இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரங்கள் எல்லாம் சூறாவளி வேகத்தில் சென்று தற்போது ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. ஒரு வழியாக தமிழக சட்டமன்றத் §தர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துவிட்டது. கிட்டத்தட்ட 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை சரியாகச் செய்துவிட்டார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
அரசியல் அரங்கில் இந்த இரண்டு மாத காலத்தில் தான் எத்தனை எதிர்பாராத நிகழ்வுகள்? எதிர்பாராத எத்தனை கட்சித்தாவல்கள் ? ஒரு கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர்கள் - உயிர் உள்ளவரை ஒரு கட்சியில் தான் இருப்பேன் என்று மேடையில் முழங்கியவர்கள் - தங்கள் தலைவரது உருவத்தை கையில் பச்சை குத்தியவர்கள் என்று பலதரப்பட்டவர் கள் தங்களது சுயலாபத்திற்காக கடைசி நிமிடத்தில் கட்சி மாறி நம்பியவர்களை நட்டாற்றில் விட்டுள்ளார்கள். இந்த தேர்தல் சமயத்தில் ஒவ்வொரு கட்சியும் அளித்த வாக்குறிதிகளை என்னவென்று சொல்வது.. இவற்றில் எத்தனை நிறைவேறும் - எத்தனை காற்றில் பறக்கவிடப்படும் தெரியாது.
என்னதான் தேர்தல் கமிஷன் நெறிமுறைகளை வகுத்து வைத்திருந்தாலும் - நெறிமுறைகளை மீறினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்தும் தமிழகத்தைப் பொறுத்த மட்டில் அனைத்துப் பெரிய கட்சிகளும் எக்கச்சக்கமாய் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டுள்ளன. ஒவ்வொரு பத்திரிக்கையும் ஒவ்வொரு விதமான கருத்துக் கணிப்புகளை நாளும் வெளியிட்டுவருகின்றன.
எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் இந்தத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததில் தமிழக மக்கள் ஒவ்வொருவரும் நிச்சயம் பெருமைபட்டுக்கொள்ளலாம். பெரிய அளவில் கலவரங்கள் ஏதும் ஏற்படாமல் இருந்ததற்குக் காரணமான அனைவரையும் நாம் பாராட்டவேண்டும். இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும். இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்று ஆளும் கட்சியாகவும் ஒன்று எதிர்கட்சியாகவும் சட்டமன்றத்தில் அமரும். யார் யாரைப் பழிவாங்க என்ன வழக்குகளைப் போடுவார்களோ தெரியாது. ஆனாலும் நாம் நம் ஜனநாயகக் கடமையை செவ்வனே செய்து முடித்துவிட்டோம்.
|