கில்லி கூட்டணி அப்படியே தொடர்கிறது என்று தயாரிப்பு தரப்பில் வெளியிடப்பட்ட விளம்பரங்களை எல்லாம் பார்த்துவிட்டு கில்லி நினைவோடு படம் பார்க்கப்போனால் மிஞ்சுவது ஏமாற்றமே!!
வேல் என்கிற வெற்றிவேலின்(விஜயின்)செல்லப் பெயர்தான் குருவி. கார் பந்தயத்தை ஹாபியாகக் கொண்டவர் விஜய். அப்பா மணிவண்ணனுக்கு 3 மனைவிகள். கடன் தொல்லை தாங்க முடியாமல் மணிவண்ணன் மாயமாக - கடன் கொடுத்தவர் விஜய் குடும்பம் தங்கியிருக்கும் வீட்டை சொந்தமாக்க முயற்சிக்கிறார். அப்போதுதான் தன் அப்பாவிற்கு மலேசியாவில் இருக்கும் ஒருவர் பணம் தராமல் டபாய்பதை தெரிந்து கொள்ளும் விஜய் மலேசியா போய் பணத்தை வாங்கி அப்பா பட்ட கடனை அடைக்க நினைக்கிறார்.
நண்பன் விவேக்குடன் மலேசியா செல்லும் விஜய் அங்கே சென்ற பிறகு தான் புரிந்து கொள்கிறார் தான் சந்திக்க வந்த ஆள் சுமன் ஒரு மலை விழுங்கி மகாதேவன் என்று. பணத்தைக் கேட்கும் போது அவருக்கும், சுமனுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. வரவேண்டிய பணத்தை வாங்காமல் போனால் நன்றாக இருக்காது என்று நினைக்கும் விஜய் சுமனிடம் உள்ள இரு வைரத்தை திருடிவிடுகிறார். விஜய்யின் வீர தீர பராக்கிரம செயல்களைப் பார்க்கும் சுமனின் தங்கைய¡ன த்ரிஷா விஜய் மீது காதல் கொள்கிறார்.
சென்னைக்கு வந்து சேர்கிறார்கள் விஜய் - த்ரிஷா - விவேக். இவர்களைத் தொடர்ந்து விட்ட வைரத்தைக் கைப்பற்றும் நோக்குடன் சுமனும் சென்னை வந்து சேர்கிறார். ஒரு கட்டத்தில் தன் அப்பா மணிவண்ணன் கடனுக்கு பயந்து ஓட வில்லை - அவரைக் கொத்தடிமையாக ஆந்திராவில் வைத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் விஜய் ஆந்திராவிற்கு செல்கிறார் அப்பாவை மீட்பதற்காக. அங்கு சென்றபிறகு தெரிகிறது ஆஷிஷ்வித்யார்த்தி மற்றும் சுமன் தான் மணிவண்ணனை கொத்தடிமையாக வைத்திருக்கிறார்கள் என்ற உண்மை. பிறகென்ன.. சண்டை சண்டை சண்டை தான். ஒரு வழியாக வில்லன்களை முறியடித்து அப்பாவுடன் வீட்டிற்கு வந்து சேர்கிறார்.
விஜய் வழக்கம் போல டான்ஸ் மற்றும் காமெடி காட்சிகளில் கலக்குகிறார். அஜித்துடன் விஜய் சமாதானமாகிவிட்டார் என்றெல்லாம் செய்திகள் வந்தாலும் வழக்கம் போல அஜித்தை இந்தப்படத்திலும் குத்துகிறார் விஜய் - லொட்டை காரை வைத்துக்கொண்டு ஜெயிப்பது எல்லாம் சினிமாவில் மட்டுமே முடியும் - நிஜ கார் ரேஸ் டிராக்கில் இந்த மாதிரி கார்களை உள்ளே விடக்கூட மாட்டார்கள் என்ற நிஜத்தை யாராவது அவருக்கு சொல்லியிருக்கலாம்.
மேலும் விஜய்யின் ஹீரோயிஸத்தை மட்டுமே நம்பி தரணி படத்தை இயக்கியுள்ளாரோ என்ற சந்தேகம் வருகிறது. கதையோடு கொஞ்சமும் ஒட்டாத அளவிற்கு கூடை கூடையாக ஹீரோயிசம். சினிமா மீடியாவே மிகைப்படுத்தப்பட்ட பேண்டசி உலகம் - ஆனாலும் இந்தப் படத்தில் தரணி காட்டியிருப்பது கிட்டத்தட்ட விட்டலாச்சாரியா பட மாயாஜாலம். உதாரணமாக 200 அடி உயர கட்டடத்திலிருந்து, சுமார் 200 மீட்டர் தூரத்திற்குப் பறந்து சென்று படு வேகமாக ஓடும் மெட்ரோ ரயிலை அநாயாசமாக பிடிக்கிறார் விஜய் - மின்னல் வேகத்தில் பாயும் காரிலிருந்து கட்டாகும் பிரேக் கேபிளை பற்களால் இழுத்து பிடித்து பேலன்ஸ் செய்கிறார் - பெரிய மரத்தை காலால் ஒரு உதை விட்டு தகர்க்கிறார் - ஒரு கட்டத்தில் வில்லன் சுமன் விஜய் நின்று கொண்டிருக்கும் லிப்டையே பூமிக்குள் தள்ளி கிட்டத்தட்ட புதைத்து விடுகிறார்.. ஆனால் லிப்டை ஒரு உதை விட்டு உடைத்துக் கொண்டு உடம்பில் ஒரு சிராய்ப்பு கூட இல்லாமல் ஹாயாக வெளியே வருகிறார் விஜய். ஹ¥ம்... என்னத்த சொல்ல..
நாயகனின் நிலையே இப்படி என்றால் நாயகி? விரட்டி விரட்டி விஜயைக் காதலிப்பதைத் தவிர வேறு ஒன்றுமே உருப்படியாக பண்ணவில்லை. அண்ணன் அடிபட்டு உயிருக்கு போராடும் போதும் அண்ணனை அடித்த விஜயைப் பார்த்து "இப்பவாது என்னை லவ் பண்ணரேன்னு சொல்லு.. " என்று கெஞ்சுகிறார்.
விவேக் விஜய்க்கு போட்டியாக அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்கிறார். பாதிக்கு மேல் அவரையும் காணும்.
மகனைப் பற்றி பெருமையாக 10 வரி பேசுவதைத் தவிர மணிவண்ணன் வேறு ஒன்றும் செய்யவில்லை. இவரது மனைவியாக வரும் பாடகி கலா ஓக்கே.
சுமன் மற்றும் ஆஷிஷ்வித்யார்தி இருவரும் வில்லத்தனம் செய்கிறோம் என்று காட்டு கத்தல் கத்துகிறார்கள்.. ஆஷிஷ் வித்யார்த்தி வில்லத்தனம் என்ற பெயரில் செய்யும் செயல்கள் அருவெறுப்பைத்தான் வரவழைக்கின்றன. சுமன் விஜயிடம் அடிவாங்கி நடமாட முடியாமல் வீல்சேரில் இருப்பவர் கடைசிக் காட்சிகளில் சக்கர நாற்காலியில் இருந்து ஜம்மென்று எழுந்து சண்டை போடுவது சுத்த அபத்தம்..
வித்யாசாகர் இசையில் பாடல்கள் ஓக்கே. கோபிநாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். மொத்தத்தில் இந்தப் படத்தில் தில், தூள், கில்லி எடுத்த தரணி எங்கே என்று தேடவேண்டியிருக்கிறது.
இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக அறிவிப்பை விரைவில் காணலாம்..
|