உலகத்திலுள்ள எல்லா உயிர்களையும் காப்பவன் நாராயணன். அவன் கோகுலத்தில் வந்து பிறந்தபோது ராதை அவனுக்குத் தொண்டு செய்த பக்தை. அரங்கனின் அருள் அவளுக்கு அளவில்லாமல் இருந்தது. இதுவே மற்றவர்கள் அவள் மீது பொறாமை கொள்ளவும் செய்தது. இப்படிப் பொறாமைப் பட்டவர்களில் நாரதரும் ஒருவர்.
இதை நாராயணன் புரிந்துகொண்டார். ஒருநாள் அவர் துதி பாடிக்கொண்டிருந்த சமயம், தனது தலையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். " ஐய்யனே! தங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் இப்படிச் சிரமப்படுகிறீர்கள்?" என்று துடித்துப் போய்க் கேட்டார் நாரதர்.
"பக்தா! உன் தவிப்பு எனக்குப் புரிகிறது. என்னால் இந்தத் தலைவலியைத் தாங்க முடியவில்லை. இதற்கு ஒரே ஒரு மருந்துதான் உள்ளது. அது எனக்குக் கிடைக்காமல் திண்டாடுகிறேன்! " என்றார் பரந்தாமன்.
"அப்படியா? நான் மூன்று உலகங்களையும் பார்த்து வருகிறேன். என்னிடம் சொல்லக்கூடாதா? தங்களுக்குத் தேவையான மருந்து எங்கேயிருந்தாலும் நான் கொண்டுவருகிறேன்! என்றார் நாரதர்.
"இது மிகவும் எளிய மருந்து. என்னிடம் உண்மையான பக்தி கொண்ட ஒருவர் தனது கால்களைக் கழுவி, அந்தப் பாதத்தில் பட்ட நீரை எனக்குக் கொடுக்கவேண்டும். அதில் ஒருவாய் நான் அருந்தினால் போதும். என்னுடைய நோய் தீர்ந்துவிடும். நாரதா! நீ என்னிடம் அளவில்லாத பக்தி கொண்டவன். நீ எனக்கு அந்த உதவியைச் செய்யமுடியுமா? " என்று கேட்டார் பகவான்.
"அபச்சாரம்! அபச்சாரம்!! என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. என்னிடம் மறுபடியும் இந்த வார்த்தையைச் சொல்லாதீர்கள்! " என்று நாரதர் தன் இரு காதுகளையும் பொத்திக்கொண்டார்.
"அப்படியா! சரி நீர் வைகுந்தத்திலும், பிற லோகங்களிலும் செல்லும்போது, எனக்கு இப்படி உதவக்கூடியவர் யாராவது இருந்தால் அவர்களிடமிருந்து இந்த மருந்தைப் பெற்றுவாருங்கள். எனக்கு இது மிகவும் அவசரமாகத் தேவை! " என்று கூறித் தலையைப் பிடித்துக்கொண்டார்.
"இதோ உடனே புறப்படுகிறேன்! " என்று கிளம்பிப் போனார் நாரதர்.
வைகுந்தத்திலேயே மகாலட்சுமியை அணுகினார் நாரதர். தேவியிடம் பகவானின் விருப்பத்தைக் கூறினார். தேவிக்கு அசாத்திய கோபம் வந்துவிட்டது. " நாரதரே! என்ன வார்த்தைச் சொன்னீர்? என்னுடைய பாதத் துளியில் பட்ட நீரை நாராயணன் அருந்துவதா? நான் அப்புறம் பதிவிரதை என்று சொல்லிக்கொள்ள முடியுமா? "என்று கோபித்து அவரை வெளியே அனுப்பிவிட்டாள் மகாலட்சுமி. அதே போல் பூமாதேவியும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
நாரதர் தேவர்களையெல்லாம் அணுகினார். ஒன்றும் பயனில்லை. பிறகு பூமியில் உள்ள, அவருக்குத் தெரிந்த நாராயண பக்தர்கள் அனைவரிடமும் கேட்டுப்பார்த்தார். "எங்கள் பாதத்தில் பட்ட நீரை பகவான் அருந்துவதா? அதனால் எங்களுக்குப் பெரும் பாவம் வந்து சேருமே? அதை எங்களால் ஏற்க முடியாது. மனித்துவிடுங்கள்!" என்று எல்லோரும் ஒரு முகமாகச் சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
நாரதருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்போது அவருக்கு ராதையின் ஞாபகம் வந்தது. " அவளிடம் போய்க் கேட்போம். அவளும் மறுத்துவிட்டால் அதையும் நாராயணனிடம் சொல்லலாம். அவள்தான் சிறந்த பக்தை என்று பெருமை அடித்துக்கொண்டதெல்லாம் வெறும் கதையாகிவிடும். அவள் ஒப்புக்கொண்டாலோ பெரும் பாவத்திற்கு ஆளாவாள். அதற்குப் பிறகு பரந்தாமனிடம் எவ்வளவு பக்தி செலுத்தினாலும், அவளால் அந்தப் பாவச்சுமையிலிருந்து மீளமுடியாது! " என்று எண்ணிக்கொண்டே ராதையிடம் சென்றார்.
