|
சூப்பர் சிங்கர் யார் என்று அறிவித்துவிட்டார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஒரு பாடல், ஏழு லட்சம் மதிப்புள்ள கார் என்று அஜீஸ் முதலில் வந்ததற்கான பரிசுகள் குவிகின்றன.
திறமை அடிப்படையில் ரவி, ரேணுவுக்கு அடுத்த வரிசையில்தான் அஜீஸ் இடம் பெறுவார். ஆனால் அஜீஸிடம் உள்ள ஒரே பலம் - கன்ஸிஸ்டன்ஸி. கெளதம் கம்பீர்போல எல்லா சுற்றுகளிலும் தொடர்ந்து நன்றாக பாடி வந்தார். அதுவும் இறுதிப்போட்டியில் அஜீஸின் திறமை பலமடங்கு அதிகரித்தது. அதேசமயம் ரவியின் திறமையை யாரும் குறைத்து மதிப்பிடமுடியாது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குள் பார்வையாளர்களை உள்ளே நுழைத்த பெருமை ரவிக்கு உண்டு. ஒரு பையன் என்னமா பாடறான் என்று ஆரம்பத்தில் ரவியைப் பற்றி மட்டும்தான் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள். சூப்பர் சிங்கர் குழாமில் பன்முகத்தன்மை கொண்ட ஒரே பாடகரும் அவர்தான். வேட்டையாடு விளையாடு ராப் பாடலை ரவி பாடியது இன்னமும் ஞாபகத்தில் உள்ளது. ஷ்ரேயா கோஷல் குரல் பாணியில் பாடும் ரேணுவுக்கு நிச்சயம் தமிழ் சினிமாவில் பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்கிற மாதிரியான குரல். ரேணு பாடிய இந்தப் பூவிலும் வாசமுண்டு பாடலை நான் டவுன்லோட் செய்து வைத்திருக்கிறேன். அடிக்கடி கேட்பதுண்டு (இதுபோல ’பாடும் ஆபிஸில்’ திவ்யா பாடிய இசையில் தொடங்குதம்மா, அனகாவின் மலர்களே மலர்களே எல்லாம் சினிமா பாடல்போல அடிக்கடி கேட்கும் பாடல்கள்).
சிலபேர் என் வாயில் விழுந்த அடுத்த நொடிமுதல் பிரமாதமாக மாறிவிடுவார்கள். ராகினிஸ்ரீயை டார் டாராகக் கிழித்து ஒரு கட்டுரை எழுதினேன். அடுத்த சில வாரங்களில் நடுவர்களின் பாராட்டுகளை வாங்கிக்கொண்டே இருந்தார் ராகினிஸ்ரீ. நேகா பாசின்போல மேற்கத்திய பாணியிலான பாடல்களுக்கு அழைக்கப்படலாம். அதற்கு முன்னால் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
பாடலைத் தாண்டி விஜய் டிவி இதுபோன்ற போட்டியாளர்களிடம் (சத்தமில்லாமல்) ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது. தோற்றப்பொலிவு. ரேணுவும் ராகினிஸ்ரீயும் முதல் சுற்றில் எப்படிக் காட்சியளித்தார்கள், போகப்போக எப்படியெல்லாம் தேவதைபோல அலங்காரம் செய்யப்பட்டார்கள் என்பதைத் தொடர்ந்து நாமும் பார்த்துத்தானே வந்தோம்.
இது ஒன்றும் அப்பழுக்கற்ற நிகழ்ச்சியல்ல. ஆனால் தமிழ் சேனல்களில் இடைவிடாது ஒளிபரப்பாகும் மிகமோசமான சீரியல்களுக்கு நடுவே சில திறமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிய விதத்தில் இது ஓர் ஆரோக்கியமான, வரவேற்கப்படவேண்டிய நிகழ்ச்சி.
|