசியல்வாதியும் உணர வேண்டும். நாட்டுக்கு இப்போது தேவை அரசு மற்றும் தோழமை - எதிகட்சிகளுக்கிடையே நடக்கும் ஆரோக்கியமான விவாதங்கள் மற்றும் அவ்விவாதங்களின் எதிரொலியாக அரசு செய்யப்போகும் நலத்திட்டப் பணிகள் தான். எனவே அரசியல்வாதிகளே ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபடுங்கள் - விவாதங்களின் முடிவில் மக்கள் பிரச்சனைக்கு உருப்படியான தீர்வுகளைக் காண விழையுங்கள்.. சொந்த லாபத்திற்காக கோடிக்கணக்கில் நீங்கள் சுருட்டிக்கொண்டாலும் மக்களுக்காக லட்சக்கணக்கிலாவது செலவழிக்க முன்வாருங்கள்.. வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் தான் நாங்கள் நாட்களை கடத்துகிறோம்.
|