தன் மேல் அக்கறை காட்டும் காதலனை காதலி தன் தாயாக பாவித்து காதலிக்கிறாள். முதன் முறையாக காதலை தாய்மை உணர்வோடு தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் புதுமுக இயக்குனர் மூர்த்தி.
மதுரையில் சைக்கிள் ஸ்டாண்ட் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருபவர் கரண். சின்ன வயசிலேயே அம்மாவை இழந்து டாக்டருக்கு படிக்கும் மீனாட்சி. சாதாரண குத்தகைதாரர் டாக்டருக்கு கணவனாக முடியுமா? இந்த கதையில் முடிகிறது. மாலை நேரத்தில் ரெக்கார்டு டான்ஸ் என்ன, நண்பர்கள் பட்டாளம் என்ன.. என்று கலகலப்பான பேர்வழியாக ஊரை சுற்றி வருகிறார். இவரது சைக்கிள் ஸ்டாண்டில் சைக்கிளை விடுபவர் மருத்துவ கல்லூரி மாணவியான மீனாட்சி. தினமும் சந்திப்பதால் நண்பர்களாகிறார்கள் இருவரும்.
தவறு செய்தால் செல்லக் குட்டு வைப்பது, வேண்டிக்கொண்டு விபூதி வைப்பது என கரணின் ஒவ்வொரு செயல்பாடுகளும் இறந்துபோன அம்மாவின் செயல்பாடுகளுடன் ஒத்துப்போக, கரணிடம் தன் தாயை - தாயின் பரிவைக் காண்கிறார் மீனாட்சி. தன் நிலையைக் கரணிடம் கூறி தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கிறார். மீனாட்சியின் மீது கரணுக்கும் காதல் ஏற்படுகிறது. ஆனால் காதல் எங்கே அவளின் படிப்பிற்கு குறுக்கே வந்து விடுமோ என்று நினைத்து முதலில் நன்கு படித்து, நல்ல டாக்டராக வரவேண்டும்.. அதுதான் முக்கியம். மற்றதெல்லாம் அப்புறம்தான் என அறிவுரை கூறுகிறார்.
மீனாட்சியின் குடும்பத்திற்கு இக்காதல் விவகாரம் தெரிய வர அவர்கள் மீனாட்சியின் படிப்பை நிறுத்த முயல்கிறார்கள். இதைத் தெரிந்து கொள்ளும் கரண் மீனாட்சியின் படிப்பை நிறுத்த வேண்டாம் என்று மீனாட்சியின் உறவினர்களிடம் கெஞ்சுகிறார். படிப்பை அவள் தொடர வேண்டுமென்றால் உன் காதலை நீ மறக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார்கள் மீனாட்சியின் உறவினர்கள். காதலியின் படிப்பிற்காக அதற்கு உடன்படுகிறார் கரண்.
ஒருகட்டத்தில் உறவினர்களின் கொடுமையை பொறுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார் மீனாட்சி. கரண் - மீனாட்சி காதல் என்ன ஆனது? மீனாட்சி டாக்டரானாரா என்பதுதான் கிளைமாக்ஸ்.
அட்டகாசமான பாடி லாங்குவேஜுடன், திறமையான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து விடுகிறார் கரண். கருப்பசாமியாகவே மாறி நடித்துள்ளார். நடன குழுவில் ரஜினி வேஷம் போட்டு ஸ்டைல் காட்டுவதென்ன, மனதில் வண்டி வண்டியாக மீனாட்சியின் மீது ஆசை இருந்தாலும் எங்கே வெளியில் சொன்னால் காதலியின் படிப்பு கெட்டுவிடுமோ என்று நினைத்து மனதிற்குள்ளேயே மருகுவதென்ன, காதலியின் படிப்புக்காக காதலை தியாகம் செய்துவிட்டு புலம்பவதென்ன.. தன் பண்பட்ட நடிப்பில் அனைவரையும் கவர்கிறார் கரண். மதுரை ஸ்லாங்கும் சரளமாக வருகிறது..
அறிமுகம் மீனாட்சி அறிமுகம் என்பது தெரியாத அளவிற்கு தன் அற்புதமான நடிப்பால் கவர்கிறார். கரணில் செயல்களில் அம்மாவை காணும் காட்சிகளிலும் தன் காதலை ஏற்றுக்கொள்ளுமாறு கரணிடம் கெஞ்சும் போதும் தனக்கு நன்றாக நடிக்க வரும் என்பதை நிரூபிக்கிறார்.
வடிவேலு படத்தின் பெரும் பலம். அடுத்தவரை ஏமாற்றி பிழைப்பை நடத்தும் படித்துரை பாண்டியாக வரும் வடிவேலு மீண்டும் மீண்டும் சிரிக்க வைக்கிறார். குறிப்பாக அரிசிக்கடைக்காரரை ஏமாற்றி தராசு - எடைக்கல்லை திருடும் காட்சி சூப்பர். கரணின் நண்பர்களாக வரும் கிட்டு இயல்பான நடிப்பால் அசத்துகிறார்.
தீனாவின் இசையில் பாடல்கள் ஓக்கே. ஸ்ரீதரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். புதிய கோணத்தில் தன்னுடைய நேர்த்தியான இயக்கத்தில் கதையை படமாக்கி - படத்தில் நடிக்க நாயகன் நாயகி இருவருக்கும் சம வாய்ப்பு வழங்கியுள்ள அறிமுக இயக்குனர் மூர்த்திக்கு பாராட்டுகள்.
|