|
மகனை எல்லா விஷயங்களிலும் தன் கட்டுக்குள் வைத்திருக்க ஆசைப்படும் அப்பா - மற்ற விஷயங்களில் சரி ஆனால் கல்யாணம் மட்டும் என் இஷ்டப்படிதான் என்று முரண்டு பிடிக்கும் மகன் - என்று இவர்கள் இருவருக்கிடையே நடக்கும் போராட்டம் தான் சந்தோஷ் சுப்ரமணியம் கதை.
சுதந்திரமாக - தானாக எல்லா முடிவுகளையும் எடுக்க வேண்டும் என்று நினைக்கும் ஜெயம் ரவிக்கு முடிவெடுக்கும் சுதந்திரமே கொடுக்காமல் வளர்கிறார் அவரது அப்பா பிரகாஷ்ராஜ். மகன் சம்மந்தப்பட்ட எந்த விஷயமானாலும் சரி - தன் முடிவே இறுதி முடிவென்று நினைக்கும் எண்ணம் கொண்ட அவரை அவரது போக்கிலேயே விட்டுவிடுகிறார் ஜெயம் ரவி. கீரத்திற்கும் ரவிக்கும் திருமணம் முடிவு செய்கிறார் பிரகாஷ்ராஜ். நிச்சயம் முடிந்த பிறகு தற்செயலாக ஜெனிலியாவை சந்திக்கும் ரவி அவர் மீது காதல் கொள்கிறார். வாழ்வில் முதன் முறையாக அப்பாவின் பேச்சை மீற வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறார் ரவி. ஒருவழியாக தன் காதலை பிரகாஷ்ராஜிடம் சொல்லும் ரவிக்கு - ஒரு வாரம் அவளை நம் வீட்டில் வந்து தங்கச் சொல் - பிடித்திருந்தால் உங்கள் கல்யாணத்தை நானே நடத்துகிறேன் என்கிறார் பிரகாஷ்ராஜ். ரவியின் காதலியாக அந்த வீட்டிற்குள் நுழையும் ஜெனிலியா ரவியின் மனைவியானாரா? அல்லது ரவி மற்றும் பிரகாஷ்ராஜின் நண்பியானாரா என்பதே மீதிக்கதை.
ரவியின் நடிப்பில் நாளுக்கு நாள் மெருகேறுவது நன்றாகவே தெரிகிறது. வீட்டில் நண்பர்களைப் பற்றி அப்பா சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டும் ரவி, கல்லூரியில் நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் லூட்டி சூப்பர். குறிப்பாக ஜெனிலியாவிடம் தன்னைப் பற்றியும் தன் குடும்பம் பற்றியும் பேசும் இடங்களில் கவர்கிறார். தனக்கு நல்லது செய்வதாக நினைத்து சிறுவயது முதலே பிரகாஷ்ராஜ் தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளை மகன் மீது திணிப்பதை எடுத்துச் சொல்லும் போது ரவி பிரகாஷ்ராஜை நடிப்பில் மிஞ்சுகிறார்.
பொறுப்பான அதே நேரம் கண்டிப்பான அப்பாவாக பிரகாஷ்ராஜ் - நடிக்கவில்லை - கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். தான் எதை நினைத்து பெருமை பட்டுக்கொண்டிருந்தாரோ அதையே மகன் ரவி குறையாகக் கூறும்போது அவரது மாறும் முகபாவங்கள் சூப்பர்.
ஷாயாஜி ஷிண்டேவின் செல்லப்பெண்ணாக வரும் ஜெனிலியா குழந்தைத் தனமான நடிப்பால் கவர்கிறார். அவர் செய்யும் சில சேட்டைகளைப் பார்த்தால் லூசுத்தனமாக இருந்தாலும் பொம்மை போல இரண்டு பாடல்களுக்கு வந்து போகும் நாயகிகளை விட நன்றாகவே நடித்திருக்கிறார்.
ரவியின் அண்ணனாக அறிமுகமாகும் சடகோபன் ரமேஷ், அக்கா கெளசல்யா, அம்மா கீதா போன்றவர்கள் இயக்குனர் சொன்னதை செய்துள்ளார்கள். அதைப் போலவே ரவியின் நண்பர்களாக வரும் பிரேம்ஜி, சந்தானம், வீட்டு வேலைக்காரன் சத்யன் போன்றவர்களின் காமெடி ஓஹோ என்று இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு ஓக்கே. ஷாயாஜி ஷிண்டே கதாபாத்திரத்தை இன்னும் சற்று கவனத்துடன் அமைத்திருக்கலாம் இயக்குனர்.
கண்ணனின் ஒளிப்பதிவும் தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையும் படத்திற்கு பலம். மொத்தத்தில் சந்தோஷ் சுப்ரமணியம் ரீமேக் படமாக இருந்தாலும் ஜெயம், எம்.குமரன் வரிசையில் இயக்குனர் ராஜாவிற்கு மற்றொரு வெற்றிப்படமாக அமைந்துள்ளது.
|