செய்வது சாராயம் காய்ச்சும் தொழிலாக இருந்தாலும் அதையே நேர்மையாக செய்துவருபவர் கரண். கரணின் நியாயமான அணுகுமுறையால் இவர் வியாபாரம் மட்டும் செழிக்க - பல காலமாக சாராயம் காய்ச்சும் காதல் தண்டபாணி உள்ளிட்ட ஆட்களின் வியாபாரம் படுபாதாளத்திற்கு சென்றுவிடுகிறது. இதனால் இவர்களுக்குள் தொழில் போட்டி அதிகரிக்கிறது.
இதற்கிடையே போதை எதிர்ப்பு பிரசாரத்திற்காக கரண் வசிக்கும் கிராமத்திற்கு வரும் விதிஷா சாராயம் குடிப்பதால் உண்டாகும் தீமைகளைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறார். கரணைச் சாராயம் காய்ச்சுவதை நிறுத்துமாறு விதிஷா பலமுறை கேட்டும் அதை செய்ய கரண் மறுக்கிறார். இவருக்கும் இடையே உண்டாகும் மோதலின் விளைவாக கரண் சிறைக்குச் செல்ல நேரிடுகிறது. ஒருவழியாக ஜெயிலிலிருந்து வெளியே வரும் கரண் விதிஷாவை பழிதீர்க்க அலைகிறார். ஆனால் கரணை எதிர்த்ததைப் போலவே அலெக்ஸையும் எதிர்க்கும் விதிஷா அலெக்ஸை ஜெயிலுக்கு அனுப்பும் முன்னரே அலெக்ஸ் விதிஷாவை ஜெயிலுக்குள் அடைக்கிறார்.
யாரைப் பழிதீர்க்கப் போனோமோ அவரையே காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் மாட்டும் கரண் விதிஷாவை எவ்வாறு வெளியே கொண்டுவருகிறார்? இவர்கள் இருவருக்கும் இடையே இருப்பது காதலா - பகையா? கரணை உண்மையில் ஜெயிலுக்குள் தள்ளியது விதிஷா தந்த புகாரா? இல்லை கரணின் எதிரிகளின் வேலையா போன்ற கேள்விகளுக்கான விடை கிளைமாக்ஸில் கிடைக்கிறது.
கள்ளச்சாராயம் காய்ச்சும் காத்தவராயனாக வரும் கரண் செய்யும் ரவுசுகள் அருமை - அதிலும் குடித்துவிட்டு போதையோடு தள்ளாடிக்கொண்டுவந்து டிராபிக் ஜாம் செய்வது சூப்பர். காமெடிக் காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் நன்றாகத்தான் இருக்கிறார். ஆனாலும் அந்த லோக்கல் பாஷை பேசும் போது மட்டும் இடிக்கிறது.
புதுமுகம் விதிஷாவுக்கு முதல் படத்திலேயே நடிக்க நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கிறார் இயக்குனர். விதிஷாவும் சொன்னதைச் சரியாக செய்துள்ளார். "நீ சாராயம் காய்ச்சுறதை விட்டுட்டா நான் உன்னை கட்டிக்கிறேன்" என்று கரணிடம் அவர் சொல்வது இரண்டு டூயட்டுகளுக்கு பயன்பட்டிருக்கிறது. கவர்சியில் விதிஷா வைத்த குறைகளை நிவர்த்தி செய்கிறார் சுந்தரா டிராவல்ஸ் ராதா. கரணை ஒருதலையாக காதலிக்கிற வேடம். ஓவர் கவர்சியில் திணற அடிக்கிறார்.
செத்துப்போன பாட்டியின் இன்ஷ¥ரன்ஸ் பணம் 3 லட்சத்தை தன் அடிபொடிகளின் பேச்சைக்கேட்டு கந்து வட்டிக்கு விட்டு கடனைத் திருப்பிக் கேட்கும் போதெல்லாம் தர்ம அடி வாங்குகிறார் வடிவேலு. அதிலும், அவரை அடிக்க அவரிடமே பணம் வாங்குகிற டெக்னிக் பலே காமெடி.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் ரொம்ப சுமார். கார்த்திக்ராஜாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். நாட்டில் கள்ளச்சாராயச் சாவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் சாராயத்தின் தீமைகளைப் பற்றி எடுத்துச் சொல்ல முனைந்திருக்கும் படம் காத்தவராயன் - அதற்காக இயக்குனர் துரைக்கு பாராட்டுகள். ஆனால் சொல்ல வேண்டிய விஷயத்தைப் பற்றி அதிகம் சொல்லாமல் வழக்கமான நாயகன் - நாயகி முட்டல், மோதல், காதல், எதிரிகள், சண்டை என்று கமர்ஷியலாக போவதால் வழக்கமான மசாலாப் படம் பார்க்கும் உணர்வு தான் மேலோங்குகிறது.
|