ஜூன் 10 2004
தராசு
பெண்ணோவியம்
உங்க...சில புதிர்கள்
மேட்ச் பிக்சிங்
பருந்துப் பார்வை
க. கண்டுக்கொண்டேன்
முத்தொள்ளாயிரம்
என்னை எழுதியவர்கள்
சுய சாசனம்
களம்
கோடிட்ட இடங்கள்
காந்தீய விழுமியங்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  முத்தொள்ளாயிரம் : ஊடல் கொண்ட பெண்கள்
  - என். சொக்கன்
  | Printable version |

  பாடல் 17

  சென்ற பாடலின் தொடர்ச்சியைப்போல, இந்தப் பாடல் அமைந்திருக்கிறது !

  இந்தப் பாடலில் வருகிற பெண்ணும், சேரனின்மேல் தீவீரமான காதல் கொண்ட ஒருத்திதான் ! நீண்ட, எதிரிகளுக்குக் கொடுமை செய்யும் வேலை உடைய அவனைக் காணத் துடிக்கிறாள் இந்தக் காதலி !

  ஆகவே, தேர்ந்தெடுத்த ஆபரணங்களையும், தங்க நகைகளையும், மார்பில் அசைந்தாடும் மாலையையும் அணிந்த அந்தச் சேரன் கோதையைப் பார்ப்பதற்காக, இவள் தன் நெஞ்சையே தூதாக அனுப்புகிறாள்.

  ஆனால், அவனைத் தேடிச் சென்ற நெஞ்சு, அவளிடம் திரும்பவில்லை. ஏன் ? அவளுக்குப் புரியவில்லை !

  'குளிர் வாட்டும் மார்கழி மாதம், ஊரெங்கும் பனி பெய்துகொண்டிருக்கிறது - இந்த நிலைமையில், என் காதலன் சேரன் கோதையைக் காணச் சென்ற என் நெஞ்சம், அங்கே எப்படிப் பாடுபடுகிறதோ, தெரியவில்லையே !', என்று புலம்பித் தவிக்கிறாள் அவள் !

  கடைசியில், அவளே ஒரு முடிவுக்கு வருகிறாள், 'சேரனைப் பார்க்காமல், அங்கிருந்து திரும்புவதில்லை என்கிற உறுதியோடு, குளிர் தாங்காமல், தன் கைகளையே போர்வையாய்ப் போர்த்திக்கொண்டு, அவனுடைய அரண்மனை வாசலில் என் நெஞ்சம் பரிதவித்து நிற்கிறது !', என்கிறாள் அவள் !

  காதலியையும், அவள் நெஞ்சத்தையும் இப்படி இருவேறு பாத்திரங்களாய்ப் பிரித்துச் சொல்வதன்மூலம், காதலியின் உடல் இங்கே இருந்தாலும், உள்ளம் அவன்பின்னே சென்றுவிட்டது என்னும் கருத்தை, அழகாகவும், அழுத்தமாகவும் வலியுறுத்துகிறது இந்தப் பாடல் !

  O

  கடும்பனித் திங்கள்தன் கைபோர்வை ஆக,
  நெடுங்கடை நின்றதுகொல் தோழி நெடுஞ்சினவேல்
  ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
  காணிய சென்றஎன் நெஞ்சு.

  (திங்கள் - மாதம்
  நெடுங்கடை - உயரமான கடைவாசல்
  நெடுஞ்சினவேல் - கொடுமையான, நீண்ட வேல்
  ஆய்மணி - தேர்ந்தெடுத்த மணிகள்
  பைம்பூண் - தங்க ஆபரணம்
  அலங்கு - அசையும்
  தார் - மாலை)


  பாடல் 18


  ஊடல் கொண்ட பெண்கள், இந்த உலகத்தின் மிகத் தீவீரமான சர்வாதிகாரிகளாய்த் தெரிகிறார்கள்.

  'அவன் வரட்டும், பார்த்துக்கொள்கிறேன் !', என்று (செல்லக்) கோபத்தோடு ஒரு பெண் சொல்லும்போது, அந்த 'அவன்', மன்னாதிமன்னனாகவே இருந்தாலும், அவளிடம் மாட்டிக்கொண்டுவிட்டான் என்று புரிகிறது.

