தாதா - அடியாள் - காதல் - மனம் திருந்துவது - பழிவாங்கல். தலைநகரத்தின் ஒன்லைன் கதை. கதை பழசு - ஏற்கனவே இந்த மாதிரி கதைகளை நிறைய பார்த்தாகிவிட்டது என்றாலும் அதை இயக்கியிருக்கும் விதத்தில் தான் சபாஷ் போட வைக்கிறார் இயக்குனர் சுராஜ்.
தாதா காசிம்பாயின் (ஜூடோரத்தினம்) ரைட் ஹேண்டாக இருப்பவர் ரைட்(சுந்தர்.சி) செய்வது கடத்தல், கொலை என சமூக விரோதச் செயல்கள் என்றாலும் அதிலும் கொஞ்சம் மனிதாபிமானம் பார்பவர். இவருடன் இணைந்து செயல்படுபவர்கள் போஸ் வெங்கட் உள்ளிட்ட சில நண்பர்கள். ஒருமுறை ஜூடோரத்தினத்தின் மகனுடன் ஏற்படும் கருத்து மோதலால் சுந்தர்.சியைக் கொல்ல ஜூடோரத்தினத்தின் மகன் முயற்சி செய்து அது தோல்வியில் முடிய, தன்னைக் கொல்ல ஆள் அனுப்பிய ஜூடோரத்தினத்தின் மகனைக் கொல்ல முயற்சி செய்கிறார் சுந்தர்.சி. இதை தடுக்க நினைக்கும் போஸ் வெங்கட்டின் கையாலேயே ஜூடோரத்தினத்தின் மகன் சாக, அவரை சுந்தர்.சியின் கண் முன்னேயே போட்டுத் தள்ளுகிறார் ஜூடோரத்தினம்.
தன் கண்முன் நடக்கும் நண்பனின் மரணத்தால் மனம் திருந்தும் சுந்தர்.சி தன் நண்பர்களுடன் பெட்டிக்கடை, சோடா தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்டவைகளை வைத்து பிழைப்பை நடத்த முடிவு செய்து அவ்வாறே வாழ ஆரம்பிக்கிறார். ரெளடி மனம் திருந்தினால் தங்கள் பிழைப்பு என்ன ஆவது என்று கேட்கும் ரகமான போலீஸ் அதிகாரி பிரகாஷ்ராஜ் சுந்தர்.சியை மீண்டும் ரெளடி வாழ்க்கைக்கு திரும்புமாறு கட்டாயப்படுத்துகிறார். மறுக்கும் சுந்தர்.சியை வழக்கு போட்டு உள்ளே தள்ளுகிறார். எங்கே சுந்தர்.சி வாயைத் திறந்தால் தாங்களும் மாட்டிக்கொள்வோமோ என்று நினைக்கும் அரசியல்வாதி டெல்லிகணேஷ¤ம், ஜூடோரத்தினமும் அவரை என்கவுண்டரில் போட்டுத் தள்ளுமாறு பிரகாஷ்ராஜிடம் கூறுகிறார்கள்.
இதற்கிடையே மிஸ்.சென்னை ஆகும் முயற்சியில் சென்னை வரும் ஜோதிர்மயி தன்னைத் துரத்திவந்த ரெளடிக் கும்பலிடமிருந்து தப்பிக்க சுந்தர்.சி வீட்டிற்கு வந்த தஞ்சமாகிறார். ஒருகட்டத்தில் சுந்தர்.சியிடம் மனதைக் கொடுக்கும் ஜோதிர்மயி அவரைத் திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். பிரகாஷ்ராஜ், ஜூடோரத்தினம் மற்றும் டெல்லிகணேஷின் பிடியில் சிக்கி சுந்தர்.சியின் கதை முடிந்ததா இல்லை தனது காதலி ஜோதிர்மயியுடன் அவர் புது வாழ்வை துவங்கினாரா என்பதே கிளைமாக்ஸ்.
நடிகரான இயக்குனர்களில் மற்ற அனைவரையும் விட தனது யதார்த்தமான நடிப்பால் நம் மனதில் உயர்ந்து நிற்கிறார் சுந்தர்.சி தனது டைரக்ஷனில் லண்டன் போன்ற பல காமெடி படங்களை எடுத்து மக்களைப் படுத்திய சுந்தர்.சி தனது நடிப்பில் தனக்கென எந்த ஒரு பந்தா இமேஜையும் ஏற்படுத்திக்கொள்ளாமல் இயக்குனர் சொன்னதை மட்டும் நடித்து சபாஷ் வாங்குகிறார். டூயட் காட்சிகளில் எல்லாம் தத்தக்கா பிதக்கா என்று ஆடி படுத்தாமல் தன்னால் என்ன முடியுமோ அதை மட்டும் செய்கிறார். தாதா கதை என்பதால் சண்டைக் காட்சிகளிலும் தூள் கிளப்புகிறார். ஒல்லிக்குச்சி ஹீரோக்கள் எல்லாம் பறந்து பறந்து பத்து பேரை அடிக்கும் இக்காலத்தில் தன் பர்ஸ்னாலிடிக்கு ஏற்றவாறு சண்டை போட்டு இமேஜைக் காப்பாற்றிக்கொள்கிறார்.
ஹீரோயின் ஜோதிர்மயிக்கு இது முதல்படம் என்றாலும் தனக்கு ஓரளவிற்கு நடிக்க வரும் என்பதை நிரூபித்திருக்கிறார். த்ரிஷாவைக் கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் சென்னைக்கு வரும் வடிவேலு ஒவ்வொரு கெட்டப்பாக மாறி அடிக்கும் லூட்டிகள் சூப்பர். அதிலும் நாய்சேகராக அவர் கலக்கும் காட்சிகள் கலகல ரகம். சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கிறார் கே.எஸ். ரவிக்குமார். பொறுப்பான போலீஸ் அதிகாரியாக வரும் அவர் திடீரென படத்தில் இருந்து காணாமல் போகிறார். அவருக்கு என்ன ஆனது என்பதை இயக்குனர் சொல்லியிருக்கலாம்.
மெயின் வில்லனாக ஜூடோரத்தினம். நடிப்பில் பிரமாதமாக ஒன்றும் இல்லை. அவரது மனைவியாக புவனேஸ்வரி - வில்லியாக வருவாரோ என்று நினைத்தால் சும்மா வந்து போகிறார். பொறுக்கி போலீசாக பிரகாஷ்ராஜ். நடிப்பில் பெரிதாக அசத்துவார் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றுகிறார்.
செல்வராஜின் ஒளிப்பதிவு அருமை. இமான் பேக்ரவுண்ட் மியூசிக் பிரமாதம் என்றாலும் பாடல்கள் ஓகே ரகம் தான். சண்டைக்காட்சிகளில் தளபதி திணேஷ் அசத்துகிறார். கதை ரொம்ப பழசு என்றாலும் அதை இயக்கியிருக்கும் விதத்தில் பாஸ் மார்க் வாங்குகிறார் இயக்குனர் சுராஜ். மொத்தத்தில் தலைநகரம் பார்ப்பவர்களை ஏமாற்றவில்லை.
|