எதிர்பாராத விதமாகத் தன் முன்னால் வந்து நின்ற நாரதரைக் கண்டவுடன் பிரமித்துப் போனாள் ராதை. தரையில் விழுந்து அவரை வணங்கி உபசரித்தாள். அவர் அங்கு வந்த காரணத்தை விசாரித்தாள்.
"நாராயணன் தலைவலியினால் அவதிப் படுகிறார். அதற்கு எங்கு தேடியும் மருந்து கிடைக்கவில்லை! " என்றார் நாரதர். அதைக் கேட்டதும் பதறிப் போனாள் ராதை. " அப்படியா! அதற்கு என்ன மருந்து? அது எங்கே கிடைக்கும்? சொல்லுங்கள். நான் உடனே போய் எடுத்துக் கொண்டு வருகிறேன்! " என்று கூறி, அவருடைய கால்களைப் பிடித்துக் கொண்டாள்.
"ராதே! நான் என்ன சொன்னாலும் நீ செய்வாயா? பிறகு மறுக்கக் கூடாது!" என்று எச்சரித்தார் நாரதர்.
"பகவானுக்கு உபாதை என்றால் அது நீங்க நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். என் உயிரையும் கொடுப்பேன். நான் செய்யவேண்டியது என்ன? உடனே சொல்லுங்கள்!" என்று பதறினாள் ராதை.
"உன்னுடையப் பாதங்களைக் கழுவி அந்த நீரை என்னிடம் கொடுக்க வேண்டும். அதில் ஒரு வாய் அருந்தினால் பரந்தாமனின் தலைவலி தீர்ந்துவிடும். ஆனால் நன்றாக யோசித்துச் செய். இதன் மூலம் நீ பெரும் பாவத்திற்கு ஆளாக நேரிடும்." என்று எச்சரிக்கைச் செய்தார் நாரதர்.
"சுவாமி! என்ன சொல்லுகிறீர்? பகவான் வலியால் துடித்துக் கொண்டிருக்கும்போது, நான் என்னுடைய பாவத்தைப் பற்றியா எண்ணிக்கொண்டிருப்பது? இதோ என்னுடைய பாதங்களைக் கழுவித் தருகிறேன். எடுத்துச் செல்லுங்கள். இதனால் நான் நரகத்திற்குப் போனாலும் பரவாயில்லை! " என்றாள் ராதை.
ராதை கழுவிக் கொடுத்த நீரைப் பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு வைகுந்தத்திற்குத் திரும்பி வந்தார் நாரதர். அவருடைய வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த பரந்தாமன் அந்தப் பாத்திரத்தை வாங்கி, அதிலிருந்த நீரை அருந்தினார்.
தலைவலி நீங்கியவராய்ப் புன்னகை செய்தார். பரந்தாமன் தன்னுடைய மனதைப் புரிந்துகொண்டு ஆடிய நாடகமே இது என்பதை நாரதர் உணர்ந்துகொண்டார். "ஐய்யனே! ராதையைக் காட்டிலும் சிறந்த பக்தை வேறு யாருமில்லை. நான் தவறாக எண்ணியதற்கு தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும்! என்று கூறி நாராயணனை வணங்கினார்.
தனக்குத் தீங்கு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று எண்ணிக்கொண்டு பிறருக்கு நன்மை செய்பவனே ஆண்டவனுக்குப் பிரியமானவனாகிறான்.
|