  காதலியின் இந்தக் கோபத்தை, அதிகாரத்தால் தணிக்கமுடியாது, காரணங்கள் சொல்வதுகூட முக்கியமில்லை, 'உன் கோபம் நியாயமானதுதான் !', என்று மனதார ஒப்புக்கொண்டால்தான், அவளாக மனமிரங்கி, மன்னிக்கிற சாத்தியங்கள் உண்டு !

  சில பெண்களுக்கு, அதுவும் போதாது, கெஞ்சிக் கதறவேண்டியிருக்கலாம், நூறு முறை மன்னிப்புக் கேட்கவேண்டியிருக்கலாம், மல்லிகைப் பூவோ, தெருமுனைக் கடை அல்வாவோ, அல்லது ஒரு ஈர முத்தமோ தேவைப்படலாம் !

  இத்தனைக்குப்பிறகும், மன்னிப்பதும், தொடர்ந்து ஊடியிருப்பதும் அவள் இஷ்டம்தான் !

  ஆனால், இத்தனை அவஸ்தையிலும் ஒரு சுகம் இருக்கிறது. இந்த பொய்க்கோபமும், திட்டல்களும், பொய்யான கெஞ்சல்களும், மன்னிப்புகளும், இவை எல்லாமே, காதல் வாழ்க்கையின் சுவாரஸ்யமான பகுதிகள் ! 'ஊடுதல் காமத்திற்கின்பம் !', என்று சும்மாவா சொன்னார் வள்ளுவர் ?

  இந்தப் பாடலில் சேரனின் காதலி ஒருத்திக்கு, அவனோடு ஏதோ ஊடல், 'இன்றைக்கு அந்தக் குடநாட்டுத் தலைவன், வஞ்சிக் கோமான் வரட்டும் !', என்று எல்லோருக்கும் கேட்கும்படி கோபமாய்க் கத்தினாள் அவள் !

  சுற்றியிருந்த தோழிகள் அனைவரும், அவளது கோபத்தைப் பார்த்து பயந்துவிட்டார்கள், 'நம் மன்னர் என்ன தவறாகச் செய்துவிட்டார் ? அவர் அப்படியெல்லாம் தப்புச்செய்கிற ஆள் இல்லையே ? விஷயம் என்னவானாலும், இந்தப் பெண் அவரை எப்படிப் பாடுபடுத்தப்போகிறாளோ !', என்றெல்லாம் நினைத்திருந்தார்கள் அவர்கள்.

  சிறிது நேரத்துக்குப்பின், சேரன் வந்தான். அவனைப் பார்த்த மறுவிநாடி, அவளுடைய கோபமெல்லாம் காணாமல்போய்விட்டது ! ஓடிச் சென்று, அவனை அணைத்துக்கொண்டு, 'ஏன் தாமதம் ?', என்று செல்லம் கொஞ்சினாள் அவள் !

  இதைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களெல்லாம் ஆச்சரியத்தில் திகைத்தார்கள், 'சற்றுமுன் கோபத்தின் உச்சத்திலிருந்த பெண்தானா இவள் ? காதலனைப் பார்த்ததும், சட்டென்று மாறிவிட்டாளே !', என்று வியந்தார்கள் !

  நாம் என்ன சொல்வது ? சேரனைப்போல் சிலருக்கு, அப்படியொரு அதிர்ஷ்டம் !

  O

  வருக குடநாடன் வஞ்சிக்கோ மான்என்(று)
  அருகலர் எல்லாம் அறிய, ஒருகலாம்
  உண்டாய் இருக்க,அவ் ஒண்தொடியாள் மற்றவனைக்
  கண்டாள்; ஒழிந்தாள் கலாம்.

  (குடநாடன் - குடநாட்டுத் தலைவன்
  கோமான் - தலைவன்
  அருகலர் - பக்கத்தில் உள்ளவர்கள்
  கலாம் - கோபம் / மாறுபாடு
  ஒண்தொடியாள் - ஒளி வீசும் தோள் வளையல்களை அணிந்தவள்)

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |